Monday, November 2, 2015

அணிகள்

இன்றைய வெண்முரசில் பதிந்திருந்த மணிகள்:
   ஒரு பெரிய அணிகலன் ஒன்று இருக்கிறது. அது  கழுத்து மார்பு வயிறு என அனைத்தின் மேலும் பரவி நிற்கும் ஒன்று.  தங்கத்தின் ஊடே வித விதமாய் சுடர் விடும் பல வகை மணிக்கற்களை கொண்டிருக்கிறது. மிகவும் அழகாக இருக்கிறது. இருந்தாலும் அதில் என்ன ஒரு குறை என்றால் நாம் ஒவ்வொரு தனிப்பட்ட மணியின் அமைப்பும் அழகும் அது கொள்ளும் ஒளியும் நிறமும் முழுமையாக உணராமல் தவறவிடுகிறோம்.  வெண்முரசு என்ற பெரிதிலும் பெரிதான ஆபாரணம். அந்தக் கதை பல்வேறு மணிகளால் நிறைக்கப்பட்டுள்ளது. ஆனால் கதையின் சுவாரஸ்யத்தில் அந்த மணிகளின் தனிப்பட்ட அழகை தவற விட்டுவிடுகிறோம். அவை பிணைக்கப்பட்டிருப்பது ஒரு அழகு என்றால் அது ஒவ்வொன்றுகும் தன்னளவில் ஒரு ழுமை அழகல்லவா?  இன்றைய பகுதியை பிரித்து ஒவ்வொரு மணியின் அழகை தனித்தனியாக பார்க்கமுயல்கிறேன். சொல்லாமல் விடப்பட்டிருக்கும் வரிகள் அழகில் குறைந்தவை என்பதில்லை. அவை மணிகளை இணைக்கும் தங்கச் சரடுகள். இந்த மணிகளைவிட ஒரு வகையில் அணிகலனுக்கு முக்கியமானவை. ஆகவே அந்த விடுபட்ட வரிகளை நான் சற்றும் குறைவாக நினைக்கவில்லை என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
      கதையின் பின்னலிலிருந்து பிரிக்கப்பட்ட மணிகள் எப்படி தனித்து ஒளிகொண்டு பிரகாசிப்பவையாக உள்ளன எனப் பாருங்கள்.

புவியை ஐம்புலன்களில் ஐந்து விதமாக உணர்ந்தாலும் அறிவது ஒரு புவியை மட்டும் அல்லவா?
விழியில்லாதபோது ஓசைகளாக உலகு தன்னை விரித்துக்காட்டுகிறது. ஓசைகளுமில்லாதபோது மணங்கள். எவற்றிலிருந்தும் எழும் புவி ஒன்றே.

நெருங்கிய தோழமையின் பிரிவில் காணும் தனிமை:
என்னைச்சூழ்ந்து எழும் காற்றின் பாடல். தனிமையில் மட்டுமே பொருள்கொண்டதாக ஆகிறது அது. தனியர்களை மட்டும் தொட்டுத்தழுவும் காற்றுகள் இவ்வெளியில் உறைந்துள்ளன.

