Thursday, January 11, 2018

இல்லறத்தை இறுக்கிக்கட்டும் மமகாரம். (குருதிச்சாரல் -20 )        
ஒரு உயிர்  பிறக்கும்போது இருக்கும் ஒரே குணம் அகங்காரம் ஆகும். அது அதற்கு உயிர்வாழ்வதற்கான தன்முனைப்பை  அளிக்கிறதுஅந்த நான் என்றறியும் அகங்காரத்திலிருந்துதான் அனைத்து குணங்களும் தோன்றுகின்றன.    அந்த  அகங்காரத்திலிருந்து கிளைத்தெழும் முதல் குணம் மமகாரம்  ஆகும். அது எனது எனக்கொள்ளும் பற்றாகும். முதலில் ஒரு  உயிர் எனது என பற்றிக்கொள்வது தனது உடலைஅது உயிர் வாழும்வரை தன்னுடலை  விடாது பற்றியிருக்கிறதுஅதனுடலை எத்தனை குறைகள் இருந்தாலும் நேசிக்கிறது. பேணிக்காக்கிறது.   விலங்குகள் அத்துடன்  தன் இருப்பிடத்தை, தன் இரைதேடும் நிலப்பரப்பை  எல்லாம் எனது எனப் பற்றுகொள்கின்றனமனித குலத்தில் எனது என்று பற்று கொள்வதற்கான  விஷயங்கள் ஒவ்வொருநாளும் பெருகிக்கொண்டே செல்கின்றன
       
 எனது என்று கைக்கொண்ட ஒரு பொருளை தனக்கே உரித்தானதாக கொள்வது ஒருவனுக்கு இன்பத்தையும் மனநிறைவயும் அளிக்கிறது. அந்த இன்பம் மனிதன் கற்பித்துக்கொண்டதல்ல. அது இயற்கையாக இருப்பது. ஒரு சிறு குழந்தை தன் பொம்மையை இறுகப் பிடித்துக்கொள்கிறது. தன் அன்னையின் மடியில்  மற்றொரு  குழந்தை இருப்பதை அது விரும்புவதில்லை.   தன் அன்னை என்பதால் மட்டுமே பிறரைவிட  தன் அன்னையை உயர்வாகக்கொள்கிறதுநாம் தாய் தந்தை பிள்ளைகள் எனப் பாசம்கொள்ள அடிப்படையாக இருப்பது இந்த எனது என்ற மமகாரத்தால் அல்லவா?  
  
      
  ஒரு விஷயம் எனது என ஆவதால்  அதன் மீது நமக்கு பற்றுதல் உண்டாகிறது. நமது என்றிருப்பதாலேயே அதை நாம் நேசிக்க ஆரம்பிக்கிறோம்இது  உறவுகள் பொருள்கள் என அனைத்துக்கும் பொருந்தும். என் தாய் என் தந்தை, என் அண்ணன்என் தங்கை என நாம் காட்டும் நேசம் எல்லாம்   எனது என்ற மமகாரத்தால் உண்டாவதுஎன் வீடு, என் தொழில், எனவும் நாம் பற்றுகொள்கிறோம்அவற்றுள் குறைகள் ஏதேனும் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்கிறோம். அவற்றை பழிப்பவர்களை  நம்மைப் பழித்தார்ப்போல் சினம் கொள்கிறோம்.   பாசம் என்பது பழக்கத்தால் வருவது என்று சொல்வதுண்டு ஆனால் அது எனது என்ற எண்ணத்தால்தான் வருகிறது என்று உறுதிபடக் கூறலாம். ஒருவரிடம் அவன் பெற்றோர் வந்து இவன்தான் உனது நீண்ட நாட்கள் முன் தொலைந்துபோன சகோதரன் என்று சொன்ன அந்த கணத்தில்  அவருக்கு அவன் மேல் பாசம் பொங்குகிறது என்பதற்கு ஒரே காரணம் அவன் தனது சகோதரன் என்பது அல்லவா?
       
