Sunday, December 4, 2016

நித்ரா



அன்புள்ள ஜெ.
பலம், கர்மம், ஆசுரம், கலை, ஆணவம், விழியின்மை, தன்னை நோக்காமை, முக்குணங்கள் என்று விரிந்துச்சென்ற விரித்திரன் கதையை ஒரு சுழற்று சுழற்று அள்ளிப்பிடித்து நித்ரா என்னும் ஒரு சின்ன ரப்பர்பேண்டில் மாட்டித்தொங்கவிட்டு காமக்குரோதமோகம் என்னும் முப்பிரியாக ஆக்கி பிண்ணி முடித்து மயக்கம் என்று காட்டுகின்றீர்கள். 

பலத்தில் இருந்து கர்மம், கர்மத்தில் இந்து மகாவீரியம், மகாவீரியத்தால் ஆணவம், ஆவணத்தால் கண்ணீர், கண்ணீரால் விழியற்ற மூர்க்கம், மூர்க்கத்தால் தன்னை நோக்க மும்முகம், மும்முத்தால் கற்பனைக்கு எட்டா எல்லையற்ற விரித்தி. விரித்தி நின்றுவிடும் இடம் நித்திரை.

நித்திராதேவி வேண்டாமல் கிடைக்கும் ஒரு வரம். வேண்டாமல் கிடைக்கும் வரமாக இருப்பதாலேயே அவள் வேண்டியும் அகலாத சாபமும்.  அவள் வரத்திற்கு உரிய அன்னையாகவும், சாபத்திற்கு உரிய பேயாகவும் இருமுகம் கொண்டவள். அவள் அகல்க அகல்க அகல்க என்ற அன்னையாக வரும்போதே அமைக அமைக அமைக என்று சொல்லும் பேய்முகத்தை கண்டவன் பிழைக்கின்றான். இல்லையே அவள் பால்போல் வெண்மையாக வந்து விடம்போல நீலமாகி நிற்கின்றாள். கிராதம் அவள் இருமுகத்தை காட்டும் இடத்தில் வெடித்து மலர்கிறது.

நித்ராதேவி என்னும் ஒற்றைச்சொல்லுக்குள் இருக்கும் பெரும் கருணையை கோரமுகத்தை அவள் புரவியை வியாதியை விடத்தை எடுத்துவைக்கும்போது வாழ்க்கை அதன் திசைவெளியில் படர்ந்து விரிகிறது.

நித்ராதேவியில் இருந்து எழும் சோம்பலை விரித்திரன் இடம் காட்டும்போது விரித்திரனை திரும்பிப்பார்க்க வைக்கின்றீர்கள். இது விரித்திரனின் புதிய பரிணாமம். விரித்திரனின் தன்னை நோக்காத மும்முகன் என்பது இதுதான். இந்த தன்னை நோக்காத முகத்தைதான் கௌமாரனும் இந்திராணியும் பார்க்கிறார்கள்.  அவர்கள் பார்த்ததை சொல்லாக அவன் முன் வைக்கிறார்கள். மும்முகனாக அமையும் விரித்திரனுக்கு வாழ்க்கையாக அமையும் சொற்கள் சொற்களாகவே இருக்கின்றன. இந்திராணியின் சொல்லும் கௌமாரன் சொல்லும் தோற்கும் இடம் இது என்றால் நாரதர் சொல் வெல்லும் இடம் நோக்கி திரும்புகின்றது நம் பார்வை.

விரித்திரன் இடம் இருந்த மயக்கம் தூக்கம் இந்திரனிடமும் இருக்கிறது. விரித்திரன் இடம் இருக்கும் மயக்கம் இனி திசை இல்லை என்ற வெற்றி மயக்கம் அகம் ஆழம் அற்ற இடமாக இருக்கும் மயக்கம். இந்திரனிடம் இருக்கும் மயக்கம் தூக்கம் எது திசை என்று தெரியாத தோல்வி மயக்கம். அகம் நிறையாததால் வந்த மயக்கம். திசை தெரியாதவன் திசை தெரிந்த குருவை திசைகாட்டியாக பயன்படுத்துகின்றான். இந்திரனுக்கு நாரதர். திசை இல்லை என்று நம்புபவனுக்கு திசைக்காட்டியாக வருவது அவன் கண்ட திசையைவிட குறைவான திசை அறிந்த இன்பமும் பலமும். நாரதர் இந்திரன் தலையில் ஏறி கொட்ட முடிகிறது. இந்திராணியும் கௌமாரனும்  அவன் செவிவரை காற்றாகத்தான் செல்லமுடிகிறது. இரண்டையுமே இருவேறு நிலையில் நின்று படம்பிடிக்கிறது கிராதகம்.

விரிந்து செல்லும் ஆற்றல் விண்ணை முட்டும்போது அதை வந்து சூழும் காமம் குரோதம் மோகம என்னும் முப்பட்டக கண்ணாடிக்குள் மாட்டி பலவண்ணம் காட்டி மயங்கி மயங்கி நித்திரையில் விழுந்து ஆற்றல் இழுக்கிறது.

யானையின் ஆற்றல் இருந்து என்ன? சிங்கத்தின் ஆண்மை இருந்தென்ன? பாம்பின் சீற்றம் இருந்தென்ன? பறவையின் சிறகிருந்து என்ன? இந்திராணி இருந்து என்ன?  

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து-என்கின்றார் திருவள்ளுவர்.

நாரதர் போன்ற குரு கிடைக்கையில் இந்திரன்போன்றவர் விழித்துக்கொள்கிறார்கள். 

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.