Wednesday, December 7, 2016

இந்திராணியின் இயல்பு




ஐவரோடு கூடியவள் அன்னை குந்தி, ஐவருக்கு மனைவியானவள் அன்னை திரௌபதி, மாறாத இந்திராணிபதவியில் இருப்பதால்  புது இந்திரரோடும் கூடுபவள் அன்னை இந்திராணி.

அன்னை இந்திராணியை நீங்கள் படைத்த அழகும் ஆற்றலும் நுணுக்கமும்தான் மற்ற இருவர்களையும் உடல்தாண்டி எப்படி அன்னையரை காண்பது என்று காட்டுகின்றது.

குந்தி வாழ்வின் சிக்கலில் ஐவரை தேர்ந்து எடுத்தது ஒரு  கசப்பு மருந்து உண்ணும் உள்ளம் சார்ந்த அனுபவம். திரௌபதி ஐவரை தேர்ந்து எடுப்பது வாழ்வின் விரியை காணும் அறிவு சார்ந்த அனுபவம். இந்திராணி புதிய இந்திரனை ஏற்பது வாழ்வின் நெறி மாறாத்தன்மையை காட்டு உணர்வு அனுபவம். முன்னவன் பின்னவன் என்ற எல்லையில் ஊசல் ஆடாமல் மையத்தில் அந்த அந்த கணத்தில் நிற்கும் வடமுலையையே காட்டும் காந்தமுள்ளின் அனுபவம். . 

தேவேந்திரனை ஏற்கும் இந்திராணி வாழ்வில் துன்பமோ துயரோ சினமோ நடுக்கமோ கண்ணீரோ இல்லை ஆனால் அசுரேந்திரனை ஏற்கும் இந்திராணி வாழ்வில் கணம்தோறும் கண்ணீர் சினம் துரயம் நடுக்கம் ஒவ்வாமை இருக்கிறது. தேவேந்திரனுடன் வாழும் இந்திராணி தோழி என இருக்கிறாள் என்றாள், கணம் தோறும் அச்சத்தில் வாழும் தேவேந்திரனிடம் அச்சத்தை அகற்றும் அசையா கவசமாக இருக்கிறாள் அசுரேந்திரனிடம் இருக்கம் இந்திராணி கணம்தோறும் அன்னை என்று இருக்கிறாள். இருவருக்குமே இந்திராணி அறிவுரை வழங்குகின்றாள்,  அந்த இருவரிடமும் அறிவுரையின் ஆற்றுப்படுத்ம் விதம் வேறுவேறாக இரக்கிறது. தேவேந்திரனிடம் அச்சத்தை விடச்சொல்லி கண்ணீர் துடைக்கும் அன்னையின் கொடைக்கரமாக இருக்கிறாள் என்றால் அசுரேந்திரனிடம் மயக்கத்தைவிடச்சொல்லி கண்ணீர்விட்டு இறஞ்சும் அன்னையாகிய அடிமைக்கரமாக இருக்கிறாள்.  
  
பெண்ணை ஒரு உடலாகப்பார்க்கின்றான் ஆண். பெண் உடலால்  ஒரு பொருளாகத்தெரிந்தாலும் அவள் உடல் கொண்டுவந்த உள்ளமாகத்தான் இருக்கிறாள். அந்த உள்ளம் தன்னை சூடிய ஆணின் குணத்திற்கு ஏற்ப இளமையும் முதுமையும் அடைந்து ஆனந்தமோ அல்லது அல்லலோ படுகின்றது.  

அன்னமனகோ சம் பிரணமயகோசம் மனோமயகோசம் விஞ்ஞானமயகோசம் ஆனந்தமயகோசம் என்னும் தொன்னூற்று ஆறு தத்துவங்களை உள்ளடக்கிய மனித உடலின் மாயமலத்தை புற்றுகபுரி காட்டுகின்றது. தியானம் மாயையின் கோட்டையை அழிக்கும்போது, கோட்டையின் காவலனாகிய கௌமாரன் என்றும் இளமையுடைய குகன் ஆன்மா சகரஸ்ராரத்தின் வழியாக வெளியேறி இந்திரபுரியை அடைகிறது. கௌமாரன் தன்னை இந்திரனின் தளபதி என்று நினைத்துக்கொள்வதுதான் மாயையின் வல்லமை. விரித்திரனைப்பார்ப்பதுபோல ஆன்மா அனைத்தையும் வேடிக்கைப்பார்க்கிறது. பழம்தின்னும் குருவியும் பழம்தின்னாத குருவியும். புற்றுகபுரி மயக்கத்தால் விழுகிறது. மாயாமலம் மயக்கத்தை கடக்கச்சொல்கிறது. 

மகாவீரியத்தில் இல்லாத படைத்தளபதி புற்றுகபுரியில் இருக்கிறான் என்பதுதான் புற்றுகபுரியின் அழகே. கர்மபுரியில் முகம் காட்டாத ஆன்மா, மாயாபுரியில் முகம் காட்டுகின்றது. 


நீருக்கு என்று வடிவம் இல்லை ஆனால் அது வைக்கப்படும் பாத்திரத்தின வடிவை அடைகின்றது. தேவந்திரன், அசுரேந்திரன் என்னும் இருவேறு பாத்திரங்களில் நிரம்பும் நீராகத்தான் இந்திராணி இருக்கிறாள். அவள் முன்னவன் மனைவி என்றோ பின்னவன் காமக்கிழத்தி என்றோ வரையறுக்க கூடிய எந்த  வடிவமும்  அவளுக்கு இல்லை. அவள் ஒரு குணத்தின் குறியீடு.  அன்னை என்பது ஒரு வடிவம் அற்ற தன்மை அதற்கு ஒரு வடிவம் தர மனிதன் பலவித உறவுகளின் நாமத்தில் அதை பிடித்து வைக்கிறான். 

ராமராஜன் மாணிக்கவேல்