காட்டிற்குள் நுழைந்ததும் துச்சளை உணரும் விடுதலையை வாசகர்களும் உணரச் செய்தது இன்றைய அத்தியாயம் என்றால் அது மிகையல்ல. உண்மையில் இன்றைய அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி அபாரமான ஒரு சிறுகதை. குறிப்பாக அது முடிந்த விதம். துச்சளை நடந்து வருகையில் தனது இரைக்காகக் காத்திருக்கும் மலைப்பாம்பைக் காண்கிறாள். அது காத்திருக்கிறது, அதன் வாய்க்குரிய அளவுள்ள ஒரு இரைக்காக. அவர்களை அது ஒன்றுமே செய்யவில்லை, வெறுமனே நோக்கிக் கொண்டு அவர்களைக் கடந்து போக அனுமதிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பொருளற்ற விழிகளோடு, அசைவைக் கூட காட்டாமல் இருக்கிறது. அதைத் தாண்டிப் போகும் துச்சளையின் காலில் மாட்டாதிருக்கும் பொருட்டு ஒரு பெரிய சாம்பல் முயல் துள்ளி விலகி ஒரு வேர்ப்புடைப்பில் அமர்கிறது. எங்கே துச்சளை தன்னை நோக்கி வந்துவிடுவாளோ என்ற அச்சத்தில் அந்த வேர்ப்ப்புடைப்பில் இருந்தும் விறைத்து, இறுகிய உடலோடு பாய்ந்து செல்கிறது. அந்த முயலின் அச்சம் அதை எங்கே செலுத்துகிறது? தன் வாயின் அளவுக்குரிய இரைக்காகக் காத்திருக்கும் மலைப்பாம்பின் முன் அல்லவா!!!
குருதிச்சாரலில் துச்சளை மட்டுமல்ல, போரை நிறுத்த எண்ணும் அனைவரும் அந்த முயலை மலைப்பாம்பின் முன் கொண்டு சேர்க்கும் பணியைத் தான் செய்துகொண்டிருக்கின்றனர்!!! இவர்களின் அத்தனை முயற்சியையும் அந்த மலைப்பாம்பு எவ்வித எதிர்வினையையும் புரியாமல் அப்படியே அனுமதிக்கிறது. அதற்குத் தெரியும், அதன் இறை அதற்கான இரையை அதன் கண் முன் இவர்கள் வாயிலாகக் கூட கொண்டு வந்து சேர்த்து விடும் என்று!! மிகச் சரியாகத் தான் அன்னை காந்தாரி உரைக்கிறாள் - “ஊழ் என்பார்கள். ஆனால் கண்ணெதிரே தெரிவது ஒவ்வொருவரும் தங்களால் முடிந்தவரை அதை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதுதான்,அங்குதான் மீட்பும் இறைவனும் இருப்பதைப்போல”. அழிவின் ஆகர்ஷணம் அப்படி!!
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்