ஏன் இத்தனை குழந்தைகளையும், அவர்கள் சேட்டைகளையும் இவ்வளவு விரிவாகச் சொல்ல வேண்டும்? தன் ஒரே மகனை அந்த குழந்தைக் கூட்டத்திடம் கொடுத்து விட்டதற்காக தன்னைக் கடியும் பானுமதியிடம் துச்சளை, "அவர்கள் என் தமையன்களைப் போல, அரசி. இங்கு நூறு தமையன்களுக்கு ஒரு தங்கையாக வாழ்ந்தவள் நான். எனக்குத் தெரியும், அது எப்படிப்பட்ட வாழ்க்கை என்று" , என்று அதற்கான பதிலைச் சொல்லி விட்டாள்.
உண்மையில் இது ஒரு சிறு காட்சிப் பதிவு. பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் இளமைக் காலங்களின் முக்கிய அரசியல் நிகழ்வுகள் மட்டுமே நமக்கு அறியத்தரப்பட்டிருக்கின்றன. அவை மொத்த வாழ்வில் ஓரிரண்டு சதவீதம் மட்டுமே. அவர்கள் செய்த சேட்டைகள், அவர்கள் மகிழ்ந்திருந்த நாட்கள் போன்றவை வரவில்லை. நூற்றி ஆறு குழந்தைகள் அஸ்தினபுரியில் எப்படி இருந்திருப்பார்கள், அவர்களை அஸ்தினபுரி எப்படி எதிர்கொண்டிருக்கும் என்பதை இளைய கௌரவர்களின் ஆடல் நமக்குக் காட்டுகிறது. அஸ்தினபுரியில் யாரும் குழந்தைகளால் எரிச்சல் அடைவதில்லை. அவர்கள் செய்யும் சேட்டைகளை அன்னையின் கண்டிப்போடும், உள்ளூர நகையோடும் தான் எதிர்கொள்கிறார்கள். எப்படி இது சாத்தியமானது? ஏனென்றால் அவர்களுக்கு இது இரண்டாவது ஆட்டம். முன்பே நூறு பேர் ஆடியதை இப்போது எண்ணூறுவர் ஆடுகின்றனர்.
இன்னொன்றும் வருகிறது. இந்த அரச குல குழந்தைகளுடன் அஸ்தினபுரியின் மற்ற குழந்தைகளும் இணைந்து கொள்கின்றன. அனைவரையும் ஒரே போன்று தான் அஸ்தினபுரியும் சரி, கௌரவர்களும் சரி நடத்துகிறார்கள். இப்படி பாருங்கள், ஒரு எளிய குடும்பத்து மகன் இளவரசனுடன் ஒன்றாக விளையாடுகிறான். பல சமயங்களில் இளவரசர்களும் இவ்வெளியவர்களின் வீட்டில் உணவு உண்கிறார்கள். அஸ்தினபுரி வாசிகள் எப்படி பெருமையாக உணர்ந்திருப்பர்!! இதற்கெல்லாம் துரியனின் அக விரிவும் ஒரு காரணம். அவ்விரிவு ஒவ்வொரு கௌரவரிடத்தும் இருப்பதும் ஒரு காரணம்.
இத்தனை விளையாட்டுப் பிள்ளைகள் சிந்து நாட்டு இளவரசனை மிகச் சரியாக, மிக மிகச் சரியாக காந்தாரியிடம் கொண்டு சென்று சேர்த்ததை என்னவென்று சொல்வது?! குழந்தைகள் உள்ளுணர்வால் வழிநடத்தப்படுபவர்கள். அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது, புதிய இளவரசனை எங்கு கொண்டு செல்ல வேண்டுமென்று? அத்தனை காந்தார அரசியரும் குழந்தைகளோடு குழந்தைகளாக கொஞ்சி விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கையில் மனம் விம்மிவிட்டது. ஒரு கணம் என்றாலும் கூட, சிதறிப் பரவிய உள்ளத்தை இன்னும் சற்று முயன்றாவது கட்டி வைத்திருந்தால் அன்னை சம்படையும் தன் துயரங்களெல்லாம் தொலைந்து மகிழ்வு கொண்டாடியிருக்கலாமே என்ற எண்ணமும் கூடவே வந்து சென்றது. ஊழ் ஒவ்வொரு மனிதரையும் ஒவ்வொரு விதமாக வாழ வைக்கிறது!!
அருணாச்சலம் மகாராஜன்