தனிமை. தனிமை தாளாமல் இங்கு வந்தேன். இங்கு நான் அவனை தோள்தழுவிக்கொள்ளமுடியும். என் தனிமையை கலைப்பவன் அவன் ஒருவனே. ஆனால் இன்று இங்கே நின்றிருக்கையில் என் தனிமையின் தேன்துளியை தக்கவைக்கவே என் அகம் விழைகிறது. அவனை நான் ஏன் அத்தனை நாடுகிறேன்? பசித்தவன் அன்னையை என, நோயுற்றவன் மருத்துவனை என, அஞ்சுபவன் காவலனை என, இருளில் அலைபவன் சுடரை என. ஆனால் என் ஆணவம் அவனைவிட்டு விலகியோடச் சொல்கிறது. ஓடி ஓடி அவனிடம் மீள்கிறேன்.
உணவுப்பொருளின் சுவை ஒன்று இருக்கிறது என்றால், அப்பொருளின் இருப்பே  இன்னொரு சுவையாக இருக்கிறது என உணர்த்திடும் வரிகள்:
பூனை எலியை கால் உடைத்து தன் முன் போட்டுக்கொண்டு நகைக்கும் விழிகளுடன் அமர்ந்து நோக்கிக்கொண்டிருக்கிறது. ஓடு என்கிறது. இழுத்து இழுத்து எல்லைகடக்கையில் மெல்லத் தட்டி உள்ளே வீழ்த்துகிறது. அதன் நாக்கில் சுவைநீர் ஊறுகிறது. உண்பதற்கு முந்தைய ஆடலில் அது அச்சுவையை கொண்டாடுகிறது.
ஆயிரம் தத்துவங்கள் சொன்னாலும் வணிகன் வணிகன்தான் அல்லவா? :-)
“உங்கள் புன்னகை புரிகிறது வில்லவரே. அவர் முதலும் முடிவுமாக வணிகர். அருகநெறியை கற்றறிந்திருக்கிறார். செல்லுமிடமெங்கும் அதைப்பரப்ப முயல்கிறார். நெறிகளில் வணிகர்களுக்கு பொருள்செய்ய உதவுவது அருகமே என அவர் அறிந்திருக்கிறார்.”
ஒரு நகரம் புராண நகரமாக உருமாற்றும் மனிதர்கள்:
“இந்நகரைப்பற்றி பாரதவர்ஷம் முழுக்க வணிகர்கள் உருவாக்கியிருக்கும் கதைகளை இவர்கள் அறிந்தால் திகைத்துப்போவார்கள். அதன்பின் இம்மண்ணில் கால்வைக்கக் கூசி திசையாடையர்களைப்போல உறிகட்டி அமரத்தொடங்கிவிடுவார்கள்” என்றான் சபரன்.
காண்டீபத்தில் எழும் காந்தீய உலகம்காந்தீய உலகின் தேசிய மொழி கருணை அல்லவா?
"நூறாயிரம் மொழிகளால் பிரிக்கப்பட்டுள்ளன இக்குலங்கள். அனைவருக்கும் விளங்கும் ஒரு மொழி உள்ளது. கருணை எனும் மொழி. பசித்தவனுக்கு உணவாக, பிணியாளனுக்கு மருந்தாக, அஞ்சுபவனுக்கு அடைக்கலமாக, தனித்தவனுக்கு துணையாக, அறியாதவனுக்கு கல்வியாக அது அவனை சென்றணைகிறது. அந்த மொழி புரியாத மானுடர் எவருமில்லை.”
   “மத்தகம் தாழ்த்தும் மதகரிகள் வணங்கும் மொழி அது. அம்மொழியால் ஒவ்வொரு கணமும் முடிச்சிடப்பட்டு கட்டி எழுப்பப்படுகிறது பாரதவர்ஷம் எனும் இப்பெருங்கம்பளம்” என்றார் சப்தமர். “வாள்கள் பொருளிழந்து போகும் ஒரு காலம் வரும். குருதி என்பது வியர்வையென்றும் கருணையின் விழிநீர் என்றும் மட்டுமே வெளிப்படும் ஒரு காலம்."

ஆம் ஒரு இரையை எப்பாகத்தையும் விலக்கி வைக்காமல் முழுதும் உண்பது ஒரு மலைப்பாம்பு அதற்கு இரையாவது ஒரு சிறப்புதான் போலும்.
 "மூச்சு சீற நாபறக்க இரையை தழுவி அணைக்கிறது மலைப்பாம்பு. அதற்கிணையான பெருங்காதல் பிறிதில்லை."
 
