ஜெ,
நேற்று இந்த வரிகளை வாசித்த பின்பு அவற்றின் கவித்துவம் என்னை அசைத்தது. "நீர்நிலைகள்மேல் இரவு என முதுமை விரைந்து அவர்மேல் படர்ந்துகொண்டிருப்பதைக் கண்டேன்.” காலை நடையில் அந்த கவித்துவத்தையே எண்ணிக் கொண்டேன். வானில் ஒளி மங்க ஆரம்பித்த உடனே அது நீரில் தெரிந்து விடும், நீர் என்பது வானின் பிரதிபலிப்பே. ஒளி முற்றிலுமடங்கிய பின்பும் கூட நிலத்தில் தண்ணொளி இருக்கும். ஒளி மறைவதன் துவக்கமும் இறுதியும் நீரில் மறைவதும் நிலத்தில் மறைவதும். நீரில் மறையும் ஒளி போல விதுரருக்கு அத்தனை சீக்கிரம் முதுமை வருவதற்கு என்ன காரணம் என யோசித்துக் கொண்டேன்.
அவையில் திருதா எழுந்து மன்றாடியதற்கு பிறகு விதுரரின் மன்றாடல் நினைவுக்கு வந்தது. விதுரரின் கதையில், முதுமை என்பது நிகழ்பவற்றை எதிர்கொள்ள முடியாமை, அவருடைய காலம் கடந்து விட்டது என்று உணர்தல். இன்றைய பிளவு விரிசலாகத் துவங்கும் முன்பே போர் வரக்கூடும் என்று அறிந்தவர்கள் விதுரர், சகுனி, பீஷ்மர். இன்று பிற இருவரும் தங்கள் வஞ்சத்தாலும், தன் முனைப்பாலும் நிகழ் காலத்தை எதிர் கொள்கின்றனர். விதுரருக்கு மட்டுமே அப்படி எதுவும் இல்லை. சொல்லற்ற கவிஞர் பிறர் கவிதைகளின் வழி தன் கவிதையை அடைவது போல அவருடைய கூர்த்த மெய்ஞானம் நடந்தவற்றை அறிந்து கொள்ள பயன்படுகிறதே தவிர, உய்த்தறிவதற்கு கூட இல்லை. அவர் எப்போதும் நிகழ் காலத்திற்கு பின்னால் ஒடுகிறார், அரற்றிக் கொண்டு. அதுவே அவரை எளிதில் முதுமையடையச் செய்கிறது.
இதே அத்தியாயத்தில் யுதிஷ்ட்ரரின் முதுமைக் குறித்தும் ஒரு வரி வருவது யதேச்சையானது அல்ல. பாண்டவர்கள் பக்கம் பீமனும், அர்ஜுனனும், சகுனியின், பீஷ்மரின் இடத்திலேயே இருக்கின்றனர். யுதிஷ்ட்ரர் மட்டுமே விதுரரைப் போல இருக்கிறார். மந்தன் கூட தன் கோபத்தாலும், வீரத்தாலும் துடிப்போடு இருக்கிறான். யுதிஷ்ட்ரர் ஒவ்வொரு முறையும் என்ன செய்யலாம் யாதவரே என்று அவர் வாயைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
உடனே ஆணிமாண்டவ்யரின் கதை நினைவுக்கு வந்தது. அதில் விதுரரே தன்னை கொள்ளியில் அமர்ந்த எறும்பென்று சொல்லிக் கொள்கிறார். கூடவே “முனிவரே, நூறாண்டு கண்ட முதியவர்கள் இளமைந்தரின் களிப்பை தாங்களும் அடைகிறார்கள். முற்றறிபவர் துயருறுவதில்லை”. பீஷ்மரையும், சகுனியையும், கணிகரையும், கிருஷ்ணனையும்தான் அப்படி சொன்னார் போல. "அவங்களுக்கும் என் வயசுதான ஆகுது, நல்லாத்தான் இருக்குறாங்க” என்பதைப் போல.
ஆணிமாண்டவ்யர் தன் இருப்பை சொல்லும் போது "மெல்லுடலிகள் முட்புதரில் வாழ்வதுபோன்றது அறம்மர்வோன் அன்றாட வாழ்க்கையில் அமைவது” என்கிறார். அதுதான் விதுரருக்கும் முதுமையை விரைந்து கொணர்வது. ஆச்சரியமாக, ஆணிமாண்டவ்யரின் அத்தியாயத்திலேயே விதுரரின் ஆடிப்பாவையாக யுதிஷ்ட்ரரை சொல்லப்பட்டிருக்கிறது. "நான் தீச்சொல்லிடுகிறேன். உன் துளியில் ஒன்று மைந்தன் என மண்பிறக்கட்டும். அங்கே உலகியலின் பெருங்கொந்தளிப்புக்கு நடுவே அறம்நாட முயன்று அகமழியட்டும்” என்றார் மாண்டவ்யர். “நான் அடைந்த இக்கட்டை அவனும் அறிக! தேர்ந்த சொல் ஆயிரம் நாவில் உறைகையிலும் சொல்லற்றவனாக அவையமர்வான். செவிடர் கூடிய அவையில் கூவித்தளர்வான்
ஏ வி மணிகண்டன்