கர்ணனின் கூற்று மிக முக்கியமான ஒன்று : 'எங்களுக்கு நடுவே ஒருபோதும் சொல்லென ஆக முடியாத ஒன்றுள்ளது குழந்தை'. இருவரும் உளம் பரிமாறிக்கொள்ளவே இயலாமல் செய்யும் ஒன்று. இத்தனைக்கும் கர்ணன் கிருஷ்ணனுக்கு மூத்தவன். அவனுக்கு ஆணையிடும் இடத்தில் இருப்பவன். கர்ணனோ உயரத்தில் இருப்பவன். தன் ஒளியால் நிழல் விழும் பெரும்காட்டை மேலும் மேலும் இருளாக்கிச் செல்பவன். கிருஷ்ணனோ நிழலால் மற்ற தாவரங்களை வளர விடாமல் தரும் விருட்சங்கள் நிறைந்த அந்த காட்டை எரித்தாவது புதிய காடு வர வேண்டும் என்று விரும்புபவன். எப்படி உளம் பரிமாற முடியும்?
உண்மையில் இந்த கேள்வியை துச்சளையைக் கொண்டு கேட்க வைத்தமை ஜெவின் மேதமைக்குச் சான்று. நியாயமாக விதுரர் இக்கேள்வியைக் கேட்டிருந்திருக்க வேண்டும். அவருக்குத் தோன்றியிருந்தால் இவர்கள் சந்திப்பு நிச்சயம் நடந்திருக்கும். அரசு சூழ்தலில் வல்லவரான அவருக்கே இது தோன்றவில்லை. அனைவருமே அந்த சகோதரர்கள் இணைவுக்குப் பின் நிகழ்த்த சுமூகமான ராச்சிய பிரிப்பில் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்ததாக எண்ணி சற்று அயர்ந்து இருந்துவிட்டார்கள் போலும். இந்திரபிரஸ்தத்திற்குச் சென்று வரும் துரியனும், கர்ணனும் குரோதமும், வஞ்சமுமாக மீண்டு சூதாட்டம் நிகழ்ந்த பிறகே காலம் பிந்தியமை அவர்களுக்கு உறைத்திருக்கும். இங்கே துச்சளை அவள் பெண் என்பதால் தோன்றும் உள்ளுணர்விலேயே இந்த கேள்வியைக் கேட்கிறாள். காம்பில்யப் போரின் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்கியவள் இதைக் கேட்காதிருந்தால் தான் ஆச்சரியம்.
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்