அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். நலமறிய ஆவல்.
வெண்முரசினை
ஓரளவிற்குத் தொடர்ந்து வாசித்தும் அவ்வப்போது அது குறித்து உங்களுக்குக்
கடிதமும் எழுதி வருகிறேன். வெண்முரசில் ஒரு சில இடங்களில் உயர்தர காட்சிகள்
உருவாகி நம் மனக்கண்ணை நிறைக்கின்றன.
இத்தகைய மனநிறைவை நான் பல இடங்களில் உணர்ந்திருக்கிறேன்.
கொஞ்சமாக
சொல்வதற்க்காக உதாரணமாக , மழைப்பாடலில் இளமையாக இருக்கும் குந்தி
சூரியனுடன் காதல் செய்வது, வெண்முகில் நகரத்தில் மலைகளின் மடியில்
பூரிசிரவஸின் பயணம், இந்திரநீலத்தில் காண்பிக்கப்பட்ட மதுரா நகரின்
மதுஆட்டம், வண்ணக்கடலில் சிறு வயது துரோணரின் அழுகை, வெண்முகில் நகரத்தில்
எழுதல் முதல் அமைதல் வரையிலான சகதேவனின் காதல் பற்றிய பக்கங்கள்,
காண்டீபத்தில் பெண்மைகொண்ட அர்ச்சுனன் என பலவற்றை குறிப்பிட எண்ணுகிறேன்.
வெய்யோனில்
அது போல ஒரு மனநிறைவை - கர்ணன் மீது மொய்க்கும் `இளைய கெளரவர்கள்` பற்றிய
இரண்டுநாள் காட்சியில் பெற்றேன். அத்தனைக் குழந்தைகளும் கர்ணனை
மொய்க்கையில் என் மேலும் ஊர்வதாக உணர முடிந்தது. இது போன்ற ஒரு காட்சியை
எவ்வகையிலும் வெய்யோனில் எதிர்பார்க்க முடியாது.
புதியவர்கள்
(நான் உட்பட) உங்களைத் தொடர்ந்து சந்திக்கவேண்டும் என்ற எண்ணத்தில்
கடிதங்களை எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த காட்சி
அதன் உருவகமாகவே வெளிவந்திருக்கிறதென எண்ணுகிறேன்.
ஒவ்வோரு
தேரிலும் போதுமான குழந்தைகள் ஏறியதும், தேரை ஓட்டிச் செல்வதே அவர்கள்
ஏறுவதைத் தடுப்பதற்கான முறை என்று சொல்வதைப் போல, ஈரோடு மற்றும் ஊட்டியில்
புதியவர்கள் தேர்வு நடைபெற்றுள்ளதும் அதையே எண்ண வைத்தது.
எப்படியே என்னையும் தேரில் ஏற்றிக் கொண்டுவிட்டீர்கள். நன்றி `பெரீந்தையே`!
அன்புடன்
கமலக்கண்ணன்.