Sunday, January 31, 2016

சண்டைக்கு பின்னான இரு சமாதானங்கள்.


 கர்ணன் ஜெயத்ரதன் இடையிலான சமாதானம் மனதிற்கு நிறைவளிக்கிறது. இதைவிட பெரிய பிணக்குகொண்டிருந்த துரியோதனனும் பீமனும் சமாதானம் கொண்டு கட்டித்தழுவிக்கொள்ளுதலையும் முன்னர் பார்த்தோம். இரண்டும் ஒரே மாளிகையில் ஒரே மாமனிதரின் முன்னிலையில் நடந்தன. இரண்டு சமாதானங்களும் பெரும் உணர்ச்சிப் பிரவாகத்துடன் உருவாகின. இருந்தாலும்  இரண்டும் ஒன்றுபோல உறுதியுடையவையா எனக் காணவேண்டும்.
  

  கர்ணனனுக்கு எப்போதும்  ஜெயத்ரதன் மேல் பெரிய வெறுப்பு இல்லை. மேலும் அவன் பாசத் தங்கை துச்சளையின் கணவன். அதனால் தன்னிடம் அவன் என்ன தவறு செய்தாலும் பொறுத்துக்கொள்ளும் மனநிலையில் கர்ணன் இருக்கிறான்.  மேலும் போரின் காரணமாக அவனை அவமானப்படுத்தியதன் குற்ற உணர்வு கர்ணனிடம் உள்ளது. அப்படியே ஜெயத்ரத்ன்  மனமுதிர்ச்சியின்மையின் காரணமாக தான் தவறு செய்ததை உணர்கிறான். கர்ணனின் சிறப்பை நேரில் கண்டடையும்போதும், மற்றவர்கள் அவன் மேல் காட்டும் மதிப்பை அறிவதன் மூலம்  தன் வஞ்சத்தை விடுகிறான். அனைத்துக்கும் மேலாக ஜெயத்ரதன் தன்னை கர்ணனிடம் தன் மனதை திறந்து காட்டுகிறான். ஒருவர் அகத்தை ஒருவர் அறிந்துகொள்கின்றனர்.   இந்த சமாதனத்தை  அவர்களை சுற்றி இருக்கும் அனைவரும் இவர்களிடம் எதிர்பார்க்கின்றனர்.  இது ஒரு நிரந்தர சமாதானமாக உறுதிப்படுத்தப்படுகிறது.
  

 ஆனால் கௌரவர் பாண்டவர் சமாதானத்தின் பின்புலத்தில் இத்தகைய புரிதல்கள் இல்லை. அக்கணத்திய உணர்ச்சிப்பெருக்கில் அவர்கள் தழுவிக்கொள்கிறார்கள்.  ஆனால் ஒருவருக்கொருவர் செய்துகொண்ட விரோத நடவடிக்கைகள் எதுவும் பேசித் தீர்த்துக்கொள்ளப்படவில்லை. நடந்தது போகட்டும் என இறந்த காலத்தை மண்போட்டு மூடி அதன்மேல் அவர்கள் சமாதானம் நடக்கிறது.  அப்படி மூடப்பட்ட பகைகள் மீண்டு எப்போது வேண்டுமானாலும் சிறு தூண்டலில்   முளைத்து மேலெழும்பும் சாத்தியங்கள் உள்ளதாக இருக்கின்றன. துரியோதனன் தரப்பில் சகுனி போன்றவரும், பாண்டவர் தரப்பில் குந்திக்கும் இந்த சமாதானத்தில் ஐயங்களும் விருப்பின்மையும் இருக்கலாம். திரௌபதி,  பாண்டவர் தொடர்ச்சியாக அடையும் வெற்றிகள் போன்ற முள்பொதிந்த அங்கிகளை  பாண்டவர் அணிந்திருக்க, பீமனுக்கு நஞ்சூட்டலில் தொடங்கி வாரனாவத எரியூட்டல், என பல்வேறு கூரிய முட்களாலான அங்கியுடன் கௌரவர்கள் இருக்கிறார்கள்.   இந்த உறுத்தும் அங்கிகள் களையப்பட்டாமலேயே அவர்கள்  அணைத்துக்கொண்டது அவ்வளவு சௌகரியமானது அல்ல. அந்த அணைப்பு நீடிக்க முடியாமல் போவதற்கே சாத்தியங்கள் உள்ளன.  அந்த மெலிந்த சமாதானம் என்ற மான் மேல் பாய்ந்து தாக்கி கொன்றிட ஊழெனும்  வரிப்புலி பதுங்கி காத்திருப்பதாகவே நமக்கு புலப்படுகிறது

தண்டபாணி துரைவேல்