அது தீர்க்கதமஸ் தான். தீர்க்க சியாமரின் உடலமைப்போடு இவர் ஒத்துப் போவதில்லை. மேலும் அவர் ஆயிரம் மைந்தரால் தினமும் அன்னமும் நீரும் ஊட்டப்படுவதில்லை. தீர்க்கதமஸ் எதையுமே பார்க்கவில்லை, அதனால் எதுவுமே தனக்குச் சொந்தமில்லை என்கிறார். ஒரு எல்லையில் இது ஒரு துறவு. எதுவுமே தனக்குச் சொந்தமில்லை என்ற நிலை. அதனால் அவருக்கு துயரங்களும் இல்லை. மறு எல்லையில் திருதா. அவரும் எதையுமே பார்க்கவில்லை. ஆனால் அனைத்தையுமே பார்க்கிறார். அவர் ஒருவரே ஒவ்வொரு இளைய கௌரவரையும் அணுகி அறிகிறார். அத்தனை பேரும் அவரை விட்டுப் பிரியப் போகிறார்கள் என்பதையும் அவரது ஆழுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கிறது. எங்கோ மனதின் மூலையில் தீர்க்கதமசின் பார்வையின் மூலம் இதை அறிகிறார். இவர்களின் மீதான பாசத்தில் இருந்து வெளிவர அம்முனிவர் இவரை அறைகூவுகிறார். ஆயினும் திருதாவால் முடியவில்லை. அத்தனை இளைய கௌரவர்களின் நடுவேயும் இருக்கும் தீர்க்கதமஸ் துரியன் வந்தவுடன் மறைவது இன்னும் நுட்பமான இடம். எத்தனை அறிவுரை இருந்தாலும் திருதா துரியனை விடப்போவதில்லை. அவனுக்காக யார் சொல்வதையும் கேட்கப் போவதில்லை. அதைத்தான் தீர்க்கதமசின் பின்வாங்கல் காட்டுகிறது.
இரு விழியிழந்தவர்கள். நடுவே ஒளியின் மைந்தன். இருவருக்கும் அவனால் தான் விடிவு என்பது தெரிகிறது. ஆனால் எவ்வாறு என்பது தெரியவில்லை. முழுமையான கையறு நிலை. அவர்களுக்கு மட்டுமல்ல, கர்ணனுக்கும் தான். எளிமையாக கர்ணன் மட்டும் உண்மையைத் தெரிவித்திருந்தால் பாரதப் போரே நடந்திருக்காது என்று பேசலாம். ஆனால் இந்த படிமம் அந்த நிலையின் மொத்தச் சிக்கலையும் உருவகிக்கிறது. ஜெ.... என்ன சொல்ல, அதகளம்!!!
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்