கிராதம் முழுக்க முழுக்க அர்ச்சுனனின் அகப் பயணம். ஒரு வித பயணத்தை வெவ்வேறு இடங்களை நோக்கி அவன் உடலும் செய்கிறது. உடலின் பயணம் ஒரு எல்லையில் முடிகையில் அவன் அகம் அப்பயணத்தைத் தொடர்கிறது. இவையனைத்திலும் தான் இளைய பாண்டவன் என்ற ஒரே ஒரு தன்னுணர்வு மட்டும் இல்லாமல் போனால் அவன் முழுப் பித்தாகித் தொலைந்திருப்பான். வாருணத்தில் அவன் நிலை அது தான். அவன் உடல் குறிகளை அறிந்த ஒரு பீத வணிகர் அவனைக் கொள்ளவில்லைஎன்றால் அவன் மீண்டிருக்க இயலாது.
ஒரு வகையில் யோகத்தில் அமர்பவர்கள் எதிர்கொள்ளும் மனநிலைகள் தான் இவை. 'schizophrenia/psychophrenia', 'bi polar disorder / maniac depressiveness' போன்ற மனோ வியாதிகளின் வழியாகப் பயணம் செய்வார்கள். இருப்பினும் கூடவே தான் யார் என்னும் தன்னுணர்வும், ஒரு குருவின் வழிகாட்டலும் இருந்து கொண்டே இருந்தால் மீண்டு விடுவார்கள். எனவே அவர்கள் அனுபவம் இந்த மனோவியாதிகளின் அறிகுறிகளோடு கூடிய ஒரு ஆன்மீக அறிதலாகிறது. இதைத் தான் கிராதத்தின் முதல் பகுதியான 'கரி பிளந்தெழல்' யோகியரின் வானத்தில் இரு நிலவு என்றும், காவியத்தில் தொலைபவர்களுக்கு அவர்களின் தன்னுணர்வு மட்டுமே துணை வரும் என்ற பொருளில் ஒரு நிலவு எனவும் சொல்கிறது.
இதையே கிராதத்தின் வடிவமாக அமைத்தமை ஜெ வின் 'craftmanship' ன் உச்சம். ஒரு வாசகன் இவையனைத்தும் அர்ஜுனன் மனதில் நிகழ்கிறது, அவனே தன்னுடன் நிகழ்த்திக் கொள்ளும் ஒரு வாத பிரதிவாதங்கள் மற்றும் அதனூடான ஒரு அறிதல் என்ற சரடு உடன் வராவிட்டால் மிக எளிதாக கிராத்தில் தொலைந்து விடுவான்.
மேலும் இன்றைய இந்திரன்
மற்றும் பாலியுடனான விவாதம் வெண்முரசின் சிறப்பான உரையாடல்களில் ஒன்று.
உண்மையில் வாழ்வின் சிக்கல்கள் இருளாகத்தான் இருக்கும் என்பது பொதுவான
கருத்து.மாறாக அர்ஜுனன் தன் வாழ்வின் முக்கியமான சிக்கலை ஒளியில்
கண்டடைகிறான். அவன் எடுக்கும் முடிவை அவனை எடுக்க வைத்தது எது? அக்கணத்தில்
தோன்றிய ஒன்றே என்பதைத் தவிர எந்த பதிலும் கிடைக்கவில்லை. எண்ணங்கள்
முடிவுகளாக, செயல்களாக வடிவம் பெறும் கணத்துக்குப் பின்பே அவற்றிற்கான
காரணங்கள் உருவாகத் துவங்குகின்றன என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்த ஒரு
தருணம்.
அருணாச்சலம் மகராஜன்