Monday, December 5, 2016

வாளெனும் காலம்:



நாளென ஒன்று போல் காட்டி உயிர் ஈரும் வாளெனும் காலம்:

வெண்முரசில் வரும் குறள்களைத் தனித்திரியாகவே தொகுக்கலாம். தற்போது கிராதம் 45 ல் விருத்திரன் கூற்றாக ஒரு குறள் வந்திருக்கிறது. ‘அரசே, இந்திரனின் படைகள் அணுகிவிட்டன. நகருக்குள் அவை நுழைந்துகொண்டிருக்கின்றன” என்றார் அமைச்சர். “இனி ஒருகணம்கூட நமக்கு இல்லை” என்று கூவினார். “ஆம், காலம்…” என்று விருத்திரன் சொன்னான். “நாள் என ஒன்றுபோல் காட்டி வாளென்று வருவது. அவ்வாறே ஆகுக!”’. இதே குறள் சொல்வளர்காட்டிலும் வந்துள்ளது. (சொல்வளர்காடு 55). தன் கையில் கிடைத்த நாரையின் இறகை வைத்து அதன் இடத்தை உசாவும் தருமனிடம், அந்த சூதன், ‘அரசே, இதோ இதேபோல ஒரு சிற்றோடை. அது வேகவதி. அதிர்ஸ்யை என்றும் அதற்கு பெயர் உண்டு. வாள் போல வளைந்தது. நாள் என ஒன்றுபோல் காட்டி உயி்ர் ஈரும் ஒளி கொண்ட வாள். அதற்கு அப்பால் நின்றிருந்தான் வேடன். வில்நாண் இழுத்து அதில் அம்புபூட்டி இழுத்து ஆண்பறவையை குறிவைத்தான். அந்தச் சிற்றோடைக்கு இப்பால் அமர்ந்து மெய்மைதேடி விழிமூடியிருந்தான் அவன் நூற்றுவர்வழிப் பெயரன். 

காலம் என்பதை உயிர் எடுக்கும் வாள் என உருவகப் படுத்திய விதம் அலாதியானது. அந்த காலம் ஒரு வேகமான ஆறாக ஓடுகிறது என்கிறது வெண்முரசு. வேகவதி என்கிறது. அது அதிர்ஸ்யை என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது அ-திர்ஸ்யை : காண இயலாதது. ஆம், காலம் என்பதைக் காண இயலுமா என்ன? ஆயினும் இப்புடவியை நோக்கின் அது ஒரு சிற்றோடை தான் என்கிறது வெண்முரசு. துவக்கமும், முடிவும் கொண்ட ஒரு ஓடை. ஏதோ ஓர் பேர் ஒழுக்கில் சென்று இணைவது. வேடன் இருக்கும் இடத்தில் தான் விருத்திரனும் இருக்கிறான். அவர்களுக்கு ஓடை தெரியவில்லை. ஒரு துளி தான் தெரிகிறது. எனவே கணம் கணமேன அதை உணர்கிறார்கள். எனவே காலம் வாளென அவர்கள் உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறது, ஒரு முழு வெண்ணைக் கட்டியைத் துண்டு துண்டாக வெட்டும் கத்தி போல. அதே வேடன் மெய்மை அறிந்து இக்காலத்தையே ஓர் ஒழுக்காகக் காணும் இடத்தில் இருக்கையில் முழுக் காலமும் ஒரு கணமெனச் சுருங்கிவிடுகிறது, அந்த ஓடையின் துவக்கமும் முடிவும் தெரிந்து விடுகிறது. அக்கணத்தில் அவன் படைத்த காவியம் அக்காலம் இருக்கும் வரை எஞ்சுகிறது. அக்குறள்

நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும்;
வாள் அது உணர்வாற் பெறின்.

நிலையாமை என்னும் அதிகாரத்தில் வரும் குறள் இது. நிலையாமை என்பதில் காலத்தைக் கொண்டு வந்த வள்ளுவரின் மேதமையை என்னவென்று சொல்வது?! மிக மிக எளிமையாக, பொருள் அறியாமல் பொருள் சொல்லப்பட்ட குறள்களில் இதுவும் ஒன்று. இதைக் குறித்த ஜெ வின் பார்வை தனித்துவமானது.
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்