அன்பின் ஜெ,
வெண்முரசின் எளிய கதையாடலாக வெய்யோனைக் கொள்ளலாம்.கர்ணணனைப் போன்றே அவன் கதையும் அனைவரையும் அரவணைத்துச் செல்கிறது.சூரிய மைந்தனாகவும் சூதன் மகனாகவும் மாறி மாறி அவன் பிறறால் அடையாளம் காணப்படுவதன் அலைக்கழிப்புகள் அவனது உள மயக்கங்கள் மிக அழகாக பதிவிடப்பட்டுள்ளது.வாழ்க்கை நிறைய இடங்களில் இப்படித்தான் நம்மை புரட்டுகிறது.இளைய கவுரவர்களின் விளையாடல்கள் களியாட்டங்கள் உற்சாகமான அத்தியாயங்கள்.குழந்தைகள் கும்பலாக அப்படித்தான் வரைமுறையின்றி இருப்பார்கள்.காந்தாரி நூறு மக்களைப் பெற்றிருந்தாலும் குழந்தைகளிடம் அவள் பிரியம் தீரவில்லை.நான் இப்படித்தான் இருக்க வேண்டுமென ஊழ் என்கிறாள்.அத்தனை மக்களையும் இழக்கும் போது அவள் என்னவாகப் போகிறாள்?
குரங்குகளைப் போன்று துள்ளும் இளையோர் திருதிராஷ்டிரன் முன் யாழிசையில் அமரிக்கையாய் அமர்ந்திருக்கும் காட்சி மிக அழகாக வந்திருக்கிறது.குதூகலங்கள் இறுதியில் விழியற்றவனிடம் சாந்தமடைகின்றன.வெண்முரசை இது வரையிலும் தினமும் வாசித்திருக்கிறேன் என்று எண்ணுகையில் எனக்கே வியப்பாகத் தான் இருக்கிறது.எழுதும் உங்கள் நிலை எப்படி இருக்குமென்று உணர்கிறேன்.
மோனிகா மாறன்.