Wednesday, December 21, 2016

மகாநாராயணவேதம்



ஜெ

மகாநாராயணவேதம் என்று ராமாயணம் மகாபாரதம் பாகவதம் ஆகிய மூன்றுநூல்களை ஒன்றாகச்சேர்த்துச் சொல்வதுண்டு. ஐந்தாம் வேதம் என்றும் சொல்வார்கள். வேதத்தில் விஷ்ணு இல்லை. அதில் வரும் விஷ்ணு ஒரு ஆதித்யன் மட்டுமே. பின்னாளில் பிராமணங்களில் புருஷசூக்தத்திலிருந்து இந்த விளக்கத்தை ஆரம்பிக்கிறார்கள். மகாபாரதத்தை மட்டும் மகநாராயணவேதம் என்று சொல்வதுண்டு. வேதங்களில் இருந்து இவற்றைநோக்கிய பயணம்தான் இதில் சொல்லப்படுகிறது என நினைக்கிறேன்

சுவாமி

ராதை



ஜெயமோகன்

இந்திரன் தன்னை விரும்பியே மகாநாராயண வேதத்துக்கு அடிபணிவது அர்ஜுனன் பெண்ணாக, மகளாக வந்து நின்றதனால்தான் என்பது அற்புதமான ஒரு கற்பனை. முக்கியமான வரி சுயநலத்தின் களங்கமின்மை என்பது. குழந்தைகளின் சுயநலம் போல நம்மை மகிழ்விப்பது பிற ஒன்றும் இல்லை.

பெண்ணாக வந்து நின்றிருக்கும் அர்ஜுனன் ராதையாக தன்னை உணர்வது அழகிய உருவகம். ராதை தவிர வேறு எவருமே அவனுக்குப்போட்டி இல்லை.

ஜெயராமன்


முதல் தெய்வம்



அன்புள்ள ஜெ,

"மாறாக்கன்னிமை கொண்ட முதல் தெய்வம் அமர்ந்திருக்கும் முக்கடல் முனம்பு. இப்பாரதவர்ஷம் அக்கன்னியின் தவத்தால் ஆளப்படுகிறது" - இந்த வரிக்காக என் முழு அன்பும் உங்களுக்கு உரித்தாகுக. காலையில் இருந்தே மனமும் உடலும் பெருமிதத்தால் விம்மிக் கொண்டிருக்கிறது. என்ன இருந்தாலும் நம்ம ஊரு அம்மையில்லா?

குமரி மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அக்கன்னியைப் பற்றிய ஒவ்வொரு பதிவு இருக்கும். எனக்கும் மிக அணுக்கமான அன்னை அவளே. அந்த மந்தகாசப் புன்னகையைக் காணும் போதெல்லாம் தனியொரு உலகில் அவளை மட்டுமே நோக்கியிருக்கும் ஓர் அந்தரங்கத் தருணம் வாய்ப்பதுண்டு. கிராதம் வாயிலாகக் காணும் அவளும், அய்யனும் தெற்கிலும் வடக்கிலுமாக இருந்து இப்பெருநிலத்தை ஆள்கிறார்கள் என்னும் எண்ணம் தரும் பரவசம் அலாதியானது. நன்றி, நன்றி ஜெ....

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்

Tuesday, December 20, 2016

பெண்ணாதல்



ஜெ

அமராவதியில் இன்று வந்த அத்தியாயத்தில் அர்ஜுனன் ஊர்வசி சாபத்தால் பெண்ணாக மாறி அவைபுகும் காட்சி அபாரமான கற்பனை. மகாபாரதத்தில் ஊர்வசி தன் அன்னை என்பதனால் அவளை அவன் விலக்கினான் அவள் சாபம் இட்டு அதற்கு மீட்பும் அளித்தாள் என்று மட்டும்தான் உள்ளது. நீங்கள் அதை பல வகையில் மீட்டி விரிவாக்கிவிட்டீர்கள். ஆணுக்கும் பெண்ணுக்குமான ஒரு பெரிய நாடகமாகவே அது உள்ளது

