அன்புள்ள ஜெ. வணக்கம்.
கர்மன், பலன் திரிசிரஸ் விருத்தாசுரன் என்று விரிந்துச்செல்லும் கிராதம் நாவல் மேலே ஒரு வண்ணஓவியமாகவும் கீழே ஒரு சிற்பசிலையாகவும் ஆழத்தில் ஒரு உயிர்வாழ்க்கை என்றும் பின்னிப்பிணைந்து வளர்ந்துச்செல்கிறது. எளிதில் படித்து நகர்ந்துவிட முடியவில்லை. கதைப்போல படித்து நகரும்போது ஒரு உணர்வு ஆட்க்கொள்கிறது என்றால் நின்று நிதானிக்கையில் ஒளிவெள்ளம் பாய்கிறது.
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டப்பொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன்என்மேல் வரும்போது வெளிநிற்கவே-அபிராமி அந்தாதிப்பாடலை பாடும்போது எல்லாம் மாதொருபாகன் நினைவில் எழுவார். அவர்களின் திருமணக்கோலத்தை மீனாட்சியம்மை சொக்கநாதர் வீதிஉலாவில் பார்க்கலாம். அன்னையும் தந்தையும் மகிழ்ந்திருக்கும் செவ்வியை எங்கு காண்பது? கிராதத்தில் கண்டேன்.
//முதலன்னையும் முதுதந்தையும் பி ரிக்கமுடியாத உடலிணைவில் என்று முள்ளனர். அவர்கள்பிரியாமலிருப் பதனால் அடியிலுள்ள அனல் வேலியி டப்பட்டிருக்கிறது. அவர்களின் த ழுவலில் ஒருகணம்நெகிழ்வு விழுந் தால் அனல் பொங்கி எழுந்து உலகை மூடும். அன்னை தன் விரிந்த அல் குலால் தந்தையின்எழுந்த குறியை தழுவி இணைந்திருக்கிறாள். அவன் உடலில் இருந்து விதைப்பெருக்கு நீள்கொடியினூடாகசாறு என அவள் வயி ற்றுக்குள் சென்று குருதியில் க லந்துகொண்டே இருக்கிறது. அவள் உ டலின்வியர்வைத்துளைகள் அனைத்து ம் கருவாய்களென திறக்க அவற்றிலி ருந்து தெய்வங்களும் தந்தையரும் அன்னையரும் எழுந்துகொண்டே இருக் கிறார்கள்.//
சோமாஸ்கந்தர் என்ற மூர்த்தம் சிவன்கோவில் செப்புத்திருமேனிகளாக இருக்கிறது. அம்மையப்பனுக்கு நடுவில் கந்தபெருமான் எழுந்து நிற்பார். மூன்றாக தெரியும் இந்த மூர்த்தங்கள் ஒன்றாக இருந்தவைதான். மூன்றாக அவை உலகில் வளம்வருகின்றன. இரண்டாக கொளுவிருக்கின்றன. ஒன்றாக அவை மகிழ்ந்து இருக்கின்றன. அவை ஒன்றில் ஒன்று இணைந்து மகிழ்ந்து இருப்பது எத்தனை பெரிய கருணை. இந்த மாபெரும் புடவியின் ஆடல் இது. இந்த ஆனந்த அபிராமிப்பட்டர் மண்ணில் இருந்து விடுப்பட்டு விண்ணேற படியாக பார்க்கின்றார். இதையே நீங்கள் விண்ணில் இருந்து உயிர் மண்ணிறங்க படியாக பாாக்கின்றீர்கள். அற்புதம்.
மெய்கடலில் இருந்து எழும் கதை அலைகள் எத்தனை எத்தனை அழகு செய்கின்றன உள்ளத்தை. கடல்தான் உண்மை, அலைகள் அனைத்தும் கடலைச்சார்ந்தவைதான் ஆனாலும் அலையோடு கடலைப்பார்ப்பதுதான் எத்தனை அழகும் ஆனந்தமும்.
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்