உலகின்
மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகளின் தோலுரித்தபடி துவங்கி இருக்கிறது
பிரயாகையின் பதினொன்றாம் அத்தியாயம். நடைபழகும்வரை நம் வாழ்க்கை அம்மாவும்,
வீடுமாக இருக்கிறது; வீடே உலகமாகவும் இருக்கிறது. மாதங்கள் கடந்து
வருடங்களாகின்றன. நாம் வளர்ந்தபடியே இருக்கிறோம்; வீடு உலகமல்ல எனப்
புரிந்துகொள்ளவும் துவங்குகிறோம். அம்மாவும், அப்பாவும் சொல்லும் கதைகள் வழியாக
’உலகம்’ அறிமுகமாகிறது. பெரும்பாலும் அது கற்பனையான வெளி. முழுக்க அறத்திற்குக்
கட்டுப்பட்டிருக்கும் உயிர்கள் வாழும் பகுதி. மெதுவாக வீட்டிலிருந்து அவ்வுலகிற்கு
நகர்கிறோம். கல்விபயிலும் காலமாக நகரும் அவ்வாழ்வு உலகை வண்ணக்கனவுகளின்
ஒளிர்பிம்பங்களையே நமக்குக் காட்டுகிறது. புறத்தால் அதிகம் பாதிப்புறாத
பருவமாகவும் அது இருக்கிறது. நம்மால் எதுவும் முடியும் என்பதான மனநிலை அவ்வாழ்வில்
தொடர்ந்து சூழலால் நமக்களிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. வாசிக்கும் நூல்களும்
நம்மை ஒரு புரியாத விசித்திரத்தால் கட்டிப்போடுகிறது. அக்காலகட்டத்தில் குழந்தை
வாழ்வின் உலகத்தை முழுக்கவே மறந்திருப்போம். பணி, குடும்பம் என அடுத்தகட்டமாய்
வாழ்வு நகர உலகிற்கான வண்ண வடிவங்கள் நொறுங்கிப்போவதாக ஒரு காட்சி புதிதாய்
முளைக்கும். பொருள்வயமாகிப்போன மானுட உலகு கோரநகங்களைக் கொண்டிருக்கும் அரக்கனாக
உறுமுவது போன்றிருக்கும். நம்மால் எதுவும் முடியும் எனும் உறுதி குலைவதோடு நம்மால்
எதுவும் முடியாதோ எனும் குமைச்சல் கிளம்பிவிடும். இளமைக்கால ’உலகை’ முழுக்கவே
மறந்திருப்போம். இருந்தாலும் அப்போதைய உலகுக்கும் ஈடுகொடுப்பதில் நாம்
சலிப்பதில்லை. குடும்பமும், பணியும் நம்மைத் தனிமைப்படுத்தும் வயோதிக காலம்
நெருங்கும்போது ‘உலகம்’ ஒன்றுமற்ற சுழியமாக வடிவம் கொண்டுவிடுகிறது.
குழந்தை உலகம்,
இளமை உலகம், பணி உலகம், வயோதிக உலகம் என மாறிக்கொண்டிருக்கும் உலகங்களில் நாமும்
மாறிக்கொண்டே இருக்கிறோம். கொஞ்சம் நிதானித்து யோசிப்பவருக்கு இளமை உலகத்திலேயே
‘உலகம்’ புரியத்துவங்கி விடும். அதாவது, ‘உலகங்கள்’ நம் பொதுப்புத்தியால்
கட்டப்பட்டிருக்கின்றனவே தவிர அவ்வாறான ‘உலகங்கள்’ மெய்யாலும் இல்லை என்பது
தெளிவாகிவிடும். உடனே வாழ்வை பொய், மாயை எனச் சொல்வதாகப் புரிந்து கொள்வதும்
அபத்தம். நம் வாழ்வு உண்மைதான். ஆனால், நாம் நினைக்கும்படியான அளவிற்கு முக்கியத்துவம்
கொண்ட உண்மையில்லை. குழந்தை உலகிற்கான நெறிகள் இளமை உலகில்
செல்லுபடியவதில்லை; இளமை உலகிற்கான நெறிகள் வயோதிக உலகில் நிறைவூட்டுவதில்லை.