அதன் உச்சியில்தான் நீ பெண்ணாகி என் தாபத்தை அறி என ஊர்வசி சொல்வது. பெண்ணானதுமே அவன் அதை அடைய ஆரம்பித்துவிட்டான். அந்த மாற்றம் அவனிடம் நிகழ்வதும் மகத்தான சித்தரிப்பு

ஷண்முகவேலின் ஓவியமும் அற்புதம்
சாரங்கன்

அமராவதி ஓவியம்




ஜெ

இன்று வெளிவந்த ஷண்முகவேலின் ஓவியம் பிரமிக்கச் செய்தது., என்ன சொல்ல? அமராவதியின் பிரம்மாண்டம் அந்த ஒற்ரைத்தூணிலேயே தெரிந்தது. அதில் ஒரு சிறு எறும்பு போல செல்கிறான் அர்ஜுனன். ஆனால் என்ன ஒரு கம்பீரம். அபாரம்

முருகேஷ்

Monday, December 19, 2016

கனவு வலை



அன்புடன் ஆசிரியருக்கு


கிறிஸ்டோபர் நோலன் எனக்கு மிகவு‌ம் பிடித்த இயக்குநர். குறிப்பாக அவருடைய திரைப்படங்களின் வசனங்களுக்காகவே பலமுறை அவர் திரைப்படங்களை பார்ப்பேன். இன்செப்ஷன் மற்றும் இன்டெர்ஸ்டெல்லார் திரைப்படங்களின் வசனங்களுக்கென்றே மீண்டும் மீண்டும் அவற்றைப் பார்க்கிறேன். அதிலும் மிக அதிகமான பார்வையாளர்களை குறி வைத்து எடுக்கக்கூடிய திரைப்படங்களில் சாத்தியமான அனைத்து நுணுக்கங்களையும் கொண்டு வருவது கிறிஸ்டோபர் நோலனின் தனித்திறன் என்றே தோன்றுகிறது. இன்செப்ஷனில் அவர்களின் வேலைக்கான முன் தயாரிப்புகளைக் கூட கனவில் தான் விவாதிக்கிறார்கள் என்பதை மூன்றாம் முறை பார்த்த போதே புரிந்து கொள்ள முடிந்தது. ஏனெனில் கனவில் அனைவரும் கோட் அணிந்திருப்பார்கள். அது போலவே இன்டெர்ஸ்டெல்லாரில் ஜெசிகா சாஸ்டைனுக்கும் மைக்கில் கேனிக்கும் நடக்கும் உரையாடல்களையும் அடுத்த கிரகத்திற்கு செல்லலாமா என்பது குறித்து நடக்கும் உரையாடல்களும் அவ்வளவு நுண்மையானவை. 


இன்செப்ஷனை விட சிக்கலான கனவு வலையை கிராதம் விரித்திருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே சிதறிக் கிடக்கின்றன. இக்கதை யாரால் யாரிடம் சொல்லப்படுகிறது என்பதில் தொடங்கி கிருஷ்ணனின் மாற்றம் அர்ஜுனனின் அகத்தில் நடைபெறும் மிக நுண்ணிய மாற்றங்களை சொல்லிச் செல்கிறது. பன்னிரு படைக்களத்தை விட சிக்கலான பிரதி. சில நாட்களுக்கு முன் "உன்னதமாக்கல்" என்ற உங்கள் கட்டுரையை படித்தேன். உன்னதமாக்கலின்  அவசியமும் அழகும் புரிகிறது. கூரை வளைவுகளில் யாரும் பார்க்காத இடத்தில் செதுக்கப்பட்ட சிற்பங்களின் அழகு. கண்டு சொல்ல வியந்து நோக்க யாரும் இல்லையெனினும் அவை இருக்கும். அர்ஜுனனின் அகத்தில் நிகழ்பவை கிருஷ்ணனுக்காக தன்னை தயாரிக்கும் அர்ஜுனன் புராணங்களின் கட்டுடைப்பு தலைகீழாக்கம் என எத்தனை வார்த்தைகளில் சொன்னாலும் அத்தனைக்கும் வெளியே தான் கிராதத்தை நிறுத்த வேண்டி இருக்கிறது. 

