Tuesday, January 16, 2018

அறம்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

சத்தியம் என்று நம்புவது, அறம் எனக் கொண்டது, மனிதர் என்றால் இவ்வாறு என்று அமைத்துக்கொண்டது யாவும் எப்படியெல்லாம் போரால் சீரழியும் என்று பீஷ்மர் காட்டுகிறார்.  அச்சமயத்தில் போரின் காரணமான பாதிப்புகள், விழும் அடிகளும் வலியும் மரணமும் வன்கொடுமைகளும் எவ்வாறு இருந்தாலும் அதைவிட அதில் எஞ்சுவோர் அவற்றின் அற பிறழ்வுகளை, மனிதர் என்ற நிலையில் இருந்து வழுவியதன் வலியை நினைவுகளால், உணர்வுகளால் பலகாலம் கொள்ள வேண்டியிருக்கும்.  அதனின்று மீள்வதே கடினம்.  மனிதன் விலங்கிற்கும் தெய்வத்திற்கும் இடைநிலையில் இருக்கும் உயிர் எனும்போது தெய்வங்கள் மனித உடல்களை ஆட்கொண்டு கொடும் விலங்குகளின் ஆடலை ஆடி முடித்து அகல, கைவிட்ட தெய்வங்கள் மீது கசப்பும், கொடும் விலங்கென ஆகி நிகழ்த்தியவற்றின் குற்ற உணர்ச்சியும், சுய பச்சாதாபமும், தம் மீதே ஆன அச்சமும் அருவருப்பும் என மனிதரின் துயர்தான் எத்தனை பெரிது? .  தெய்வமும் விலங்கும் பொறுப்பேற்றுக் கொள்வதில்லை, இரண்டுமாக தம்மை கருதி களமாடிய மனிதரே பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டியுள்ளது.  தெய்வமும் விலங்கும் தம்மை அணுகாது துரத்தி தம்மை மனிதர் என்ற இடைநிலையிலேயே ஊன்றி நிலைநிறுத்திக்கொள்ளவே அறம் வகுத்து அதை இறுகப்பற்றுகின்றனர் என்று தோன்றுகிறது. இயற்கை கருணை அற்றது, முழுமுதன்மை மெய்மையை இறை என்பதும் கருணை அற்றது.  கருணையும் அறமும் காப்பீட்டுத் தேவைகளும் மனிதர்க்கு மட்டுமே.  விலங்கிற்கு அறம் கற்பிக்க வேண்டியுள்ளது, தெய்வத்திற்கு கருணை கற்பிக்க வேண்டியுள்ளது.  இரண்டும் அபத்தம் என்று அவ்வப்போது உணரவும் நேர்கிறது.


அன்புடன்
விக்ரம்
கோவை