Wednesday, January 20, 2016

சுஜாதன்



சுஜாதன் - இந்த பெயரில் ஒரு கௌரவர் இருக்கிறார் என்பதே தெரியாது. இதுவரை தெரிந்த பெயர்கள் என்றால் மூத்தவர் இருவரைத் தவிர துச்சலன், விகர்ணன் என இருவரே. வெண்முரசு வாயிலாக சற்று நெருக்கமான இன்னொரு பெயர் குண்டாசி. இவர்களோடு இன்று இணைந்து விட்டான் சுஜாதன். என்ன ஒரு வெளிப்பாடு. கௌரவர்களுக்கு அவையுணர்வு கிடையாது, அரசு சூழல் தெரியாது, எங்கு எப்படி பேச வேண்டும் என்றும் தெரியாது, விளையாட்டுப் பிள்ளைகள்.

ஆனால் நுண்ணுணர்வு உள்ளவர்கள். மானுட உணர்வுகளை புத்தியால் அல்ல உடல் மொழியால், மனதால் புரிந்து கொள்ளும் இயல்புள்ளவர்கள். முன்பு குடித்துச் சீரழிந்த குண்டாசி கூட பீமனின் அணைப்பில் இருந்த விலகலைச் சட்டென்று அடையாளம் கண்டுகொண்டதைப் போல. அது விலங்குணர்ச்சி. ஆதியுணர்ச்சி. மொழியால், நடைமுறைகளால் மழுங்கடிக்கப் படும் உணர்ச்சி. அந்த மொழிகளும் நடைமுறைகளும் கைவராததாலேயே இவர்கள் கூர்மையாகவே இருக்கிறார்கள். 

சுஜாதன் தான் அவமானப்படுத்தப் படுகிறோம் என்பதையும் உணர்ந்தே இருக்கிறான். நேரடியாக சுப்ரியை தன்னை அவமானப்படுத்துகிறாள் என்றே சொல்கிறான். இன்னும் குறிப்பாக அவள் தன்னை அவமானப்படுத்துவத்ர்குக் காரணம் தான் கர்ணனுக்கு அணுக்கமானவன் என்பதால் தான் என்றும் சொல்கிறான். அதை விட இன்னும் ஒரு ஆச்சரியத்தை நமக்கு அளிக்கிறான், சரபையைப் பற்றிய புரிதலில். சரபையைப் போலவே சுப்ரியை உதட்டைச் சுழிக்கிறாள் என்னுமிடத்தில் சுப்ரியைக்கும் கர்ணனுக்கும் இடையில் நிற்பது யார் என்பதை எளிதாகச் சுட்டிச் செல்கிறான். அது மட்டுமா, வந்த ஒரே நாளில் மிக அடிப்படையான வினாவான பிரியமில்லாமல் எப்படி கருவுற முடியும் என்று அனைத்தையும் உணர்ந்தவனாகத் தெரிகிறான். இந்த செய்திகளைத் தொகுத்து ஒரு அறிதலை அவனால் உருவாக்கிக் கொள்ள முடியாது. ஆனால் நிலைமையை கைப்புண் போல் தெளிவாக உணர முடியும். அதனாலேயே அவன் தன் அவமானங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறான். அதற்கு அவன் கூறும் காரணம், 'நீங்கள் அதை பெரிதாக எண்ண வேண்டியதில்லை மூத்தவரே. அவர்கள் என் மூத்தவரின் துணைவியல்லவா? என் அன்னையல்லவா?'. அவன் உண்மையில் அவமானமாக உணரவில்லை. அவமானமாக உணர்ந்திருந்தால் அங்கே அவள் தலை உருண்டிருக்கும். அதுவே அவன் செய்யக் கூடுவது. 

அப்படிப்பட்டவன் தான் தன் மூத்தவன் அவமானப்படுத்தப் படுகிறான் என்று உணர்ந்த உடன் கொதித்தெழுகிறான். பின் கர்ணனைத் தன் தமையனுடன் சேர்த்து தன் உள்ளக் கருவறையில் அல்லவா அவன் வைத்திருக்கிறான். தன் தெய்வம் அவமானப்படுவதை அவனால் தாங்க முடியவில்லை. அவன் அந்த அலங்காரி சரபையை ஒரு வழியாக்குவதை இன்று மட்டுமே ஒரு 10 தடவை படித்து விட்டேன். விதுரர் கூட அந்த இடத்தில் இவ்வளவு நேர்த்தியாக சொல் கோர்த்திருக்க முடியாது. 'இனி ஒரு முறை நீயோ உன் அரசியோ ஒற்றை ஒருசொல் கீழ்மையுரைத்தால், அச்சொல் உங்கள் அரண்மனைக்குள் எழுந்ததே என்றாலும், அதற்காக குருதியாலும் தீயாலும் பழி தீர்ப்போம்.' அங்கே ஒலித்தது துரியனின் குரல். உண்மையில் இந்த இடத்திலேயே அவள் சப்தநாடியும் ஒடுங்கியிருக்கும். 

இதைப் படிக்கையில் என்னுள் எழுத்த உவகையை உணர்கிறேன். அவள் வார்த்தையால் மட்டுமல்ல செய்கையாலும் கர்ணனை அவமானப்படுத்திக் கொண்டிருந்தவள். பொதுவாக சேடியர் அரசனுக்கு புறம் காட்டுவதில்லை. இந்த மூளியலங்காரி இருமுறையும் கர்ணனுக்கு முதுகு காட்டித் தான் செல்கிறாள். யோசித்துப் பார்த்தால் அவள் ஆணை அது இது என்றெல்லாம் சொன்னதை விட இந்த முதுகு காட்டல் தான் சுஜாதனைக் கொதிப்படைய வைத்திருக்கும். உடனடியாக அவன் அனைத்தையும் தொகுத்துக் கொண்டான்.

இறுதியில் கர்ணன் 'விழியற்ற பேரறத்தின் மைந்தன் நீ' என்று சொல்லும் போது விழியின்மை என்பது பல தளங்களில் அர்த்தம் கொள்கிறது. மிக மிக நிறைவான அத்தியாயம். 

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.