எனது என்று கொள்ளும் ஒன்றின் மேல்  வேறு சிலரும் பங்குகொள்ள நேரிடும்எனது தாய், தந்தை  போன்ற குருதியுறவுகளில்  நம் சகோதர சகோதரியர்களும் பங்குகொள்கிறார்கள்பிள்ளைகள் என்ற உறவுகூட நம் இல்லறத் துணைவரால் பகிரப்படுகிறது. ஆனால் இப்படி பங்கிடப்படாமால் நமக்கே நமக்கு என இருக்கும் உறவு நம் மனைவி/கணவன் என்ற உறவுமட்டும்தான் அல்லவாஆதலால் வேறு எந்த உறவைவிட இது நமக்கு நெருக்கமானதுஇவர் என் வாழ்நாள் முழுமைக்குமான வேறு யாரும் பங்கிடப்பட முடியாத காதல் துணைவர் என்பது நம் வாழ்வில் மிகவும் முக்கியமான பற்றுதலாக இருக்கிறது. எனது உடல் என்ற பற்றுதலுக்கு அடுத்ததாக எனது துணைவர் என்ற பற்றுதல் இருக்கிறது  இதை வைத்து ஒருவர் தன் இல்லறத் துணைவரிடம் கொள்ளும் நேசத்தையும்  உரிமையையும் நாம் புரிந்துகொள்ளலாம். அது பெற்றோர் மீதானப் பாசம் சகோதரர்களுகிடையேயான பாசத்தை விட மிக வலுவானதாக அமைவதற்கு அதுவே காரணம்.    

      
இருவரும் ஒன்றிணைந்தே வாழவேண்டியிருப்பதால்  தனிப்பட்ட ஒவ்வொருவரின் விருப்பு வெறுப்புகள் காரணமாக தம்பதிகளுக்கிடயே முரண்கள் தோன்றுவது இயல்பாக உள்ளது.    அதனால் அவர்கள் அதிகமாக சச்சரவிட்டுக்கொள்வதாக நமக்குத் தெரியும்ஆனால் உண்மையில் மற்ற எந்த உறவுகளைவிடவும் ஒருவருக்கொருவர் இணங்கிப்போவது இல்லற உறவில்தான் அதிகம்வெண்முரசில் சகதேவனுக்கு விஜயைக்கும் இருக்கும் கணவன் மனைவி உறவு நுட்பமாக கூறப்பட்டுள்ளதுவிஜயையுக்கு சகதேவன் மீதான உறவில் ஒரு நெருடல் இருக்கிறது. சகதேவன் அவள் கணவன்தான் என்ற போதிலும் அவன் திரௌபதிக்கும் கணவனாக இருக்கிறான்அவன் தனக்கு மட்டுமான கணவனாக இல்லாதிருப்பது அவளை இம்சிக்கிறதுஅந்த நெருடல் காரணமாக  அவன் மேல் ஒரு சிறு விலக்கம் இருப்பதாக அவளுக்குத் தெரிகிறதுபதினான்கு ஆண்டு காலம் சகதேவான் அவள் கணவன் என்பதாக இல்லாமல்  திரௌபதியின் கணவனாக மட்டுமே இருந்து வந்திருக்கிறான்  என்று கருதுகிறாள். அவன் வருகை அவளுக்கு பெரிதாக ஆர்வமூட்டாமல் இருக்கிறது
அபயைஅணிகொள்க, அரசி!” என்றாள். “வேண்டாம், நான் இவ்வண்ணமே இருக்க விழைகிறேன்என்றாள் விஜயை. அபயை ஒருகணம் நோக்கிவிட்டுஅதுவும் நன்றேஎன வெளியே சென்றாள்.

     
சகதேவன்  தன்னால் கவரப்படவில்லை என நினைக்கிறாள். எனது என்ற இறுக்கமில்லாத உறவில் முதுமை விலக்கத்தை அதிகரிக்கிறது. ஆகையால் தம் முதுமையை கவனிக்கும் அவன் இன்னும் தன்னைவிட்டு விலகிப்போவான் என நினக்கிறாள்.  

   
சகதேவன் அறைக்குள் நுழைந்ததும் முதற்கணம் அவளைப் பார்த்து திகைத்ததை அவள் உணர்ந்தாள். அது அவள் தோற்றத்திலிருந்த முதுமையால்தான் என்பதை அக்கணமே அவளுள் உறையும் பெண் அறிந்தாள். அவன் மீது எழுந்த கடும்கசப்பை விழிகளிலும் புன்னகையிலும் காட்டாமல் இருக்கும் பொருட்டு விழிதாழ்த்தி முகம் திருப்பிக்கொண்டாள்.

   
பிறகு அவர்கள் பேசிக்கொள்ள வார்த்தைகளைத் தேடி எடுக்கிறார்கள். இயல்பாக அவர்களைப்  பிணைத்திருக்கும் ஒரே பற்றான அவர்களின் மகனைப்பற்றிப் பேசுகிறார்கள்.

மைந்தனை எப்போது பார்த்தாய்?” என்று சகதேவன் கேட்டான். “சென்ற ஆண்டுஎன்று அவள் சொன்னாள். “வளர்ந்துவிட்டிருப்பான்என்றான் சகதேவன். “ஆம், அந்தணச் சிறுவன் போலிருக்கிறான்என்றாள்.
இள அகவையில் நான் இருந்ததைப் போலவே இருக்கிறான், அதே சொற்களைக்கூட சொல்கிறான் என்றார்கள்என்றான். அவன் நினைவில் அவள் அகம் மலர்ந்தது. புன்னகையுடன்அவனையும் பிறரையும் இங்கு பார்க்கலாமென்று எண்ணினேன்என்றாள்.