வெண்முரசின் ஒவ்வொரு நாவலும் முந்தையதை விட சிக்கலானதாக ஆழம் மிக்கதாக முந்தையதை விட குறுகிய காலத்தில் நடைபெறுவதாக உள்ளது. அவற்றை எதிர் கொள்வதற்கான பயிற்சியையும் வெண்முரசே அளிக்கிறது. ஒருவேளை வெண்முரசின்  ஒரு பிரதியை அதன் அழகும் நுணுக்கமும் குறையாமல் அதன் உள்ளோடும் உட்பிரதியையும் சிதைக்காமல் படமாக்க முடியும் என்றால் அது நோலனால் மட்டுமே ஆகக்கூடியது. அவரும் இலக்கியம் கற்றவர் தானே!
அன்டன்
சுரேஷ் ப்ரதீப்

Sunday, December 18, 2016

மாற்றம்






ஜெ

பன்னிரு படைக்களம் முதல் கிராதம் வரை ஒரு முக்கியமான மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதற்கு முன் கதையோட்டமே வாசிப்பை கொண்டுசெல்வதாக இருந்தது. நீலம் மட்டுமே விதிவிலக்கு. இந்திரநீலத்தில் சில பகுதிகள். மற்றபடி ஒரு ஓட்டம் இருந்தது. இப்போது ஒருவகையில் கவிதைபோல வரிவரியாக வாசிக்கும்படி இருக்கிறது. ஆனால் ஒரு வேகமும் இருக்கிறது. வாசித்தபின் மீண்டும் மீண்டும் வாசிக்கவேண்டும். அப்போதுதான் ஓரளவேனும் ஒரு புரிதல் ஏற்படும்.

இந்த அத்தியாயங்களை ஸ்க்ரோல் பண்ணி வாசிப்பவர்களும் ஒருமுறை மட்டும் வாசிப்பவர்களும் எவரிடமும் விவாதிக்காதவர்களும் எதையுமே புரிந்துகொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன். இதை ஒரு சிறப்பாகவே சொல்கிறேன். இதுவரை இந்நாவலை வாசித்தாயென்றால் இதை உன்னால் வாசிக்கமுடியும் என நீங்கள் சொல்வதுபோல உள்ளது இது

செல்வராஜ்

கீதை



ஜெ

வெதங்களுக்கும் கீதைக்குமான இந்த உவமை மிக அற்புதமானது. நான் சொற்பொழிவுகள் செய்து வருபவன். கீதையைப்பற்றி பேசுவேன். இந்த வரியை நான் இனி விடவே முடியாது என நினைக்கிறேன்

வெயிலொளியை பளிங்குருளையால் குவிப்பதுபோல 
அவன் வேதவிரிவை ஒற்றைமெய்மையென்றாக்குகிறான். 

அந்த வரியைத் தொடர்ந்து கீதையை மிகச்சரியாக வர்ணிக்கும் அடுத்தவரி வந்துவிடுகிறது

அது சுடர். எரித்தழிப்பதும் கூட.

