இனிய ஜெயம்
வெண்முரசு வாசிப்பதில் உள்ள மகிழ்வுகளில் ஒன்று , அது திறந்து விடும் வெவ்வேறு கலைவெளியை சென்று அறிமுகம் செய்து கொள்வது .
வெண்முரசு வழியே தான் கதகளியை அணுகினேன் . வெண்முரசு கீசகவதம் சித்திரத்தை முற்றிலும் மௌனமாக விட்டிருந்தது .அதை கதகளி கீசக வதம் வழியே நிரப்பிக்கொண்டது ,வெண்முரசு அளித்த அனுபவங்களில் மகத்தானது என்று சொல்வேன் .
அடுத்தது வெண்முரசு திறந்து விட்ட இசைக்கான வாசல் .குறிப்பாக மேலை இசை .அதிலும் குறிப்பாக வேகனர் ஒபேரா . வேகனர் இசை கோலத்தை அணுகி உணர ஒரே வழிதான் உண்டு . அந்த இசை கோலத்தை வேகனர் அரங்கேற்றப் பின்புலமாக அமைத்த நாடக கதைகளின் அறிமுகத்தை அடைவதே அது .
மூகாம்பிகை கோவிலை சுற்றிய அதிகாலை நடையில் அஜிதன் , வேகனரின் ட்ரிஸ்டன் அன் ஐசோல் கதையை முழுமையாக சொல்லி , அந்த நாடகத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் வரும் முக்கியமான நாடகீய தருணங்களை விளக்கினான் .
பின்னர் வந்த இரவுகளில் இணையத்தில் அந்த நாடகத்தில் ,அந்தந்த தருணங்களுக்கு வேகனர் அமைத்திருந்த இசை சித்திரங்களை பத்து பத்து நிமிடங்களாக கேட்பேன் . ஒரு மூன்று மாதம் இரவுகளில் வேகனரின் வெவ்வேறு இசை துணுக்குளை கேட்டுக்கொண்டிருந்தேன் . அப்போது ஒரு அதிசயம் உணர்ந்தேன் .
வேகனர் தனது ரிங் ஒபேரா வில் அமைத்திருந்த இசை கோர்வை ஒன்று ,காந்தாரி அஸ்தினாபுரி நுழையும் பருவகால சித்தரிப்பின் கற்பனையுடன் கச்சிதமாக முயங்கி என் உள்ள அமைந்த அந்த சித்திரத்துக்கு வேறு ஆழம் அளித்தது .
அங்கே துவங்கி வெண் முரசின் ஒவ்வொரு நாடகீய தருணங்களும் அதற்கான பின்னணி இசையை வேகனர் இசையில் தேடி அடைந்து ,அந்த நாடகீயம் உருவாக்கும் உணர்வுகளுடன் கலந்து கொள்வது எனது , [பிரதி தரும் இன்பம் ] வாசிப்பின்பத்தை உயர்த்திக்கொள்ளும் ஒன்றாக மாறியது .
பின்னர் உங்களது உரை காணொளி ஒன்றில் கண்டேன் ,நீங்கள் வெண்முரசுக்கு இணை வைக்கும் மற்றொன்றாக வேகனர் இசை கோலங்கள் இருந்தது .
அங்கே துவங்கி கேட்கும் ஒவ்வொரு இசை துணுக்கையும் ,வெண்முரசின் எந்த தருணத்தில் வைக்கலாம் ,அல்லது வெண்முரசின் இந்த தருணத்துக்கு ஏற்ற இசை கோலம் எது என தேடுவது எனது அன்றாடங்களின் ஒன்றாகிப் போனது .
அப்படி கண்டடைந்ததுதான் பண்டிட் ஜஸ்ராஜ் அவர்களின் குரல் .
இதோ இது ஜஸ்ராஜ் அவர்கள் பாடிய மதுராஷ்டகம் . இதுதான் வெண்முரசு நீலனுக்கான குரல் . மதுராஷ்டகம் என்றாலே அது எம் எஸ் சுப்பு லட்சுமி குரலில்தான் கேட்கப்படவேண்டும் எனும் ஒரு தேக்க நிலை இங்கே நிகழ்வது போல தெரிகிறது .
எம் எஸ் குரலில் அழகு நளினம் எல்லாம் இருக்கிறது . வண்டு முரளும் அழகு அதில் இருக்கிறது .
ஜஸ்ராஜ் சிம்ம கர்ஜனை . இன்னும் சொல்லப்போனால் பற்றி எரியும் உயிரோட்டம் இவரது குரலில்
எழும் மதுராஷ்டகத்தினுள்தான் தழல்கிறது .
தம்பி அவ்ளோ பெரிய இசை விமர்சகரா நீ ,என நீங்கள் மனதுக்குள் கேட்பது இங்கே கேட்கிறது . ஆம் எனக்கு இசை தெரியாது .ஆனால் என்னை வெண்முரசு அழைத்து செல்லும் பாதை மேல் நின்று இதை என்னால் திட்டவட்டமாகவே சொல்ல முடியும் .
ஜஸ்ராஜ் குரல்தான் நீலனுக்கான குரல் .
கடலூர் சீனு