Wednesday, January 24, 2018

பாண்டவன்:


வெண்முரசின் முக்கியமான இயல்பு அது மகாபாரதத்தில் இருக்கும் சில கேள்விகளுக்கு தன்னளவிலான விடை அளிப்பது. சில கேள்விகள் நாமே அறிந்தவை. பெரும்பாலும் ஊழ் என்றோ, எம்பெருமான் திருவிளையாடல் என்றோ விளக்கப்பட்டிருந்தவை. சில கேள்விகள் நாம் சிந்தித்துக் கூட பார்த்திராதவை. அவற்றைக் கேளிவிக்குட்படுத்தலாம் என்று கூட எண்ணியிராதவை. அப்படிப் பட்ட ஒன்று தான் ஏன் குந்தியின் மைந்தர்கள் ஐவரும் பாண்டவர்கள் என்றழைக்கப்பட்டனர் என்பது.

நாமறிந்த மகாபாரதம் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையேயான யுத்தம். உண்மையில் பாண்டுவின் புதல்வர்கள் பாண்டவர்கள் என்றால், திருதராஷ்டிரரின் மைந்தர்கள் தார்த்தராஷ்டிரர்கள் என்று தானே அழைக்கப்பட்டிருக்க வேண்டும். (திருதாவை தார்த்தா என்றே சத்யவதி அழைக்கிறாள். பிரயாகையில் துரியனே கூட தங்களைத் தார்த்தராஷ்டிரர்கள் என்றே அழைத்துக் கொள்கிறான்.) ஆனால் அவர்கள் குருவின் வழி வந்தவர்கள் என்ற பெயரில் கௌரவர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். கௌரவர்கள் என்ற பெயரே அவர்களை அஸ்தினபுரிக்கு குல முறைப் படி உரித்தானவர்கள் ஆக்கி விடுகின்றது. கௌரவர் அல்லாத ஒருவர் அதற்கு உரிமை கோருவதே குல முறைப்படி தவறு அல்லவா! குந்தியும் ஒருமுறை இதைச் சொல்லியிருக்கிறாள்.

குந்தி இத்தகைய அரசியல் கணக்குகளை அறியாதவள் அல்ல. இருந்தும் அவள் தான் பாண்டுவிடம் தருமன் பாண்டவன் என்றே அழைக்கப்படுவான் எனக் கூறுகிறாள், அவன் பிறக்கும் முன்பே. அதைக் கேட்டு பித்தனைப் போல் பாண்டவன், பாண்டவன் என்றே மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே குழந்தை தருமனை கையில் எடுக்கிறான் பாண்டு. தருமன் மற்றும் தம்பியர் பாண்டவர்கள் என குந்தி கூறியது அவள் சிந்தித்து எடுத்த முடிவு அல்ல. தான் கருவுற்றிருக்கும் செய்தியை ஒரு அசூயை கலந்த விலக்கத்தோடு எதிர்கொண்ட பாண்டுவின் உள்ளத்தை உணர்ந்தவளாக அத்தருணத்தில் அவளிடம் இருந்து வந்த சொல் அது. ஆனால் அவ்வாறு கூறிய காரணத்தாலேயே தனது முதல் மைந்தனை அவள் கைவிட நேர்கிறது. இத்தனைக்கும் பாண்டு அவளது முதல் மைந்தனை தன் கானீன புதல்வனாக ஏற்றுக் கொள்வதாகவும், அவனே அஸ்தினபுரியின் முதல் மைந்தன் என அறிவிப்பதாகவும் கூறியிருந்தவன் தான். ஆயினும் அவன் அகம் அறிந்த ஒருத்தியாக அவளால் கர்ணனைப் பற்றி தருமனின் பிறப்புக்குப் பிறகு பாண்டுவிடம் பேச இயலவில்லை. ஏனென்றால் அவள் தருமனே பாண்டவன் என அழைக்கப்படுவான், அறியப்படுவான் எனக் கூறியது தான். அத்தருணம், அவளை மீறி எழுந்த அச்சொல் அவளை கார்க்கோடகன் முன் கர்ணனை வெட்டி வீழ்த்தும் எல்லை வரை கொண்டு சேர்க்கிறது. அத்தோடு அவளிடம் யாரோடென்று தெரியாத ஒரு வஞ்சத்தையும் கொண்டு வந்து சேர்க்கிறது.

