Thursday, January 28, 2016

வெண்முரசின் வசனங்கள்(வெய்யோன் - 38)    ஆங்கிலப் படங்கள் பல விதங்களில் நம் ஊர் படங்களைவிட சிறப்பானவை. அதில் ஒன்று ஆங்கிலப் படங்களில் வரும் வசனங்களின் கூர்மை. நம் படங்களில் அந்த அளவுக்கு கூர்மையான வசனங்கள் வருவது மிகக் குறைவு.  எதுகை மோனையுடன் இருப்பதுதான் சிறந்த வசனம் என்றும் அப்படி எழுதுபவர்கள் சிறந்த வசனகர்த்தாக்கள் என நாம் கொண்டிருக்கிறோம்.
   ஆனால் சிறந்த வசனம் என்பது எப்படி இருக்க வேண்டும் என யோசித்துப்பார்க்கிறேன். ஒரு வசனம்  வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்கக்கூடாது, பாத்திரத்தின் தன்மைக்கேற்ப இருக்க வேண்டும், பாத்திரத்தின் முதிர்ச்சிக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும். அந்த வசனம் அப்போதைய காட்சியின் கதையை கொண்டுசெல்லும் ஒன்றாக  அல்லது பாத்திரத்தின் அப்போதைய மனநிலையை உணர்த்துவதாக, இயல்பானதாக,  இருக்கவேண்டும்.

       ஆனால் ஒரு நாவல் எழுதும்போது வாசகன் கண் முன் அந்தக் கதையை நிகழவைக்க, பாத்திரங்களின் மன நிலையை வெளிப்படுத்த வசனங்களை அதிகம் பயன்படுத்தவேண்டியுள்ளது. சில எழுத்தாளர்கள், பாத்திரங்கள் அவர்கள் மனதில் நினைப்பதாக சொல்லி எழுதுவார்கள். ஆனால் அதைவிடச் சிறந்தது பாத்திரங்களின் வார்த்தைகள் வாயிலாகவே கதையை கொண்டு செல்லுதலாகும்.  வெண்முரசில் இது மிக நுணுக்கமாக
செயல்படுத்தப்படுகிறது. முன் கதைகள்கூட சூதர் சொல்லாக வருகிறது. அன்றாட நிகழ்வுகளில் சூழல் மட்டுமே எழுத்தாளர் நேரடியாக சொல்வதாக வருகிறது. பாத்திரங்களின் மனநிலை அவர்களின் சொற்கள் மூலமாகவும் செயல்கள் மற்றும் பாவனைகளை காட்சிப்படுத்தலின் மூலமாகவும் விளக்கப்படுகிறது.   வெய்யோனில் கர்ணனின் அவமதிப்புகள், அவன் மீத் கௌரவர்களின் அன்பு மதிப்பு, ஜெயத்ரதனின் வஞ்சம், பின்னர் அவனிடம் அது மறைந்து  கர்ணன் மேல் அன்பும் மதிப்பும் உருவாவது எல்லாம் எழுத்தாளரின் நேரடிக்கூற்றுக்கள் எதுவும் இல்லாமல் வசனங்கள் மூலமாக  வாசகருக்கு இவற்றுக்கான அனைத்து உணர்ச்சிகளோடும் உணர்த்தப்படுகிறது.  எடுத்துக்காட்டுக்கு திருதராஷ்டிரர்  ஜெயத்ரதனிடம் பேசும் வார்த்தைகள் மிகத் தெளிவாக கதையின் சூழலை உணர்த்துவது எப்படி அற்புதமாக அமைந்திருக்கிறது என்பதைப் பார்க்கலாம்,

