Wednesday, December 21, 2016

முதல் தெய்வம்



அன்புள்ள ஜெ,

"மாறாக்கன்னிமை கொண்ட முதல் தெய்வம் அமர்ந்திருக்கும் முக்கடல் முனம்பு. இப்பாரதவர்ஷம் அக்கன்னியின் தவத்தால் ஆளப்படுகிறது" - இந்த வரிக்காக என் முழு அன்பும் உங்களுக்கு உரித்தாகுக. காலையில் இருந்தே மனமும் உடலும் பெருமிதத்தால் விம்மிக் கொண்டிருக்கிறது. என்ன இருந்தாலும் நம்ம ஊரு அம்மையில்லா?

குமரி மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அக்கன்னியைப் பற்றிய ஒவ்வொரு பதிவு இருக்கும். எனக்கும் மிக அணுக்கமான அன்னை அவளே. அந்த மந்தகாசப் புன்னகையைக் காணும் போதெல்லாம் தனியொரு உலகில் அவளை மட்டுமே நோக்கியிருக்கும் ஓர் அந்தரங்கத் தருணம் வாய்ப்பதுண்டு. கிராதம் வாயிலாகக் காணும் அவளும், அய்யனும் தெற்கிலும் வடக்கிலுமாக இருந்து இப்பெருநிலத்தை ஆள்கிறார்கள் என்னும் எண்ணம் தரும் பரவசம் அலாதியானது. நன்றி, நன்றி ஜெ....

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்