அப்படியானால் நெறிகள் தனித்தனியானவையா? ஆம், அப்படித்தான் நம் மானுடகுலம்
கூறுபோட்டு வைத்திருக்கிறது. அக்கூறுகளிருந்து நாம் விடுபட்டுவிட முடியாது.
வேண்டுமானால், அவற்றின் தாக்கத்திலிருந்து தனிமனிதனாய் நாம் கொஞ்சம்
ஆசுவாசப்படலாம்; உவகை கொள்ளலாம். ’மானுடகுலம்’ வகுத்தளித்திருக்கும் நெறிகளைத்
தனிமனிதனாய் உள்ளுக்குள் அலசிப்பார்த்து அவற்றின் பாய்ச்சலால் நேரும்
ஆபத்திலிருந்து ஓரளவு நம்மைக் காத்துக் கொள்ளலாம். அதற்கு மானுட குலம்
முன்வைக்கும் உலகங்களைக் கடந்திருக்கும் வெளியையும், மானுடகுலம் தோன்றிய
வரலாற்றையும் புரிந்து கொள்ள வேண்டும்.
நான் யார் எனும்
கேள்வியை எழுப்பும் ஒருவன் விரிந்து விரிந்து ஆதியில் பெருவெடிப்பு நிகழ்ந்த
முழுமுதலில் சென்று திகைத்து நிற்கிறான். அப்பெருவெடிப்பின் பேரொளியை உள்ளுக்குள்
கண்டுகொள்ளும் ஒருவனுக்கு ‘உலகங்களின்’ வடிவங்கள் கானல்நீராகவே காட்சி தரும்.
கானல்நீர் உண்மைதான் என்றாலும் அது நீரன்று, நீரைப்போன்ற தோற்றமே எனும் அதற்கான
அர்த்தமும் விளங்கிவிடும். தத்துவங்கள் ஆதிமுழுமுதலின் துவக்கத்தை
நமக்குச்சுட்டுவதன் ஊடாக நம் ‘உலகங்களின்’ கனத்தை ஒன்றுமில்லாமல்
செய்துவிடுகின்றன. பேரொளியை தனக்குள் காணும் ஒருவனை தற்காலிகப் பிம்பங்கள்
பயமுறுத்தி விடா. மேலும், அப்பிம்பங்களால் அவன் அலைக்கழிக்கப்படும் வேகமும்
மட்டுப்படும்.
/* மானில் ஒருபகுதியையும் வேங்கையில் ஒருபகுதியையும்
இணைத்து அவனைப்படைத்தார். பாம்பில் ஒருபகுதியையும் பறவையில் ஒருபகுதியையும் அதிலிணைத்துக்கொண்டார்.
ஆகவேதான் எப்போதும் வேட்டையாடுகிறான், வேட்டையாடவும் படுகிறான். சேர்ந்து வாழ விழைகிறான்.
உடனிருப்பவர்களை உண்ணவும் எண்ணுகிறான்.*/ மனிதன் எப்போதும் உமையும்,
சிவனுமாக இருக்கிறான். சிவன் இயக்கமற்றதன் குறியீடு. உமை இயக்கத்தின் குறியீடு.
இயக்கமற்ற சிவன் மெளனத்தைச் சுட்ட உமையோ சத்தத்தை அடையாளப்படுத்துகிறாள்.
மோனநிலையே ஞானநிலை எனச் சொல்லும் அருளாளர்கள் கணக்கிலடங்காப்பாடல்களை பாடக்காரணம்?