கீதையைப்புரிந்துகொள்ள ஆப்தவாக்கியங்கள் போல உதவகின்றன இவை. இத்தனை நுட்பமான வரிகள் கதையோட்டத்தில் சாதாரணமான பேச்சாகக் கடந்துசெல்கின்றன. நானே எவ்வளவு கவனிக்காமல் விட்டிருப்பேன் என்றுதான் நினைக்கிறேன்

வெங்கடராமன்

பெண்






ஜெமோ

ஊர்வசிக்கும் அர்ஜுனனுக்குமான உரையாடல் நுணுக்கமான முறையில் பாலுறவின் பல தளங்களைச் சொல்லிச் செல்கிறது. சும்மா உரையாடுகிறார்கள் என்று மட்டும் எடுத்துக்கொண்டால் அதைக் கவனிக்கமாட்டோம். பலவரிகள் முக்கியமானவை

உதாரணமாக இந்த வரி

அவனை ஒவ்வொரு கணமும் சீண்டி உயிர்ப்பிக்கும் ஆணவத்தின் துளியொன்றை தானும் கொண்டிருப்பவளே நீங்கா விருப்பை அவனில் உருவாக்குகிறாள் அவன் அவள் ஊரும் வன்புரவி. பசும்புல்வெளியென்றும் பின்தொடையில் எப்போதிருக்கும் சவுக்கின் தொடுகையென்றும் தன்னை உணரச்செய்பவள்

இப்படிச் சொல்பவள் ஊர்வசி. அவள் அவனுடைய உள்ளே உறைந்த பெண். அவனுக்குள் இருந்து எழுந்து வந்து நிற்பவள்.  அவ்வாறென்றால் அவனைச் சீண்டும் பெண்ணை அவனே உருவாக்கிக்கொண்டிருக்கிறான்

ஜெயக்குமார்

ஒருவரி





ஜெ

இந்த ஒருவரிக்காக உங்களுக்கு நூறு முத்தம்.

தோள்களின் தாமரைநூல் போன்ற வளையக்கோடுகள்.
பொற்சங்கிலி ஒன்றின் ஒளிமட்டும் விழுந்ததுபோல.

கணுக்கணுவாக பெண்ணை வர்ணித்தவர்கள் கூட சொல்லாத ஒன்று பெண்ணுடலில் கழுத்தில் அணிபோல அமையும் மேன்மையான மலர்க்கோடு. அதை இப்படி வர்ணிக்கமுடியும் என்றால் நீர் மலரினும் மெல்லியதன் செவ்வி அமைந்தவர் சரியா?

சுப. முருகானந்தம்

இடைவெளி






ஜெ,

ஆணுக்கும். பெண்ணுக்கும் இடையேயான அந்தரங்கத்தருணத்தில் ஏன் பேச்சு இயல்பாக நின்று அமைதி ஏற்படுகிறது என்று எழுதப்பட்ட அந்த பத்தி அற்புதமானது. இருவரும் சென்று சேர்ந்தே தொடும் உண்மை ஒன்று எழுந்து வருகிறது. அதைத் தொட்டதும் குளிர்ந்து அமைதியாகிவிடுகிறார்கல்

அதேபோல அந்த முள். அத்தனைக்கும் அடியில் மானுடனாக அர்ஜுனன் கொண்டு வருவது அது. அதை அவன் இழக்கவே முடியாது.

சாரங்கன்

Saturday, December 17, 2016

அகப் பயணம்



கிராதம் முழுக்க முழுக்க அர்ச்சுனனின் அகப் பயணம். ஒரு வித பயணத்தை வெவ்வேறு இடங்களை நோக்கி அவன் உடலும் செய்கிறது. உடலின் பயணம் ஒரு எல்லையில் முடிகையில் அவன் அகம் அப்பயணத்தைத் தொடர்கிறது. இவையனைத்திலும் தான் இளைய பாண்டவன் என்ற ஒரே ஒரு தன்னுணர்வு மட்டும் இல்லாமல் போனால் அவன் முழுப் பித்தாகித் தொலைந்திருப்பான். வாருணத்தில் அவன் நிலை அது தான். அவன் உடல் குறிகளை அறிந்த ஒரு பீத வணிகர் அவனைக் கொள்ளவில்லைஎன்றால் அவன் மீண்டிருக்க இயலாது.

