மூன்று முறை கண்களில் நீர் வழிய நேற்றிரவு சுஜயனின் வஞ்சினத்தை படித்துவிட்டு, இன்று காய்ச்சல் கண்டு படுத்திருந்தபோது
மீண்டும் மீண்டும் அது நினைவில் ஓட எழுந்து உங்கள் மின் அஞ்சல் முகவரி
கண்டுபிடித்து விமர்சனம் எழுத உட்கார்ந்தபோது திரு விஜய்சூரியன் அவர்களின்
விமர்சனம் கண்டேன். நான் எழுத எண்ணியவைகள் பலவற்றை அவர் சிறப்பாக பதிவு
செய்து விட்டதால் வேறு சிலவற்றை பற்றி எழுதுகிறேன்.
ஏன் கலிங்க நாட்டின்மீது வஞ்சினம்?
சுப்ரியை அஸ்தினபுரியின் தூதனாக வந்த அரசகுலத்தானும் தன் தமக்கைக் கொழுநரின் குடியினரும் ஆன சுஜயனை அவமதித்தாள். அஸ்தினபுரி அவன் மூலம் அனுப்பிய பரிசில்களையும் இழிவு படுத்தினாள். தன் காலைத் தொட்டு சென்னி சூடக்கூட அனுமதிக்கவில்லை. அவள் சேடி சரபையும் சுஜயனை அவமதித்தாள். தன் மூத்தோனின் பட்டத்துஅரசி என அதைப் பொறுத்தான்.
ஆனால் சரபை ‘கலிங்க நாட்டு அரசியின் ஆணை’ என்று அவளையும் அவள் அரசியையும் அங்க நாட்டவர்களாக அல்ல, கலிங்க நாட்டவர்களாக நிறுவியபோது கலிங்க நாட்டின் மீது
எழுந்தது வஞ்சினம். எங்கு அடித்தால் எங்கு வலிக்கும்?
சுஜயன் மொழியா?
சிறு வயது முதல் துரியனும் கர்ணனும் கருவறையமர்ந்த சிவனும் விண்ணுருவனும்போல
தோள் தழுவி அமர்ந்திருக்கும் காட்சியை
கண்டு வளர்ந்தவன் சுஜயன். யார் கர்ணனை நோக்கி அவச்சொல் எடுத்தாலும்
வாளெடுக்கும் அண்ணனை பார்த்து வளர்ந்தவன். கர்ணன் தோளில் வளர்ந்தவன். அவன்
மொழிந்த வஞ்சினம் துரியன் உறைத்ததென்றே ஆகிறது.
சுஜயன் வஞ்சினத்தின் அறம்கர்ணனைத் தவிர யாரும் சுஜயனை நிறுத்த முற்படவில்லை. ஹரிதரும் வீரர்களும் கை கூப்பினர். “நீ விழியற்ற பேரறத்தின் மைந்தன் இளையோனே. பிறிதொன்றை உன்னால் எண்ணமுடியாது” என்றான் கர்ணன். அச்சொல் துரியனையும் அவனது 99 இளையோரையும் நோக்கி சொல்லப்பட்டதே.
பின் ஏன் கௌரவர்கள் வில்லன்கள் ஆனார்கள்?
இது வரை நிகழ்ந்த க்ரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த 50 ஆட்டங்களை அளித்த வீரர்களை க்ரிகின்போ பட்டியல் இட்டுள்ளது. இந்திய வீரர்கள் பலர் இடம் பெற்றிருந்த அந்த பட்டியலில் டெண்டுல்கர் பெயர் இல்லை. 14/1/15 தமிழ் இந்து நடுப்பக்கத்தில் ஒரு கட்டுரை இதை ஆராய்ந்துள்ளது. இடம் பெற்றிருந்த ஆட்டக்காரர்களின் அணிகள் வெற்றி பெற்றன. டெண்டுல்கர் சிறப்பாக ஆடிய ஆட்ட்ங்களில் இந்திய அணி தோற்றது அல்லது ட்ரா ஆனது.
Winner takes it all, அறம் உள்பட.
பா. ராஜேந்திரன்