மழைப்பாடலில் பாண்டுவின் இந்த இருள் ஆழம் தெளிவாகவே வந்திருக்கிறது. இருப்பினும் அன்று வாசிக்கையில் பாண்டுவின் இயலாமையை இவ்வளவு ஆழத்திற்கு விரித்துச் செல்லவில்லை நான். இப்போது பார்க்கையில் குந்தி கர்ணனைக் கைவிட பாண்டுவின் இந்த ஆழமே காரணம் எனத் தெளிவாகவே தெரிகிறது. பாண்டுவும், குந்தியும் சந்திக்கும் அந்த முதலிரவில் அவன் காந்தாரியின் கற்பைப் பற்றிப் பேசுகிறான். அந்த பேச்சே குந்தியை கர்ணனின் பிறப்பைப் பற்றிய அறிவிப்பைத் தயங்க வைக்கிறது. இத்தனைக்கும் அவள் தான் யாதவப் பெண் என்பதைத் தெளிவாக உரைத்து, தனது கற்பு நெறிகள் ஒரு ஷத்ரியப் பெண்ணின் கற்பு நெறிகளில் இருந்து மாறுபடுவது என்பதைக் குறித்த திசையில் உரையாடலைத் திறமையாக நகர்த்தி வந்திருப்பாள். இருப்பினும் அந்த ஷத்ரிய கற்பு குறித்த உரையாடலில் அவள் கணவனுடன் இணைந்து வாழ விரும்பும் வெறும் பெண்ணாக மாறுகிறாள். குந்தி ஷத்ரியர்களின் வழிகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் நிகழ்வுகளுக்கு ஆரம்பம் இதுவே. அதற்கு முன்பு வரை அவள் ஒரு யாதவ குலத்தவளாகவே தன்னை முன்வைத்திருக்கிறாள். அதற்குப் பிறகு தன்னை முழு ஷத்ரியப் பெண்ணாக மாற்றிக் கொள்கிறாள்.

பாண்டுவின் உள் இந்த கற்பு குறித்த, நிலம் குறித்த சிந்தனை எப்போது வந்தது என்பதற்கும், சொல்வளர்காடில் தருமனுக்கு சீதையின் கதையுடனான தொடர்புக்கும் ஒரு சம்பந்தம் உள்ளது. அது முதன் முதலாக பாண்டு அஸ்தினபுரி தாண்டி வெளியுலகு காணும், கங்கையைக் காணும் அந்த இரவில், படகில் அவன் கேட்கும் குகர்களின் பாடல். அப்பாடலில் வருவது சீதையின் கதை. கங்கைக் கரையில் ராமன், லக்குவனோடும் சீதையோடும் வந்து நிற்க அவன் கங்கையைக் கடக்க அம்பியிடும் குகனின் உணர்வுகளைப் பாடுகின்றனர் பிற குகர்கள். அப்பாடலில் குகன், ராமனுடன் உரையாடுகிறான். ஆனால் கங்கை அன்னை சீதையுடன் உரையாடுகிறாள். அபாரமான கவித்துவமும், கற்பனையும் பொதிந்த ஒரு பகுதி அது. கங்கை அன்னை சீதையிடம் அவள் துயரம் எதற்காக என வினவுகிறாள். அத்தனை துயரும் அன்னையின் துயர் அல்லவா என பெருமூச்செறிகிறாள். அந்த இடத்தில் நினைவிழக்கும் பாண்டு விழிக்கையில் தன் அன்னை அம்பாலிகையை அறிந்து கொண்டதாகக் கூறுகிறான். அந்த இரவில் அவன் அறிந்தது கங்கையின் ஆழத்தை மட்டுமல்ல, தன் அன்னையின் ஆழத்தையும் தான். அவளின் துயரும், அன்னை சீதையின் துயரும் விருப்பமின்றி அபகரிக்கப்பட்டு சிறையிடப்பட்டு, தன்னவர்களால் கைவிடப்பட்டவர்கள் என்ற புள்ளியில் ஒன்றிணைவதை உணரும் பாண்டு, தன் அன்னையின் உள் நின்று எரியும் அழலை அணைக்க கங்கையால் கூட இயலாது என உணரும் இடத்தில் மானசீகமாக பீஷ்மரிடம் இருந்து விலகுகிறான். அந்த விலக்கமே அவனை வெறும் விசித்திர வீரியனின் புதல்வனாக மட்டும் எண்ணச் செய்கிறது. அந்த விலக்கமே அவனை குரு குலத்தின் தொடர்ச்சியில் வைத்து தன்னை பார்க்க விடாமல் செய்கிறது. அந்த இரவின் முடிவில் வரும் பாண்டு, வெறும் பாண்டு, தன் குலத்தை உதற விரும்புபவன், புது குலத்தை உருவாக்க விழைபவன். எனவே தான் அவன் அஸ்தினபுரியை எளிதாக நீங்குகிறான்.

