விரித்திரன்,மும்முகன், திரிசிரஸ்,விரித்திரன் என்று ஒன்றுக்குபின் ஒன்றென வட்டத்தில் சுற்றும் மணிபோல முதல் எது முடிவெது என்று தெரியாமல் சுற்றும் கதை அதன் வேகத்தில் ஒரு வட்டம் என வண்ணக்கோலமாக தெரிகின்றது.
பற்று விழைவு வஞ்சம் அதற்குள் மறைந்துதிருக்கும் இருள்நஞ்சு என விரித்திரன் தோன்றிக்கொண்டே இருக்கிறான். விரித்திரன் தோன்றத்தோன்ற இந்திரனும் தோன்றுகின்றான். இத்தனை விரித்ரின் கதை தேவையா என்றால் அத்தனை விழைவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு விழைவும் ஒரு வஞ்சத்தை தனக்குள் சூடிக்கொண்டு விரி்த்திரனாக மும்முகனாக வடிவெடுத்து வருகின்றது. வடிவெடுக்கும் ஒவ்வொரு விரித்திரனும் மும்முகனும் இந்திரனின் தோற்றுவாயாக அமைகின்றது. இருளின் முடிவில் ஒளி, ஒளியின் முடிவில் இருள் என்று ஒரு மாயப்போர் நடக்கிறது.
நான் எனது என்னும் மாயையால் தோன்றும் பற்றில் பெரியது பிள்ளைப்பற்று, பிள்ளையே ஒரு பலம். பலனே ஒருபிள்ளையாக பிறக்கும் காசிபருக்கு அவன் இறப்பால் ஏற்படும் வஞ்சம் விரித்திரன் பிறக்க காரணமாகிறது. பெற்றப்பிள்ளையை எனது என்று சொல்லமுடியாத நிலையால் சித்திரகேது மாயைத்தாண்டி அரசமுனியாக இருந்தும் மாயையின் பிடியில் விழுந்து நொடியில் தெய்வமாகமுடியாமல் பூனையாகின்றான். சித்திரகேதுவின் விழைவும் காசிபரின் வஞ்சமும் இணைந்து அனலில் விரித்திரன் பிறக்கிறான்.
முதல் தச்சனாகிய கர்மகனுக்கு பிறக்கும் ஆயிரதெட்டுப்பிள்ளைகளில் முதல்நான்குபிள்ளைகளில் மூன்றாம்பிள்ளையாகிய த்வஷ்டா தனது உழைப்பால் கர்மத்தால் கலையால் ஆணவம் கொல்கிறான். அந்த ஆணவத்தால் வளர்ந்த மாவீரியம் அழியும்போது கண்ணீரால் மும்முகனை வளர்க்கிறான். மாவீரம் த்வஷ்டாவின் கலையின் முழுமை என்றால்,மும்முகன் என்னும் மலை கலையின்மையின் முழுமை. இவைகள் இரண்டையும் அதன் எதிர் நிலையால் இந்திரன் அழிக்கின்றான். கலையை கண்ணில்லாதவன்போலவும், கல்லை கலையாக்கியும் அழிக்கின்றான்.
கலையாகிய முழுமையும் கலையின்னையாகிய மும்முகனும் அழியும்போது த்வஷ்டாவில் ஏறும் வஞ்சம் வாகாவின் மூலம் திரசிரஸாக பிறக்கிறது. திரிசிரஸின் கரவென்னும் விழைவால் அது அழிகிறது. திரிசிஸின் அழிவால் த்வஷ்டாவின் வஞ்சம் விரித்திரனை பிறப்பிக்கிறது.
சித்திரகேதுவின் மாற்றுருவான விரித்திரனுக்கும் த்வஷ்டாவிற்கும் தனுவிற்கும் பிறக்கும் விரித்திரன் விரிவு மிகப்பெரியது. சித்திரகேதுவின் மாற்றுருவான விசித்திரன் ஒரு கையில் வாளும் ஒரு கையில் தண்டும் கொண்டு ஒரு ஒவியமாக வளர்ந்து நிற்கிறான். த்வஷ்டா-தனுவின் மைந்தன் விசித்திரன் சிம்மம் யானை நாகம் பறவையின் கூட்டாய் பிறக்கின்றான். வஞ்சத்தின் வளர்ச்சியாய் வந்து நிற்கும் இந்த விசித்திரன் மும்முகன் பாறைபோல மானிட அகம்கொள்ளும் இருள் ஆழத்தை வடித்துவைக்கிறது. இந்த இருள் ஆழத்தை கண்டு திகைக்கும் கதைச்சொல்லி விடையாக கேள்விகளை நம்மைநோக்கி கேட்கின்றான். காரணம் வெற்றித்தோல்வி என்பது இலக்கு அல்ல. வெற்றிக்கும் தோல்விக்கும் தேவையான காரணம் அவைகளின் விழைவில் இருந்து வெளிப்பட்டு துலாக்கோல் முள் சமன்செய்யப்படவேண்டும் என்பதுதான். .
