ஜெ
இருபது ஆண்டுகள் இருக்கும் என நினைக்கிறேன். மதுரையில் ஒரு கூட்டத்தில் மார்க்ஸிஸ்ட்
பேச்சாளரான நன்மாறன் [தமிழகத்தின் மேடைப்பேச்சாளர்களில் இவரைத்தான் நான் மிகச்சிறந்தவராகக்
கருதுகிறேன். பலரும் இவரை மறந்துவிட்டார்கள்] புரட்சி என்ற சொல்லை எப்படி அதிமுக, திமுக
எல்லாம் சேர்ந்து அழித்தார்கள் என்று பேசினார். முதலில் அவருக்கே உரிய முறையில் நகைச்சுவையாக
ஆரம்பித்து மெதுவாக சீரியஸாக ஆகி கண்களில் நீர் தளும்ப அதைச் சொன்னார். ஒரு பெரிய கனவைக்
கொன்னுட்டாங்கய்யா. ஒரு இலட்சியத்த அப்டியே அழிச்சிட்டாங்க. ஒரு வார்த்தையக் கொல்றதுங்கிறது
ஒரு பெரிய மரபையே கொல்றதுதான். இனிமே தமிழிலே அந்த வார்த்தையே எவனும் சொல்லமுடியாதபடி
ஆக்கிட்டானுக’ என்றார்
அந்த வரியை இன்று வெண்முரசு வாசிக்கும்போது ஞாபகப்பட்த்திக்கொண்டேன். நாம் புழங்கும் ஒரு சொல்லின் பொருளை அழிக்கையில் நம்மை ஏந்தியிருக்கும் தெய்வங்களில் ஒன்றை திருப்பியனுப்புகிறோம்ஒரு சொல்லை நாம்
அழிக்கும்போது அது குறிக்கும் அத்தனை அர்த்தங்களையும் மழுங்கடித்துவிடுகிறோம். அந்த
கான்செப்டே மேற்கொண்டு புழங்காதபடி ஆக்கிவிடுகிறோம்.
ராஜசேகர்