ஒரு வகையில் யோகத்தில் அமர்பவர்கள் எதிர்கொள்ளும் மனநிலைகள் தான் இவை. 'schizophrenia/psychophrenia', 'bi polar disorder / maniac depressiveness' போன்ற மனோ வியாதிகளின் வழியாகப் பயணம் செய்வார்கள். இருப்பினும் கூடவே தான் யார் என்னும் தன்னுணர்வும், ஒரு குருவின் வழிகாட்டலும் இருந்து கொண்டே இருந்தால் மீண்டு விடுவார்கள். எனவே அவர்கள் அனுபவம் இந்த மனோவியாதிகளின் அறிகுறிகளோடு கூடிய ஒரு ஆன்மீக அறிதலாகிறது. இதைத் தான் கிராதத்தின் முதல் பகுதியான 'கரி பிளந்தெழல்' யோகியரின் வானத்தில் இரு நிலவு என்றும், காவியத்தில் தொலைபவர்களுக்கு அவர்களின் தன்னுணர்வு மட்டுமே துணை வரும் என்ற பொருளில் ஒரு நிலவு எனவும் சொல்கிறது.

 இதையே கிராதத்தின் வடிவமாக அமைத்தமை ஜெ வின் 'craftmanship' ன் உச்சம். ஒரு வாசகன் இவையனைத்தும் அர்ஜுனன் மனதில் நிகழ்கிறது, அவனே தன்னுடன் நிகழ்த்திக் கொள்ளும் ஒரு வாத பிரதிவாதங்கள் மற்றும் அதனூடான ஒரு அறிதல் என்ற சரடு உடன் வராவிட்டால் மிக எளிதாக கிராத்தில் தொலைந்து விடுவான்.

மேலும் இன்றைய இந்திரன் மற்றும் பாலியுடனான விவாதம் வெண்முரசின் சிறப்பான உரையாடல்களில் ஒன்று. உண்மையில் வாழ்வின் சிக்கல்கள் இருளாகத்தான் இருக்கும் என்பது பொதுவான கருத்து.மாறாக அர்ஜுனன் தன் வாழ்வின் முக்கியமான சிக்கலை ஒளியில் கண்டடைகிறான். அவன் எடுக்கும் முடிவை அவனை எடுக்க வைத்தது எது? அக்கணத்தில் தோன்றிய ஒன்றே என்பதைத் தவிர எந்த பதிலும் கிடைக்கவில்லை. எண்ணங்கள் முடிவுகளாக, செயல்களாக வடிவம் பெறும் கணத்துக்குப் பின்பே அவற்றிற்கான காரணங்கள் உருவாகத் துவங்குகின்றன என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்த ஒரு தருணம். 

அருணாச்சலம் மகராஜன்

இரு சிறகுகள்



ஒரு பறவையின் இரு சிறகுகள் பார்த்தனும் இளைய யாதவனும் என்ரு அறிந்திருந்தேன் எனினும் ஆசிரியரையும் அருமை மகனையும் உடன்பிறந்தவரகளையும் ஏன் நஞ்சு  புகுந்து துடித்தணையும் கருவிலிருக்கும் அபிமன்யூவின் மகனின்  முடிவயும் கூட கண்டபின்னரும் //என் தோழரிடமிருந்து விலகமுடியாது.
 நான் அவரன்றி பிறிதல்ல// என்கிறான் பார்த்தன்
என்ன ஒரு தோழமை இது?,  உடல் மெய்ப்புக்கண்டது போர்க்களக்காட்சிகளில்.