   திருதராஷ்டிரன் பார்வை இல்லாதவர் என்றாலும் ஓவ்வொருவரின் உள நிலையை தெளிவாக அறிந்தவராக இருக்கிறார்.  தன் பிள்ளைகளின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை முழுதும் தெரிந்தவராக இருக்கிறார். ஜெயத்ரதரின் உள விரிவின் எல்லை,  கர்ணனால் அவன் அகங்காரம் சிதைவுற்று இருப்பது, கௌரவரின் தங்கையை மணந்திருந்தாலும், அவர்கள் கர்ணன் மேல் கொண்டிருக்கும் பேரன்பு  அவர்களின் சிறியகோபமும் தன்னை அழித்துவிடும் என்ற அச்சம் அனைத்தையும் அவர் அறிந்தவராக இருப்பதை திருதராஷ்டிரரின் சொற்கள் மூலமே அறிந்துகொள்கிறோம். ஜெயத்ரதன் கர்ணன் மேல் வெறுப்புகொண்டால் கௌரவர்களின் கடும் கோபத்திற்கு ஆளாவோம் என்பதை அறிந்த ஜெயத்ரதன், கர்ணனை அவமதிப்பு செய்த காரணத்தால்  அச்சத்தில் இருக்கிறான். ஆனால் இப்போது அவனுக்கு  கர்ணன் மேலான வஞ்மும் கோபமும் முற்றிலும் குறைந்துவிட்டது. அவன் மெல்ல மெல்ல அஸ்தினாபுர அரண்மனைச்சூழலை உணர்கிறான். தான் அரசன் என்ற வெற்று அகங்காரம் அவனை விட்டுப் போகிறது அவன் திருதராஷ்டிரனை தந்தையே என அழைக்கிறான். அந்த ஒரு வார்த்தையில்  திருதராஷ்டிரர் ஜெயத்ரதனின் மனமாற்றத்தை  அறிந்துகொள்கிறார். அடுத்த நொடி அவன் அவர் கண்களுக்கு மற்றொரு மகனென ஆகிறான். அவருடைய பாச மழையில் நனைகிறான். 

தலையை வருடி மென்குரலில் “அஞ்சாதே” என்று அவர் சொன்னார். அச்சொல் வலியூறும் புள்ளியொன்று தொடப்பட்டது போல் அவனை நடுங்கச் செய்வதை கர்ணன் கண்டான்.


    “எதற்கும் அஞ்சாதே. இங்கு உனக்கு நூற்றி ஒருவர் இருக்கிறார்கள். இதோ என் மூத்தமைந்தன் கர்ணன் இருக்கிறான். பரசுராமரும் பீஷ்மரும் துரோணரும் அன்றி பிறிதெவரும் அவன் முன் வில்லெடுத்து நிற்க இயலாது. உன் எதிரிகள் அனைவரும் அவனுக்கு எதிரிகள். உன் நண்பர்கள் மட்டுமே அவனுக்கு நண்பர்கள். என் மைந்தன் அமர்ந்திருக்கும் அஸ்தினபுரியின் அரசு, அவன் கைகளென பெருகி நிற்கும் நூறுமைந்தர்கள் அனைவரும் உனக்குரியவர்கள். அஞ்சாதே” என்றார். “இல்லை தந்தையே. இனி அஞ்சுவதில்லை. நேற்றுடன் அச்சம் ஒழிந்தேன்” என்றான். “நன்று நன்று… நீயும் என் மைந்தனே” என்றார் திருதராஷ்டிரர்.

 
    இப்படிச் சொல்கையில் அவர் ஜெயத்ரதனை கர்ணனின் தம்பி என ஆக்குகிறார். கர்ணனை தன் மைந்தர்களுக்கு மூத்தவனென சொல்லி கர்ணனுக்கு அவர் அளித்திருக்கும் இடம் என்னவென அவனுக்கு  உணர்த்துகிறார். அடுத்து கர்ணனின் பேராற்றலை சொல்லி  அவனை சரண்புகுவதால் மட்டுமே நீ பாதுகாக்கப்படுவாய் என உணர்த்துகிறார்.  அதை கர்ணனின் எதிரில் சொல்வதன்மூலம் கர்ணனனுக்கும் அவர் மகளின் கணவனை பாதுகாக்க வேண்டிய கடமையை உணர்த்துகிறார்
.  
   இதைப்போல் வெண்முரசில் வரும் ஒவ்வொரு வசனமும் பொருள் செறிந்ததாக ஆழம் கொண்டதாக  இருப்பதை சற்று ஊன்றி படிப்பதன் மூலம் நாம் உணரலாம். 

தண்டபாணி துரைவேல்