Wednesday, January 20, 2016

வெடிப்பு

ஒரு நிகழ்வை வீரியமாகக் காட்ட அருமையான உத்தியை இன்றைய வெண்முரசு காட்டியிருக்கிறது.  சுஜாதன் வெள்ளை உள்ளம்  இரு நாட்களாக விவரிக்கப்படுகிறது. அவன் அறிவு கூர்மை குறைந்தவன். அவனின் உள்ளத்தின் மழலை இன்னும் மாறவில்லை. உடலில்கூட இப்போதுதான் மீசை அரும்பத் தொடங்குகிறது, அவன் உணவு விருப்பம், போர்த்திறனின் போதாமை என எல்லாம் நமக்கு சிரிப்பைத்தூண்டுவதாக இருந்தன,  இணையாக கர்ணனின் அவமதிப்புகள் காட்டப்பட்டுவந்தன.  அவை   ஒரு சுருள்வில் மிகவும் அழுத்தப்பட்டு குறுக்குவதைப்போல கதையை ஒரு அழுத்தத்திற்கு கொண்டுசெல்கிறது.  அந்த அழுத்தம் சரபையிடம் சுஜாதன்  காட்டும் சீற்றத்தில்  விடுபட்டு கதை பெரும் விசையுடன் நம் அகத்துள் விரிகிறது.  சுஜாதன்  கர்ணன் மேல்கொண்ட பேரன்பு பேருருக்கொள்வதை காணும் தருணம் நம் மனதில் ஒரு  பேரனுபவமாக பதிகிறது,  இத்தகைய தம்பியரின் பேரன்பைக் கொண்டிருக்கும் கர்ணனின் அவமதிப்புகள் எல்லாம் வெறும் தூசுகள் என ஆகிவிடுகின்றன.   

  கதையுலகம் தரும் அனுபவங்களின் உச்சத்தை, இன்று நமக்கு பொங்கல் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. வெண்முரசு என்ற பெருமலைத்தொடரின் மற்றொரு சிகரத்தை இன்று நாம் காண்கிறோம்.

தண்டபாணி துரைவேல்