Tuesday, January 30, 2018

பீலி



ஜெ,

அவ்வளவு இனிமையான சியாமளைக்கு எப்படி நீண்ட வளைந்த பற்கள் உருவாகி வந்தன? அத்தனை பலி கொடுத்து அவள் அம்பையிடம் வேண்டிக் கொண்டது என்ன? பீலியைத்தானா? அது கிடைக்காததனால்தான் அவள் தனிமையிலிருக்கிறாளா? பானுமதி முடிவெடுத்த உடன் அங்கு சென்று விட்டாள். அதனால்தான் நான் தனிமையிலிருந்தேன், நீ வந்து விட்டாய் என்கிறாள் என நினைக்கிறேன்.

நேற்றைய அத்தியாயத்தில் யோகத்தைப் பற்றி ஒரு பகுதி வருகிறது, அதைத் தொடர்ந்து அந்த உயரத்தை சமன் செய்கிறது ஒரு பீலி. அது ஆழத்தில் காத்திருந்திருக்கிறது. இன்று கிருஷ்ணனை வரவேற்கப் போவது காசி நாட்டு பானுமதியாகவா, அஸ்தினபுரியின் பானுமதியாகவா என்பதில் வந்து நிற்பது அதுவே.

பானுமதியின் முடிவு கௌரவ அரசியரின் முடிவும் கூட. கணிகர் கௌரவர்களுக்கும் அவர்கள் அரசியருக்கும் இருந்த இடைவெளியை இந்த தருணத்தைப் பயன்படுத்தியும், பானுமதியின் பீலியைப் பயன்படுத்தியும் இணைத்துவிட்டார். கணிகருக்குத் அச்சம் கிருஷ்ணனிடம் கூட இல்லை, அம்பைகளை எதிர் கொள்வதில்தான். அவர்கள் இந்தப் பக்கம் இருக்க வேண்டும் என எண்ணுகிறார். 

நேற்றுதான் கிருஷ்ணா மேற்கத்திய உளவியலும், பெண்ணியமும் அம்பையையே முன்மாதிரி வடிவமாக வைக்கிறது, அதைத் தாண்டி ஊர்வரை வருவதில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தாள். சுவர்ணை, சோபை, விருஷ்டியைக் கடந்த பின்பு குருதியில் நடந்து பீலியை அடையாதவர்கள்தான் கோரைப் பற்களோடு அலைகிறார்கள். இப்போது யோசித்தால் அம்பைக்கு பீஷ்மரே ஒரு பொருட்டில்லை, பீலிக்காகத்தான் அத்தனை துயரடைந்தாள் எனத் தோன்றுகிறது. 

பானுமதியிடம் வேழத்தின் தந்தங்கள் இருக்கின்றன. பானுமதி பீலியாக சூடிக் கொள்ளப்போவது அதைத்தான். அம்பையின் பீலியாக ஊர்வரை இருந்ததைப் போல. அதனால்தான் அந்த ஆழி மலராக இருக்கப் போகிறது.

சரியா எனத் தெரியவில்லை...ஆனால் இப்படி வாசிக்கவும் இடமிருக்கிறது போலத் தோன்றுகிறது.

ஏ வி மணிகண்டன்