மைந்தனின் நினைவுகளினூடாக இருவரும் அணுகி வந்து ஒருவரை ஒருவர் உளம் தொட்டுக்கொள்வதை அவள் உணர்ந்தாள்
      
அவர்களுக்குள் இருப்பதாகக் கொண்ட  விலக்கதை  மகன் என்ற உறவு நிரப்பி இணைக்கிறது.  மகன்மீதான பேச்சு  அவர்கள் இணைந்திருந்த இனிய நினைவுளில் ஒளி பாய்ச்சிக்  காட்டுகிறது.  

மஞ்சத்தில் அவனருகே அவள் அமர்ந்தாள். “நினைவிருக்கிறதா? ஒருமுறை இந்திரப்பிரஸ்தத்தின் காண்டவக்காட்டின் உள்ளே சூக்தவனம் என்னும் சோலையில் நாம் தங்கியிருந்தோம். சிறிய காட்டுக்குடில். மூங்கில் பிளந்து அமைத்த சிறிய மஞ்சம். நம் இருவருக்குமிடையே அவனை படுக்க வைத்தபடி ஒற்றைதோல் போர்வையால் போர்த்து வெளியே சீவிடின் ஒலியும் மான்களின் குமிறலும் இரவின் ஒட்டுமொத்த முழக்கத்திற்குள் எழுவதை கேட்டுக்கொண்டிருந்தோம். சிறுசாளரத்துக்கு வெளியே ஒரு விண்மீன் கண்மின்னிக்கொண்டிருந்ததுஎன்று சகதேவன் சொன்னான்.

       எனது கணவன் என்ற உணர்வு அவள் மனதின் மூலையிலிருந்து வெளிஎழும்பி வருகிறது. அவள் உள்ளம் அவனை நெருங்குகிறது. அவ்வுள்ளத்தை அவள் உடல்  பின்தொடர்கிறது

அவன் கால்களை இடக்கையால் தொட்டாள். மெல்ல வருடிச்சென்று கால்விரல்களைப் பற்றி இழுத்தபடிநான் அந்நாட்களிலேயே வாழ்ந்தேன்என்றாள். அவன்என்ன செய்வது? பெரும்பாலும் இறந்தகாலத்திலேயே வாழும்படி அமைக்கப்பட்டோம்என்றான்.

       அவன் தான் அடைந்திருக்கும் முதுமை அவனுக்கு விலக்கத்தை அளிப்பதாக அவள் எண்ணியிருந்தாள். ஆனால் சகதேவனின்  சொற்கள்  அவளின் அந்த எண்னத்தை மாற்றுகின்றன

சில கணங்களுக்குள்ளேயே இப்போது உன் முதுமையை விரும்புகிறேன் என்று தோன்றுகிறதுஎன்றான். அவள் கைகளில் புடைத்திருந்த நீல நரம்புகளை அழுத்தியபடிமுதுமை உன் தசைகளை குழைய வைத்திருக்கிறது. பிறிதொரு கனிவு உன் முகத்தில் குடியேறியிருக்கிறது. என் உள்ளத்திலும் உடலிலும் எழுந்துள்ள முதுமைக்கு அதுவே துணையென அமைய முடியும்என்றான்.

       அவர்கள் உடல்கள் நெருங்குகின்றன. பதிநான்கு ஆண்டுகால  விடாய் கொண்ட விலங்குகள் அல்லவா அவை
மிக மெல்ல ஒரு இழுப்பு அவன் கையில் எழுந்தது. அதை காத்திருந்தவள்போல் அவன் அருகே படுத்தாள். அவன் கைகள் அவளை அணைத்து உடலுடன் சேர்த்துக்கொண்டன. “முற்றிலும் தனிமை. பதினான்கு ஆண்டுகள்என்றான்

       
ஆனாலும் மனிதர்கள் வெறும் விலங்குகள் அல்ல. அவர்களுக்குள் உள்ளங்கள் இருக்கின்றன. அவையும் ஒன்றை ஒன்று நெருங்க வேண்டும். அப்போதுதான் உடலின் மகிழ்வு உள்ளத்திலும் ஏறும்விஜயையின் மனதில் சகதேவன் எனக்குமட்டுமான உறவு என்றாக இல்லையே என்ற ஒரு உறுத்தல் உள்ளதுஅவள் உள்ளத்தில் தைத்திருக்கும் முள்ளை சகதேவனின் சொற்கள் மென்மையாக எடுக்க முயல்கின்றன.