லோகமாதேவி

Friday, December 16, 2016

இந்திரனும் ராமனும் கிருஷ்ணனும்


ஜெ

ராமனாகப் பிறந்தவன்தான் தன்னை வெல்ல தன் இயல்புகளை எல்லாம் எடுத்துகொண்டு கிருஷ்ணனாகப்பிறந்துள்ளான் என இந்திரன் சொல்லும் இடம் மிக நுட்பமானது. வரலாற்றைப்பார்த்தால்  இந்திரன் உருமாறித்தான் கிருஷ்ணனின் உருவம் உருவாகி வந்திருப்பதைக் காணமுடியும்.  இந்திரனின் எல்லா சிறப்புத்தன்மைகளும் கிருஷ்ணனுடையவையாக ஆகிவிட்டன. தந்திரமாகப்போர் செய்வது, மாறுவேடத்தில் போய் ஏமாற்றிவிடுவது, பெண்களைக் கவர்வது எல்லாம் உண்மையில் இருவருக்கும் பொதுவான குணங்களாக உள்ளன. 

இந்திரன் பிராமணனாகச்சென்று வருணனையும் விருத்திரனையும் ஏமாற்றுவதைப் பார்க்கும்போதுகிருஷ்ணனும் இதேபோல கர்ணனை ஏமாற்றியதை நினைத்துக்கொண்டேன். இந்த மாற்றம் இந்து மதத்தில் நடந்த மிகப்பரிய தலைகீழ் மாற்றம். இதை நிகழ்த்தவே மகாபாரதப்போர் நடந்தது என நீங்கள் சொல்லியிருப்பது அற்புதமான ஒரு சரித்திர தரிசனம்

செம்மணி அருணாச்சலம்

கதைகள்

 
 
அன்பு ஜெ,,

சில விடுபட்ட பகுதிகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்..


நளதமயந்தி சரித்திரம்- வியாசரின் கை வண்ணம் மிக அருமை.தங்கள் எழுத்தில் தனியாகக் கூட எழுத வேண்டிய காவியம்.


யுதிஷ்டிரன் சூரியனிடம் பெற்ற அக்ஷய பாத்திரம் (கொஞ்சம் லேட்..என்னச் சொன்னேன்)

 
அர்ஜுனனுக்கு ஊர்வசி சாபம்,அகஸ்தியர் கதை, பகீரதன் கதை,ரிஷ்யசிருங்கர் கதை,பீமனுக்கு அனுமன் வரம், சத்யவான் சாவித்திரி இன்னும் கந்த புராணம் ஏன் இராமயணம் கூட  உள்ளது வன பர்வத்தில்.. 

 
ஜெயத்ரதன் துரோபதியை கடத்தும் படலம்  இனிமேல்தான் வரும் என நினைக்கிறேன். எல்லாவற்றையும் சொல்ல முடியுமா.. உங்களை விட எனக்குத் திகைப்பாக இருக்கிறது.

 
அன்புடன்,
இராஜேஷ்கண்ணன்.இராம்








அன்புள்ள இராஜேஷ்

வெண்முரசு அமைப்பை நீங்கள் கவனிக்கலாம். மகாபாரதத்தில் உள்ள கதையோட்டம் இதில் தொடரப்படவில்லை. மகாபாரதத்தில் துணைக்கதைகள் அடுக்கப்பட்டிருப்பதற்கு எந்த ஒழுங்கும் இல்லை. அவை பெரும்பாலும் பிற்சேர்க்கைகள். இத்தருணத்தில் இவர் இப்படிச் சொன்னார் - இதுவே கதையின் வடிவமாக அதில் உள்ளது

ஆனால் வெண்முரசு துணைக்கதைகளை ஒரு பெரிய தத்துவ விவாதத்தின் பகுதியாக அர்த்தபூர்வமாகத் தொடுக்க முயல்கிறது. இதன் வடிவம் இப்படித்தான் உருவாக்கிக்கொள்ளப்படுகிறது. ஆகவே பலகதைகள் முன்னரே வந்துவிட்டன என்பதைக் காணலாம். உதாரணமாக சத்யவான் சாவித்ரி கதை முன்னரெ சொல்லப்பட்டுவிட்டது

ஜெ