தங்களுக்குள் கண்ட சிவத்தின் மோனத்தை, தங்களுக்குள்ளே இருக்கும் உமையின்
சத்தத்தால் வெளிப்படுத்தினார்கள். வெறும் சிவனாகவோ, வெறும் உமையாகவே இருக்க
மனிதனால் முடியவே முடியாது. அருளாளர்களும் மனிதர்களே. சிவனை உமை வழியோ அல்லது
உமையை சிவன் வழியோ இணைக்காமல் அவர்களாலும் இருக்க முடியாது. அதனால்தான் சிவனாகிய
ஒருமைக்கும், உமையாகிய பன்மைக்கும் இடையே ஊடாடிக்கொண்டே இருக்கிறார்கள். ஞானி
என்பவன் நமக்குச் சொல்லப்பட்டதைப் போன்று எல்லாவற்றையும் கடந்தவன் அன்று; எவன் இருமைகளால்
அதிகம் அலைக்கழிக்கப்படாமல் இருக்கிறானோ அவனே ஞானி. ஞானி என்பவனும் சிவனும்,
உமையுமானவன்தான். அதனால்தான் சும்மா இரு சொல்லற என்றலுமே எனும் மோனநிலையை,
சொற்களில் அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே என வெளிப்படுத்தி இருப்பார்
அருணகிரி நாதர். சொல்லப்போனால் நாம் ஒவ்வொருவரும் ஞானிகளே. நம்மைக் கூறுபோடாது
முழுமையாய்க் கவனிக்கும்போது அது புரியும்.
/*மனிதர்களுக்கிடையேயான அவநம்பிக்கைகளும்
கசப்புகளும் மேலோட்டமானவை என்றும் ஆழத்தில் அன்பும் பாசமும்தான் உள்ளன என்றும் நாம்
நம்பவைக்கப்பட்டிருக்கிறோம். ஒரு புன்னகையில் அல்லது கண்ணீரில் எல்லாம் கரைந்துபோகுமென
கற்பனை செய்துகொள்கிறோம். அந்த மாயை கலையாமல் ஒருவன் விவேகம் அடைவதில்லை.*/ இங்கு மாயை எனும்
சொல்லை நுட்பமாகவே அணுக வேண்டும். மேலோட்டமாக அணுகுவதால் அதன் மையத்திலிருந்து
விலகிவிடும் ஆபத்துண்டு. மாயை என்பது மாறிக்கொண்டே இருப்பதைச் சுட்டுவது.
ஒரு மனிதனால் எப்போதும் அன்பாகவோ அல்லது எப்போதும் வெறுப்பாகவோ இருந்துவிடுதல்
சாத்தியமில்லை. இன்னும் சொல்லப்போனால், வெறுப்பு எனும் சொல் அன்பின் எதிர்நிலை.
அன்பு வெறுப்பின் எதிர்நிலை. இரண்டில் ஒன்றில்லாமல் மற்றதைப் புரிந்து கொள்ள முடியாது.
சூட்டைப் புரிந்து கொள்ள குளிர்ச்சி பயன்படும். அதைப்போன்றே குளிர்ச்சியைப்
புரிந்து கொள்ள சூடு அவசியம். சூடின்றி குளிர்ச்சியும் இல்லை. வெறுப்பின்றி
அன்புமில்லை. அன்பு எப்படி ஒரு நிலையோ, வெறுப்பும் அப்படியே. நாமோ அன்புக்குக்
கொடுக்கும் முக்கியத்துவத்தை வெறுப்புக்குக் கொடுப்பதில்லை. சொல்லப்போனால்
வெறுப்பை வெறுக்கிறோம். மாயை அதையே நமக்கு உணர்த்தப் பார்க்கிறது. நாமோ மாயை எனும்
சொல்லை பொய் என்பதாகவே புரிந்து கொண்டிருக்கிறோம். அப்படியே பொய் என்று கொண்டாலும்
உண்மை என ஒன்று இருக்க வேண்டுமல்லவா? மாறாமல் இருப்பதைத்தான் உண்மை எனப்
பெரும்பாலும் சொல்வோம். அப்படியானால் மாறிக்கொண்டிருப்பது பொய்தானே? என்றாலும்,
மாயையை ஒரு வரையறைக்குள் அடைத்துவிடுதல் அபத்தமாகவே முடியும். உண்மை பொய்
தொடர்பாய் நாம் கொண்டிருக்கும் கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்குவதே மாயையின்
முகம். மாயை எனும் சொல் இருமைகளில் சிக்கி அல்லல்படும் நம் சிறுபிள்ளைத்தனத்தை
நேரடியாகக் கேள்வி கேட்கிறது; இருமைகளின் தொடர்மாற்றங்களை ஞாபகமூட்டவும்
செய்கிறது.
முருகவேலன்(சக்திவேல்
ஆறுமுகம்)
கோபிசெட்டிபாளையம்