வெய்யோன் 33 ல் அத்தனை இளைய கௌரவர்களைப் பார்த்து ஓர் அபாரமான அக எழுச்சியில் விம்மும் துச்சளை " “என் தமையன் சூரியன் படிகக்கற்களில் என பெருகிவிட்டார்.” எனச் சொல்ல கர்ணன் “பெருகியவன் அவனல்ல, திருதராஷ்டிர மாமன்னர்” என்கிறான். கூடவே ஒரு சூதன் சொல்லாக "அவர் சிகைக்காய். இவர்களெல்லாம் அதன் நுரைகள் என ஒரு சூதன் பாடினான்." என்று சொல்கிறான். அத்தனை குதூகலமான சமயத்தில் வந்த இந்த ஒரு உவமை சட்டென்று மனம் கனக்கச் செய்து விட்டது. எவ்வளவு உண்மையான வார்த்தைகள். தீக்கங்கில் வைக்கப்பட்ட பால் போல மைந்தர்களால் பொங்கி, பொலிந்து மகிழ்வெனும் நுரைகளால் மூடியது போல இருக்கும் அஸ்தினபுரி காலமெனும் வெள்ளத்தால் கழுவப்படக் காத்திருக்கிறது. இறுதியில் தேய்ந்த சிகைக்காய் மட்டுமே மிஞ்சியிருக்கும்.
மகராஜன் அருணாச்சலம்