அவள் மிகக் கூரிய நச்சு முள்ளொன்றை தன்னுள் உணர்ந்துஏன்? அவள் உடன் இருந்தாளே?” என்றாள். “ஆம், ஆனால் அவள் பேரரசி. நாங்கள் அவள் ஏவலர்என்றான். அவள் மேலும் கருதி கணுக்கணுவென முன் சென்றுபேரரசியின் துணைவர் ஆகுகையில் பெருமிதம் அல்லவா எழவேண்டும்?” என்றாள். “ஆம், பெருமிதம் உண்டு. கூடவே விலக்கமும் உண்டுஎன்றான்.

       திரௌபதி எனக்கு மனைவியென இருக்கலாம். ஆனால் நான் கணவென தன்னை முழுமையாக உணர்வது உன்னிடம் மட்டும்தான் என்று கூறுகிறான்தன்னை முற்றிலும் களைந்துகொண்டு முன்நிற்க இயலக்கூடியது விஜயையிடம் மட்டும்தான் என்று நினக்கிறான்.   நம் உடலின் நிர்வாணம் நம்மை கூசச் செய்வதில்லை. ஏனென்றால் அது எனதுஉடல். அப்படியே நம் உள்ளத்தின் நிர்வாணமும் நம்மைக் கூசச் செய்வதில்லைபிறரிடம்  நம் மனம் தான் ஆடைகள் என அணிந்துவைத்திருக்கும் அனைத்து பாவனைகளையும் கழற்றி நிர்வாணத்தோடு நிற்கக்கூடியது என்றால் அது  நம் இல்லறத் துணைவரின்  எதிரில் மட்டும்தான் அல்லவா?


நான் உன்னை நினைத்துக்கொண்டதெல்லாம் சோர்ந்து தனிமைகொள்ளும்போது மட்டுமே. ஆடைகளைந்து அமர்வதற்கான இடம் ஒன்று மானுடர் அனைவருக்கும் வேண்டும். எனக்கு அது உன் மஞ்சம்என்றான். அவள் அச்சொற்களின் பொருளை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளவில்லை. “என்னை முற்றிலும் வெல்ல நான் ஒப்புக்கொள்ளும் ஒரு களம். நான் முழுதமையும் ஒரு பீடம்என்று அவன் சொன்னான்.  
       

 சகதேவனின் இக்கூற்று அவன் கணவனென தனக்கு முற்றிலும் உரித்தானவன் என்று விஜயையை உணரவைக்கிறதுஅவள் உள்ளத்தில் இருந்த உறுத்தல்கள் எல்லாம் முழுமையாக அகன்றுபோகின்றன. தடையின்றி அவனை தன் உடலாலும் உள்ளத்தாலும் கூடுகின்றாள்.
ஒரு கணத்தில் அவன் சொன்னதனைத்தும் அவளுக்கு புரியஎன் தெய்வமே!” என்ற மெல்லிய முனகலுடன் கைகளாலும் கால்களாலும் அவனை அள்ளி தன் உடலுடன் அணைத்துக்கொண்டாள்.

        மனிதன் உறவுகளை மற்றும்  பொருட்களை எனது என்றுகொள்ளும்  மமகாரம் அவனுக்கு மகிழ்ச்சியைத் தருவதுஅத்தகைய மகிழ்ச்சியில் தன் வாழ்க்கைத்துணைவர் என்று ஒருவரை அடைவது மிகத் தலையானது. அந்த மகிழ்ச்சியை தக்கவைத்துக்கொள்ள மனிதகுலங்கள்  பண்பாடு என்றும் வாழ்வு நெறிகள் என்றும் சில நடைமுறைகளைக் கொண்டு தம்பதியர் என இணைந்து இருக்கும் குடும்பவாழ்வை முக்கியமாக்கி   வைத்திருக்கின்றன.   அதில்  தோன்றும் இடர்பாடுகளைக் களைந்துகொள்ள சோம்பல்பட்டு இன்றைய காலத்தில் குடும்ப வாழ்வை தவிர்க்க நினைக்கின்றனர்ஒருவர் இவ்வாறு திருமணமின்றி வாழ்வை அனுப்விப்பேன் என்று கூறுவது,   ஒரு திருமண வரவேற்பு விழா ஒன்றில்  முதலில் தரும் பழச்சாரையும் சோளப்பொறிகளை  மட்டுமே தின்றுவிட்டு அங்கு அளிக்கப்படும் அறுசுவை உணவை உண்ணாமல் போகின்ற அசட்டுத்தனத்தைப் போன்றதே.   இல்லற இன்பத்தின் வேரென இருக்கும் உளவியல் கூறு ஒன்றை வெண்முரசு மிக அழகாக இன்று காட்சிப்படுத்தி இருக்கிறது.