அன்புள்ள ஜெ ,
நேற்று உங்களின் வியாசர் உரை கேட்டு கொண்டிருந்தேன் , அதில் கர்ணன் ,அர்ஜுனன் ,பீமன் மூவரையும் முக்கிய இடம் தந்து இருக்கிறார் வியாசர் , காரணம் அவர்கள் பெரும் வீரர்கள் என , பெரும் வீரர்கள் வியாசனுக்கு பொருட்படுத்த தக்கவர்கள் என , அல்லது நான் அப்படி உங்கள் உரையை உள்வாங்கி கொண்டேன் . வெண்முரசு இந்த மனநிலைக்கு எதிராக அனைவருக்கும் வலு இல்லாதவர்களுக்கும் கூட சம அளவில் முக்கியத்துவம் தருகிறது , இதுதான் இரண்டிற்குமான பெரிய வித்யாசம் என தோன்றுகிறது , ஏனெனில் தாரை வந்த போது அவள் பிரமாதமான பாத்திர படைப்பு என தோன்றியது, பிறகு துச்சளை வந்த போது அப்படி எண்ணினேன் ,இப்போது பானுமதியை நோக்கவும் அப்படிதான் தோன்றுகிறது :) இதைவிட சேடிகள் கூட அப்படி எண்ண வைக்கிறார்கள் ,அபயை ஒரு வகை எனில் மாலதி இன்னொரு வகை , அந்தந்த இயல்பின் தீவிர வடிவமாக இவர்கள் இருக்கிறார்கள் .
வல்லபையிடம் பேசிகொண்டிருக்கும் போதே மனதிற்க்குள் இன்னொரு மூலையில், தன் மனதில் தோன்றிய வரி( அரசன் ஒரு கையில் நெருப்பும் மறுகையில் நீரும்.. ) எந்த நூலில் உள்ளது என தேடி கண்டுபிடிக்கும் இடம் பானுமதியின் தாவி செல்லும் மனநிலையை காட்டியது .
பானுமதி அம்பையின் கனவை சூடி கொண்டவள் , அதை அவளில் சூடிவிட்டது அவளது அத்தை . எனக்கு புரியாத இடம் மயிற்பீலியில் எப்படி அம்பையும் கிருஷ்ணனும் இணைகின்றனர் என்பதுதான் , மயிற்பீலி எருமையின் விழி எனும் வரி அம்பையின் கண் என எண்ணினேன் , மேலும் அவளது கனவு ,விருப்பம் என . அந்த கனவை கிருஷ்ணன் எடுத்து தலையில் சூடி கொள்கிறாரோ எனவும் அதை ஒவ்வொருவருக்கும் கையளிக்கிறார் எனவும் தோன்றியது .இன்னொரு பக்கம் கண்ணன் அம்பையின் (அழிவின் ) ஆசையை ,மயிற் பீலியால் சமன் செய்கிறாரோ என்றும் தோன்றியது .
பானுமதியின் அத்தை பாத்திரம் ,அம்மா பாத்திரம் இரண்டும் எதிரெதிர் எல்லைகள் . அத்தையில் யட்சி அம்சம் இருந்தது .
ராதாகிருஷ்ணன்