நம் சமயப்புலவர்கள் எழுதும் மணிப்பிரவாள நடைகொண்ட மொழியின் இயல்பு. உண்மையில் எந்த எளிய கருத்தையும் பெரிய தத்துவமாக காட்டும் வல்லமை கொண்டது இந்த நடை.
பெரிதும் சிறிதுமென உருளைப்பாறைகளை சிட்டுக்குருவிபோல தாவிக் கடந்து செல்லும்போது அர்ஜுனன் செம்மொழியும் தொல்மொழியும் கலந்த சொற்கள் சேர்த்து அமைக்கப்பட்ட சொற்றொடர்களால் ஆன நூலொன்றில் விழியோட்டிச் செல்வது போல் உணர்ந்தான். மணிமிடைபவள மொழியை வாசிக்கையில் புதிய சொற்றொடர் பழைய சொற்றொடரை முற்றிலும் மறக்கச்செய்துவிடும். அத்தனை சொற்றொடர்களையும் கடந்துவந்துவிட்டோம் என்னும் தன்மகிழ்வு மட்டிலுமே எஞ்சியிருக்கும்.
கற்ற அனைத்தையும் களைத்துப்போட்டு விளையாடும் குறும்பு: ஒருவனின் தத்துவம் இன்னொருவனின் நகைச்சுவையாகிறது.  இரண்டுமே பொருள்கொண்டது அல்லவா?
"“ஆம், ஆனால் என் கையில் பொருள் இல்லை. ஆகவே கொடைசெய்வதில்லை. ஆகையால் கொடையளிக்கும் ஆணவத்தை பெருங்கருணை என விளக்கும் தத்துவங்கள் எனக்குத் தேவையாகவில்லை” என்றபின் திரும்பி செல்லப்போன சபரன் நின்று புன்னகையுடன் “இன்னும் சற்றுநாளில் என் மடிச்சீலையும் நிறைந்து குலுங்கும். அப்போது நானும் ஐந்தவித்து எட்டைத் துறந்து முழுவெறுமையில் நிற்பதன் மாண்பு குறித்து சொல்விளக்கிப் பேசுவேன்” என்றான்."
திறன் என்பது நீடித்து இருப்பதும்தான்:
“நான் இதேபோன்று இன்னும் மூன்றுமலைகளை தாவிக்கடப்பேன் உத்தமரே” என்றான் அர்ஜுனன். “முப்பது மலைகள் என்றால்?” என்றார் அவர். அர்ஜுனன் நின்றுவிட்டான். “நான் முப்பதுமலைகளிலும் இதே விரைவில் ஏறிச்சென்றுவிடமுடியும் அல்லவா?” என்று அவர் புன்னகைசெய்தார்.
மனிதனும் விலங்குகளும் கொள்ளும் வேறுபாடு எது? முடிவெடுப்பதில் உள்ள சுதந்திரம்.
"ஏனெனில் ஊன் உண்ணவேண்டியதில்லை என்று முடிவெடுக்கும் அறிவு அவற்றுக்கில்லை. முடிவெடுத்தபின் வாழும் முறைமையும் அவற்றுக்கில்லை”
உண்மையான அகிம்சை எது?
“அகிம்சை என்பது உடலைப் பழக்குவதல்ல, உள்ளத்தை அமைப்பதுதான்.”
அருக நெறி சுருக்கமாக:
  “அருகநெறியின் ஐந்து கொள்கைகள் இங்குள அனைவராலும் கடைபிடிக்கப்படுகிறது. கொல்லாமை, பொய்யாமை, களவாமை, புலனடக்கம், உடைமைகொள்ளாமை என்னும் நெறிகள் அவர்களை சீரான பாதையில் நிறுத்துகின்றன."
    இப்புவி ஒரு மாபெரும் ஆழி. இது அமைந்திருக்கும் புடவி பிறிதொரு பேராழி. அது அமைந்திருக்கும் காலமும் ஆழியே. இவை ஒன்று பிறிதை என முற்றிலும் வகுத்துள்ளன. அந்நெறிகளே இங்கு உறவென முறையென வழியென வாழ்வென விளங்குகின்றன. எறும்பும் யானையும் அப்பேராழியின் சுழலில் ஒன்றோடொன்று முற்றிலும் பிணைக்கப்பட்டுள்ளன” என்றார்.

   "ஒரு தனி எறும்பின் வாழ்வு இப்புவியில் உள்ள பிற அனைத்து உயிர்களாலும் முடிவு செய்யப்படுவதைத்தான் நாங்கள் ஊழ் என்கிறோம். ஊழின் வழி அல்லது ஒழுக உயிர்கள் எவற்றுக்கும் ஆணையில்லை என்றறிக! கொல்வதும் கொல்லப்படுவதும் ஊழெனும் பேராழி ஒன்றை ஒன்று நிரப்பும் இரு நிகழ்வுகள் மட்டிலுமே. வீரரே, இங்குள்ள உயிர்க்குலங்களில் அவ்வூழைக் காணும் விழி கொண்ட உயிர் மானுடன். ஆகவே அவ்வூழில் நன்று தேறவும் தீது விலக்கவும் கடமைப்பட்டவன். அதை நாங்கள் சீலம் என்கிறோம். ஐந்து நல்வழிகளை சென்னி சூடி இங்கு முழு வாழ்க்கை வாழ்ந்து முடிப்பவன் இப்பேராழியின் முடிவிலா பெருஞ்சுழற்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறான். அதையே நாங்கள் முக்தி என்கிறோம்.”

