Wednesday, January 17, 2018

குருதிச் சாரல் – போரெழுகை



ஒரு வட்டத்தின் துவக்கப் புள்ளியில் இருந்து அதன் நேர் எதிர் புள்ளிக்கு அந்த வட்டத்தின் சுற்றுப்பாதை வழியே எவ்விதம் செல்லலாம்? துவக்கப் புள்ளியின் வலப்புறமாக 180 பாகையில் சென்று சேரலாம். இடப்புறமாகவும் அதே 180 பாகையில் சென்று சேரலாம். குருதிச் சாரலில் அத்துணை போர் தவிர்க்கும் முயற்சிகளும் இடப்புறமாக போரை நோக்கிச் செல்பவையே.

இன்று துரியன் எடுக்கும் முடிவுக்கு வழி காட்டியது யார்? கணிகரா? இல்லை, விகர்ணனே. அவன் கூறிய வார்த்தைகளில் இருந்து தான் தந்தையைத் துறத்தல், அன்னை தந்தையின் துணைவியாக மட்டும் ஆதல் போன்ற கூறுகளை துரியன் எடுத்துவிட்டிருக்கிறான். விதுரர் கூறுவது போல நஞ்சு படர்ந்த நிலமாக ஆகிவிட்டது அஸ்தினபுரி. அது வெளிப்படையாகவே நஞ்சால் கொள்ளப்பட்டிருந்த காலம் இருந்தது. பன்னிரு படைக்களத்தில் வரும் அது. அக்காலத்தில் அந்நகரத்தில் நலமோடு, துடிப்போடு இருந்தவர் கணிகர் மட்டுமே. அவரே அன்று வலியின்றி துயின்றார். இதோ இன்று அவையில் கூட கிடைத்த இடைவெளியில் கண்ணில் கோழை வரும் வரை தூங்க இயல்கிறது அவருக்கு. நஞ்சைக் கலக்கிறார்.

ஒரு வகையில் துரியன் பிறந்த நாளில் இருந்து இந்த நிலைக்குத் தான் அவனை அஸ்தினபுரி தள்ளி வந்துள்ளது. எனவே தான் அவர்கள் அவனுடன் கூட இருக்க விழைகின்றனர்.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்