Thursday, December 8, 2016

முதல் விழைவு

 
 
அன்புள்ள ஜெ.
 
//ஏழு விழைவுகள். மூலத்தின் காமம், சுவாதிட்டானத்தின் பசி, மணிபூரகத்தின் மூச்சு, அனாகதத்தின் இதயம், விசுத்தியின் சொல், ஆக்கினையின் எண்ணம், சகஸ்ரத்தின் முழுமைநாட்டம்//

இதில் முதல் விழைவு மூலத்தில் காமம் என்று வருகிறது. முதல் விழைவு காமம் என்றால் உயிர்களின் இரண்டாவது விழைவாக பசி வருகின்றது.

உயிர்கள் பிறந்ததில் இருந்து உண்ணவே முனைகின்றன. புழுவே இதற்கு முதல் உதாரணம். ஆழ்ந்து நோக்கும்போது காமமே உயிர்கள் பிறக்கவும் காரணமாக இருக்கின்றன அதுவும் மறைந்திருக்கும் முதல்விழைவாகத்தான் தெரிகிறது.  

 உயிர்களின் முதல் விழைவு காமமா? பசியா? 

அன்புடன். 

ராமராஜன் மாணிக்கவேல். 

அன்புள்ள ராமராஜன்

இதில் அறுதியான கூற்று என ஏதுமில்லை

ஆனால் நம் யோகசக்கர மரபில் மூலாதாரம் காமத்தின் இருப்பிடம். காமம் என்றால் பாலியல் விழைவு அல்ல. நான் இருக்கிறேன், நான் வளரவேண்டும், நான் பெருகவேண்டும் என ஓர் அணுவுக்குத்தோன்றும் முதல் விழைவு. அதுதான் அதை பசி நோக்கி செலுத்துகிறது. மூச்சுகொள்ள வைக்கிறது.
 
அதுதான் குண்டலினி என்னும் விசை
 
ஜெ