    “இச்சுழற்சிக்கு அப்பால் மாறாது என்றுமிருக்கும் ஒன்று என ஆவதே விடுதலை. இதிலிருந்து விடுபடுவதே வீடுபேறு. இங்குள ஒவ்வொரு உயிருக்கும் வாக்களிக்கப்பட்டுள்ளது அது. ஓருயிர் கொண்ட எறும்பும் தன் பவசக்கரத்தின் விளிம்பில் இருந்து எழுந்து ஈருயிர் கொண்ட நெளியும் உயிராகிறது. மூன்றுயிரும் நான்குயிரும் கொள்கிறது. ஏழுயிர் கொண்ட மனிதனாகையில் முழுதறிவை அடையும் வாயில் அதற்கு திறக்கிறது. பிறந்திறந்து முன் நகரும் இச்சரடின் எல்லை அவ்வழியில் முடிகிறது. அதை திறப்பதும் திரும்பி மீண்டும் முதல்முனை சென்று ஓரறிவுள்ள உயிரென ஆவதைத் தேர்வதும் மானுடரின் தேர்வு மட்டுமே.”
அருகநெறி அன்றாட வாழ்வில்:
“ரிஷப பதம் என்று எங்கள் நெறியில் இதை சொல்கிறார்கள். நடக்கும்போதும் விழிமூடி அசைபோட்டுக்கொண்டு செல்லும் எருதுபோல எங்கும் எப்போதும் அசைபோட அருகநாமம் உள்ளே இருக்கவேண்டும் என்பது என் ஆசிரியர்களின் வழிகாட்டல்.”
அருக நெறியின் நோக்கம்:
“இங்குள அறிவர் ஒவ்வொருவரும் தங்கள் பிறவிச்சரடு முடித்து ஊழ்ச்சுழல் விட்டு உதிர்ந்து மெய்முழுமை கண்டு பிறிதிலாது அமைவதை இலக்கென கொண்டு ஊழ்கம் இயற்றுகிறார்கள்."
சான்றோரை பின்தொடர்தல்
"முன்சென்றோர் வழியை காலடிச்சுவடுகளைக்கொண்டு கணித்தே நாம் செல்லவேண்டும்.”
துறவின் முழுமை:
"உடல் துறந்தால் ஆயிற்றா? நினைவு துறக்கவேண்டும்."
அச்சமே படைக்கலம் ஏந்த வைக்கிறது. காந்தி அதனால்தன் அகிம்சையைக் கைக்கொள்ள வீரம் வேண்டும் என்பார்.  மேலும், படைக்கலம் என்பது வெறும் உலோக வார்ப்புகள் மட்டுமல்ல:
"படைக்கலமேந்திய எவரும் அச்சம் கொண்டவரே. எப்படைக்கலம் ஆயினும் சரி. உலோகப் படைக்கலம். கைகள் கொள்ளும் பயிற்சி என்னும் படைக்கலம். தேர்ந்த சொல் எனும் படைக்கலம். கூர்மதி என்னும் படைக்கலம். நானென எண்ணும் நிலை என்னும் படைக்கலம்.”
அர்ச்சுனனின் அச்சம் எதனால்? இதை யாராவ்து விரித்துரைக்க வேண்டுகிறேன்.
“நான் அஞ்சுவது எதை?” என்றான் அர்ஜுனன். “பிறப்பித்த ஒன்றை. உடன்பிறந்த ஒன்றை. உடன் தொடரும் ஒன்றை. அதைத் தொடரும் பிறிதொன்றை” என்றார் அருகர்.
ஞானியரின் பார்வையில் நாம் எல்லாம் எளிய குழந்தைக்கதை நூல்கள் போல. அவர்கள் அறியாதது அல்லது திடுக்கிட வைப்பது எதுவும் நம்மிடம் இல்லை.
“எளிய மொழியில் எழுதப்பட்ட நூல் நீர். அதை வாசிக்கிறேன்” என்றார் படிவர்.

அச்சத்தை வெல்லும் வழி? அச்சத்திடமிருந்து ஒளிந்துகொள்வது அல்ல. அதை எதிர்த்து நேர் கொள்ளல்.
 “அச்சத்தை நான் எப்படி கடந்து செல்வேன்?” என்று அர்ஜுனன் கேட்டான்.

“அச்சங்கள் எவையாயினும் கண்ணொடு கண் நோக்காது வெல்வது அரிது” என்றார் படிவர்

 
ஒவ்வொரு மனிதனின் உண்மையான இயல்பு:
“எவராயின் என்ன? துயர்கொண்டவர், தனித்தவர், தேடி அலைபவர்” என்றார் படிவர்.


தண்டபானி துரைவேல்