//“இப்புவியில் முற்றழிவது எது? பிழையுணர்வு வளர்கிறது. தன்னிரக்கம் குமைகிறது.வெற்றிக்களிப்பு மிகுகிறது. வஞ்சம் கரந்து ஊறிப்பெருகுகிறது. அழிவதுதான் என்ன? அழிவின்மைஎன்பது நலனா தீதா? வணிகர்களே, இங்கு அழியாதது இருளா ஒளியா? அழிந்தழிந்து செல்லும்வாழ்வுக்குமேல் அழியாமல் நின்றிருக்கும் தெய்வங்களின் பிறப்புவாயில் என்ன? ஓடும்நதிமேல்படர்ந்த விண்முகில்களென தனிவழி சென்றுகொண்டிருக்கின்றன தெய்வங்கள். தெய்வங்களைவழிபடுக! அவை நம் அச்சங்களின் கூர். நம் ஐயங்களின் இருள். நம் வஞ்சங்களின் கசப்பு. நம்துயர்களின் எடை. அவை வாழ்க!”//
பலம் கர்மம் கரவு வஞ்சம் என்னும் வினைகளின் வழியாக மும்முகன் விரித்திரன் உலகில் தோன்றிக்கொண்டே இருக்கிறான் இதனால்தான் கர்மமார்க்கம் மிகு கடினம் என்று ஞானியர்கள் சொல்லி வைத்துகள்ளார்கள். எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் கர்மம் மாயைில் தள்ளிவிடும் என்பது இதுதான். இருளில் தள்ளி விடுகின்றது.
ஒவ்வொரு கர்மத்திற்கும் அதன் முழுமையின்மீது செயல்படும் எதிர்விசைதான் இந்திரன். ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை ஒன்று உண்டு என்கிறது நியூட்டன்மூன்றாம்விதி. செய்யப்படும் அனைத்துக்கர்மமும் ஒரு எல்லைக்கு அப்பால் செல்லும்போது எதிர்வினையின் எல்லையில் எல்லைமீறி பயணிக்கிறது எனவே எதிர்வினை தனது எல்லையை நிலைநிறுத்த எதிர்திசையில் வேகம்கொடுக்கிறது. இதுவே இந்திரன் விரித்திரன்,மும்முகன் யுத்தம் எனக்காணமுடிகின்றது. இந்த எதிர்வினையின் போராட்டம் உலகில் எழக்கூடாது என்பதால்தான் இந்திரனே அதற்கும் தீர்வுச்சொல்கிறான். இ்ந்த தீர்வு ஆணவத்திற்கு எதிராக வைக்கப்டும் சிறு தடைக்கல்.
//ஆகவே முழுமைக்கு முன்னரே நின்றுவிடுவதே இன்பத்தில் என்றும் வாழும் வழி. உலகோருக்குஎன முன்னோர் நெறியொன்று அமைத்துள்ளனர். அணிகொள்கையில் ஒரு குறை வை. அன்னமுண்ணும்போது ஒரு துளி கசப்பும் இலையில் வை. செல்வக்குவையில் ஒரு பிடி அள்ளிபிறருக்கு அளி. அரசே, இல்லத்தில் ஒரு சாளரக்கதவை எப்போதும் மூடி வை. அகல்களில்ஒன்றில் சுடரில்லாமலிருக்கட்டும். அதுவே வாழ்நெறி” என்றார் அந்தணர்.//
விரத்திரனும் மும்முகனும் முக்குணங்களாகிய தமஸ்ரஜஸ்சத்வகுணத்தின் கலவையாக இருக்கிறார்கள். முக்குணங்களின் கலவையாக இருந்தாலும் முக்குணங்களும் ஒன்றாத கலவையாகவே இருக்கிறார்கள். முக்குணங்களையும் கடக்காதவர்களாகவும் இருக்கிறார்கள். இதுவே அவர்களின் பலமாகவும் பலகீனமாகவும இருக்கிறது. இதனால்தான் களிமுகம் ஊழ்முகத்தை அறியமுடியவில்லை, வேதமுகத்தை களிமுகம் அறியமுடியவில்லை அப்படி இருப்பதால் அவைகள் அதன் பலத்தில் நிற்கின்றன. அவைகள் ஒருமுகத்தை மற்றொருமுகம் பார்க்கும்போது நிலைதடுமாறி பலம் இழந்துவிடுகின்றன.
மும்முகனை வணங்கும் மக்கள்கூட அவன் மும்முகத்தையும் ஒன்றாக்க விரும்பாமல் ஒருமுகத்தை மட்டுமே தன்விழைவுக்கு ஏற்றவாரு வணங்கி எடுத்துச்செல்கிறார்கள். மானிடர்கள் எளியவர்கள் அவர்களுக்கு முக்குணங்களில் ஒரு குணம் இருந்தால்போதும் அதைக்கொண்டே பிழைத்துக்கொண்டுவிடுவார்கள். ஊண் படைக்கும் தந்தை என்றோ, குருதிப்படைக்கும் மன்னன் என்றோ சொல்படைக்கும் துறவி என்றோ அவர்கள் ஒருமுகம் கொண்டு வாழ்ந்தால்போதும். இந்த மூன்றுமுகமும் ஒருவனுக்கு எழும்போது அவன் மும்முகனாகி தனது எல்லையை தாண்டி இந்திரன் எல்லையில் நுழைகிறான். அப்படி நுழையும் மும்முகன் அறியாதது எதுவென்றால் தன் முன்பத்தை எனவே அதன் எதிரில் வந்து எதிர்வினையாக இந்திரனாக நிற்கிறது. இப்படி மும்முகனாகி இந்திரலோகத்தில் நுழையும் ஒருவன் இறந்துதான்போகவேண்டுமா? இல்லை அவன் நான்முகனாகினால் நல்லது என்று கதை விடை சொல்கிறது.
//“மும்முகன் அறியாதது ஒரு திசை மட்டுமே. அது வலமில்லை இடமில்லை பின்னாலும்இல்லை. தன் முன்பக்கத்தை. தன்னை நோக்காத மும்முகன் குலத்தோர் மறைந்தனர். தன்னைமட்டுமே நோக்கிய நான்முகன் மைந்தர் எழுந்தனர்” என்றான்.//
கதைக்கடலை கடைகின்றது கிராதகம். ஆவி சுழல்கின்றது.
ததியுறு மத்தின் சுழலுமென் ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே-அபிராமி அந்தாதி.
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.