இதைத் தான் அவன் குந்தியிடம் சந்திக்கும் முதல் இரவில் அவளிடம் பகிர்கிறான். இதைத்தான் தன் மைந்தர்கள் பாண்டவர்கள் என்று மட்டுமே அழைக்கப்பட வேண்டும் எனவும், குருவின் குலத்தோன்றல் என்ற பெயரைத் தன் தமையனின் மைந்தர்களே வைத்துக் கொள்ளட்டும் எனவும் கூறுகிறான். தான் ஒரு குலத்தைத் தோற்றுவிப்பதால் அழிவின்மையை அடைந்து விடுவதாக குதூகலிக்கிறான். தனது அக ஆழத்தைத் தான் கூட அறியாமல், மிகச் சரியாக குந்தியிடம் மட்டும் பகிர்ந்து கொள்கிறான். அவளை அவனே அறியாத அவன் எண்ணங்களைச் செயலாக்கும் ஒரு கருவியாக மட்டும் மாற்றுகிறான்.

குந்தி பீமனிடம் உரையாடும், குருதிச்சாரல்  29 ஆம் அத்தியாயம் வெண்முரசின் கதை சார்ந்த நிகழ்வுகளில் ஒரு முக்கியமான கோணத்தைத் திறந்திருக்கிறது. ஆம், பாண்டுவின் நுண்வஞ்சம் குறித்த குந்தியின் நெடுங்கூற்று. குந்தி தருமரிடம் கொந்தளித்த போது எனக்குள் எழுந்ததெல்லாம் பீமனின் கூற்றாக வந்த போது மகிழ்ந்தேன். அதன் பிறகு குந்தியின் பதில்கள் பழைய நிகழ்வுகளுக்கு புதிய வெளிச்சம் பாய்ச்சின. ஒவ்வொரு முறை குந்தி கர்ணனைப் பற்றி பேச வருகையிலும், பாண்டு அவனே அறியாமல் குந்தியிடம் வெளிப்படுத்துவது அவனது இந்த எண்ணத்தைத் தான். அதை ஒரு அடைக்கலம் கோரிய ஒரு குழந்தையின் செயலாக, கண்ணீர் நிறைந்த கண்களூடாக, பாண்டவர்களைப் பெற்ற தந்தை என்னும் பித்தாக அவளுக்குச் சொல்கிறான். ஒரு வாசகனாக அவன் பேசியவற்றை மட்டுமே நான் கவனித்தேன். இன்று குந்தி பீமனிடம் கூரியவற்றிற்குப் பிறகு அவனது உடல் மொழியைக் கவனித்தேன். அவை வேறு ஆழத்தைத் தொடர்ச்சியாக முன்வைத்துக் கொண்டே இருந்திருக்கின்றன.

வாசுகி அளித்த நச்சைக் குடிக்கவா வேண்டாமா எனத் தத்தளிக்கும் பீமனிடம், நிலத்தாசை நிறைந்தவளாக உடனே அருந்தும் படி அறிவுறுத்துவது குந்தி தான். பின்னர் அரண்மனை அடைந்தபின் அவனது கனவில் வரும் பாண்டு, நீ என்னிடம் அல்லவா கேட்டிருக்க வேண்டும் என துயருற்ற கண்களுடன் கூறுகிறான். ஆம், அந்த பாண்டுவைத் தான் பீமன் அறிந்திருந்தான். வாசகனாக நானும் அறிந்திருந்தேன். குரோதத்தை எக்கணத்திலும் தவிர்ப்பவனாகவே பாண்டு இருந்திருக்கிறான். திருதாவுக்கு செல்ல வேண்டிய முடி, நிலம் பிளப்பதால் பாண்டுவிற்கு வரும் போது அதை மறுத்துரைக்க அவனுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் தேடி வரும் நிலத்தைக் கைவிடுவது ஷத்ரிய தர்மம் அல்ல என்பதாலேயே அவன் மறு சொல் இல்லாமல் அதை ஏற்றுக் கொள்கிறான் என்பதையும் நாம் இணைத்துக் காண வேண்டும்.  ஆம், முடி என்பதும், ஷத்ரிய வழி என்பதும் அவனது ஆழம். அது அவன் அன்னை கொண்ட அழலுக்கு செய்யும் நிகர். அது அவன் மைந்தர்களுக்கு நேரடியாக அளிக்கப்படவில்லை. இன்று குந்தி பீமனை நோக்கி பாண்டுவின் இந்த ஆழத்தைக் கூறுவது, அன்று அந்த நஞ்சை அருந்தச் சொன்னது அவளல்ல, அவளுருவில் வந்த பாண்டு தான் என்ற பொருளிலேயே. இந்த இடத்தில் பீமன் குலாந்தகன் ஆகிறான். உண்மையில் போர் உறுதியாகும் இடம் இதுவே. இன்னும் எத்தனை ஆச்சரியங்கள் புதைந்துள்ளனவோ!!

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்