பெண்கள் எப்போதும் வீட்டுப் பெரியவர்கள் மற்றும் வேற்று ஆண்களின் கூரிய விமர்சனப்பார்வைகள் நடுவே வாழ்வது நம் நாட்டு சூழல். அந்தப் பார்வைகள் அவள் ஆடைஉடுத்தியிருப்பதை, பேச்சை, பாவனையை, நடவடிக்கையை கண்காணித்த வண்ணம் இருக்கின்றன. அந்தப் பார்வைகளிலிருந்து விலகி ஒரு பெண் தனித்திருக்கும் நேரங்கள் மிகக் குறைவு. அப்படி தனித்திருக்கும்போதுகூட, பெண் தான் சிறுவயது முதல் கொண்டிருக்கும் இந்த எச்சரிக்கை உணர்வினால், தன்னை சுதந்திரமாக உணர்வதில்லை.
ஒரு பெண் மிகச் சுதந்திரமாக தன்னை எங்கு உணர்கிறாள் என எண்ணிப்பார்க்கிறேன். யாருமற்ற தனிமையிலா? இல்லை. அப்போது எண்ணங்களின் பிடியில் சிக்கிக்கொள்கிறாள். தனித்திருப்பது சுதந்திரம் இல்லை. அப்போது அவளிருப்பது சுவர்கள் இல்லாத சிறையில். கட்டுப்பாடற்ற கூட்டத்தில் ஒருவளாக தன்னை ஒளித்திருக்கும் ஒருவள் அப்போது தன்னை சுதந்திரமாக உணர்கிறாள். அவள் பேசுவது கூட்டத்தின் குரல்களில் ஒன்றாக மாறுகிறது. அவள் செய்கைகள் கூட்டத்தின் செய்கைகளில் ஒன்றாக ஆகிறது. இவை எதற்கும் தனிப்பட்ட ஒருவளாக பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டிய தேவை அப்போது அவளுக்கில்லை.
ஆக பெண்களின் கூட்டம் என்பதில் தனித் தனியான பெண்களின் கூட்டுக் குணமாக இல்லாமல் போகிறது. கூட்டத்தின் பாதுகாப்பில் தன் கட்டுகளை பெண்கள் தளர்த்திக்கொள்கின்றனர். அதனால அந்தப் பெண்களின் கூட்டம் ஒரு பெண்ணின் பொறுமை அடக்கத்தை கைவிட்டதாக இருக்கிறது. குறும்புகள் அதிகரிக்கின்றன. தன்னை தினமும் கட்டுபடுத்தும் ஆண்களை தனியாக ஒருவன் கிடைக்கும்போது கூட்டமாக சேர்ந்து நின்று சீண்டி விளையாடுகிறார்கள். கூட்டமாக இருக்கும் பிள்ளைகள் செய்கைகளால் செய்யும் குறும்புகளைப்போல இவர்கள் தம் சொற்களால் குறும்புகள் செய்கிறார்கள். இப்படி பெண்கள் கூடி ஆண்களை சீண்டுவது திருமண வீடுகளில் பார்த்திருக்கிறேன். கல்லூரி படிக்கும் காலத்தில் என் நண்பன் ஒருவனை பேருந்தில் கல்லூரிப் பெண்கள் சிலர் சேர்ந்து சீண்டி அழ வைத்ததது நினைவிற்கு வருகிறது. அந்தத் தருணத்தில் ஒரு ஆண் தான் எப்படி நடந்துகொள்வது என தெரியாமல் திகைத்து நிற்கிறான். துரியோதனன் ஒரு முறை இப்படி பெண்களின் பிடியில் சிக்கி இருக்கிறான். இப்போது கர்ணன். நல்லகாலம் பானுமதி சமயத்தில் வந்து கர்ணனை காப்பாற்றுகிறாள்.
கட்டுகளின் இறுக்கம் நீங்கி விடுபட்டிருக்கும் அத்தனைப் பெண்களின் வடிவுகளில் அந்த ஆதிப் பேரன்னை சிறு சிறு துணுக்குகளாக பிரதிபலிக்கிறாள். அல்லது அப்பெண்களெல்லாம் ஒன்றிணைந்து, சிறிய சிறிய பூக்களால் வரையப்பட்ட ஒரு பெரும் பூக்கோலம்போல் அந்தப் பேரன்னையை கர்ணன் உணர்கிறான். சட்டென்று அங்கு வெண்முரசு விண்ணுரு கொண்டு எழுகிறது.
அவர்களின் உடல்கள் கூத்துக் கைகளென்றாகி பிறிதொரு மொழி பேசின. காற்றுதொட்ட இலையிதழ்கள். வானம் அள்ளிய சிறகிதழ்கள். ஒசிந்தன கொழுதண்டு மலர்ச்செடிகள். எழுந்து நெளிந்தன ஐந்தளிர் இளங்கொடிகள். ஒன்றை ஒன்று வென்றன மதயானை மருப்புகள். வியர்த்து தரையில் வழுக்கின தாரகன் குருதி உண்ட செந்நாக்கெனும் இளம்பாதங்கள். மூச்சு பட்டு பனித்தன மேலுதட்டு மென்மயிர் பரவல்கள். சிவந்து கனிந்தன விழியனல் கொண்ட கன்னங்கள். கலையமர்ந்தவள். கருணையெனும் குருதிதீற்றிய கொலைவேல் கொற்றவை. கொடுகொட்டிக் கூத்தி. தலைகோத்த தாரணிந்தவள். இடம் அமைந்து ஆட்டுவிப்பவள். மும்மாடப் புரமெரித்து தழலாடியவள். மூவிழியள். நெடுநாக யோகபட இடையள். அமர்ந்தவள். ஆள்பவள். அங்கிருந்து எங்குமென எழுந்து நின்றாடுபவள். சூழ்ந்து நகைப்பவள். விழிப்பொறியென இதழ்கனலென எரிநகையென கொழுந்தாடுபவள். முலைநெய்க்குடங்கள். உந்திச்சுழியெனும் ஒருவிழி. அணையா வேள்விக்குளம். ஐம்புலன் அறியும் அனைத்தென ஆனவள். மூண்டெழுந்து உண்டு ஓங்கி இங்குதானே என எஞ்சிநின்றிருப்பவள்.
பின்னர் காந்தாரி முதலிய அன்னையர் கூட்டமாக மற்றொரு அவதாரம் எடுக்கிறாள் அப்பேரன்னை. அப்போது அன்புமழையில் மூச்சு திணறுகிறான் கர்ணன். காலம் மேற்கொண்டு நகராமால் இங்கேயே சுற்றி சுற்றி வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால் காலம் காலன் அல்லவா? அவனுக்கேது இரக்கம்?