Tuesday, January 19, 2016

கம்பன்!



வந்தே விட்டான் கம்பன்!! அவனளித்த சொல்லில் அமைந்த காவியம். அவன் மொழி இல்லாமல் நிறையலாமா!!

"வெய்யோனொளி அவன் மேனியின் விரிசோதியில் மறையக் கண்டேன். மையோ மரகதமோ மழைமுகிலோ அய்யோ இவன் உடல் என நின்று கலுழ்ந்தேன்."

ராமனுக்களித்த சொற்கள்... கிருஷ்ணனை விடவும் கர்ணனுக்கே பொருந்தியதா, இல்லை பொருத்தியதா!! எவ்வாறாகினும் மிகச் சரியான இடத்தில், சரியான வர்ணனை!!

"வெய்யோன் ஒளி தன் மேனியின்
     விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
     இளையானொடும் போனான் -
‘மையோ, மரகதமோ, மறி
     கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர் 
     அழியா அழகு உடையான்."

மையோ, மரகதமோ என ராமனை வர்ணிக்க மயங்கும் கம்பன், சீதைக்கு குழம்பவே இல்லை. பொய்யே எனும் இடையாள் என்று முடிவே செய்துவிடுகிறான்.

இப்படி யோசித்த பிறகு தான் இப்பாடலை வேறு தளங்களில் தேடலாம் என்று வந்தால் அனைத்தும் 'பொய்யோ எனும் இடையாளோடும்' என்று தான் இருக்கிறது. எது சரி? பொய்யே எனும் இடையாளா இல்லை பொய்யோ எனும் இடையாளா? 'ரொம்ப முக்கியம்' என்று கேட்கிறீர்களா!!!

இப்பாடலின் அறிவியல் விளக்கத்தைக் கண்டு உய்க... கம்பனுக்கே இப்படியென்றால் நாளை ஜெ வின் வரிகளுக்கு என்ன என்ன விவரணங்கள் வருமோ!! Quantum Physics னு சொல்வாங்களோ?

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்