Wednesday, January 31, 2018

ஓநாய்களின் இறவாமை (குருதிச்சாரல் 42)       ஒரு மனிதனைப்போல் மற்றொரு மனிதன் இல்லை. ஒரே வீட்டில் பிறந்த இருவருக்குமிடையே கூட பல வேற்றுமைகள் இருக்கின்றன.  இரு வேறு மனிதர்களை அவர்தான் இவர் என குழப்பிக்கொள்வது மிக அரிதாகவே நடக்கிறது.  முகம் உடல் வடிவு என்றுதானில்லாமல் அவர் நடை பேச்சு போன்ற பாவனைகளிலும் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றனர். வெவ்வேறு விதமான உடைகள் வெவ்வேறு வண்ணங்கள்.  ஏன் மனிதசமூகம் ஒட்டுமொத்தமாக இதுதான் சிறந்த உடை,  இதுதான் அதற்கான சிறந்த வண்ணம் என்று குறிப்பிட்ட ஒன்றை தேர்தெடுக்க முடியவில்லை?  ஒவ்வொரு மனிதனுக்கும்   விருப்பு வெறுப்புகள் மாறுபடுகின்றன. இப்படி எந்த இரு மனிதர்களுக்கும் இடையிலான வேறுபாடு என்பது இப்போது உயிர் வாழும்  மனிதர்களுகிடையே மட்டுமல்ல, இதுவரை பிறந்திருந்த அனைத்து மனிதர்களுக்கிடையேயும் நாம் காண முடியும். இவ்வளவு ஏன்,  நேற்றிருந்த நானே இன்றிருக்கும் நான் என்று சொல்ல முடியாது. என் உடல் சிந்தை திறன் மாறிவிட்டிருக்கும்.  
     இதற்கு காரணமாக நான் கருதுவது மனிதனின் மனம். மற்ற விலங்குகளுக்கில்லாத அளவு மனிதனின் மனம் அதிக வளர்ச்சிகொண்டிருக்கிறது அவன் தனக்கு தேவையானதும் தேவையற்றதுமான எதைப்பற்றி வேண்டுமானால் சிந்தித்துப்பார்க்கிறான். மாறுபட்ட சிந்தனைகள் மனிதர்களுக்கிடையே மாறுபட்ட கருத்துக்களைத் தோற்றுவிக்கின்றன. மாறுபட்ட கருத்துக்கள் காரணமாக மாறுபட்ட விழைவுகள், மாறுபட்ட விருப்புவெறுப்புக்களை மனிதர்கள் கொள்கிறார்கள். ஒரே செயலுக்கு மாறுபட்ட எதிர்வினைகளை ஆற்றுகிறார்கள்.  இதுவே இரு மனிதர்கள் ஒன்றுபோல் இருப்பதை முற்றிலுமாக இல்லாமலாக்குகிறது  எனக் கருதுகிறேன். 
  ஆனால் விலங்குகளுக்கிடையே அவ்வளவு வேறுபாடுகள் இருப்பதில்லை. அவை ஒன்றுபோல் இருக்கின்றன ஒன்று போல் நடந்துகொள்கின்றன. சூழல் மாறாதிருக்கும் ஒரே கானகத்தில் நூறாண்டுகள் முன் வாழ்ந்த ஓநாய்க்கும் இப்போது வாழும்  ஓநாய்க்கும் குணத்தில்,  உணவு உறைவிடம் பொருட்டான விருப்பு வெறுப்புகளில் வேறுபாடுகள் ஏற்படுவதில்லை. அவைகளுக்குள் வேறுபாடு இல்லாது போவதற்கு காரணம் அவற்றின் சிந்தனை அவறின் உடல் பூர்வமான தேவைகளைத்தாண்டி பெருகி வளராதவை. ஆகவே அவற்றின் மனம் ஒன்று போல் இருக்கிறது.  ஒரு ஓநாயின் மனமும் அதன் மூதாதையின் மனமும் ஒன்றே தான் என்றால் அதுவும் அதன் மூதாதையும் ஒன்றே தான் என்று சொல்லலாம் அல்லவா?  ஆகவே  ஒரு ஒநாயின் உடல் இறப்பில் மறைந்தாலும் அதன் மனம் அதன் குட்டிகள் வழியே மீண்டும் மீண்டும் இருந்துகொண்டே இருக்கிறது.  ஒநாயின் மனம் எப்போதும் எதாவது ஒரு உடலில் வாழ்ந்துகொண்டே இருப்பதால் அது என்றும் இறவாதது என்று ஏன் நாம் சொல்லக்கூடாது.  வெண்முரசு ஒநாய்க்குட்டிகளின் சொற்களில் நமக்கு இந்த உண்மையை உணர்த்திச் செல்கிறது. 

நெய்யை முகர்ந்துகொண்டிருந்த லோமசன் “அன்னை இப்போது எங்கிருப்பாள்?” என்றான். “வேறெங்கோ அதே பெயரில் அதே வடிவில் இருப்பாள்” என்றான் அகாபிலன். “நாம் இறந்து மீண்டும் அவ்வண்ணமே பிறக்கிறோம். இதோ, இந்தப் பறவைகள், கழுதைப்புலிகள், செந்நாய்கள், கழுகுகள் அனைத்தும் அவ்வடிவில் அப்பெயரில் மீண்டும் நிகழ்கின்றன. உதிர்ந்த இலைகள் மீண்டு வருகின்றன. அலைகள் சென்று மடிந்தெழுகின்றன.” லோமசன் செவிகளை சொடுக்கியபடி கூர்ந்து நோக்கிவிட்டு திரும்பி கிருங்கனை நோக்கினான். “என்றுமிருப்போம் என்று உணர்ந்திருப்பதனால் நமக்கு இறப்பு அச்சமூட்டுவதில்லை. தெய்வங்களை நாம் வழிபடுவதுமில்லை” என்றான் அகாபிலன்.
ஆனால் இப்படி மனிதர்கள் மீண்டும் மீண்டும் அழியாமல் தோன்றுவார்கள் என்று சொல்லமுடியாமல் போவதற்கு காரணம் அவர்கள் தங்களின் பெருமையாகக் கருதிக்கொள்ளும் சிந்தனைப் பெருக்கும் அதன் காரணமாக அவர்கள் மனங்கள் ஒன்றுக்கொன்று மாறுபாடுகொண்டிருப்பதாலும் அல்லவா?  தன் மனம் இறப்பில் அழிந்துவிடும் என்று அச்சப்படுவதாலேயே மனிதர்கள் இறப்புக்கு அஞ்சுகிறார்கள்.  அப்படி இல்லாமல் இறப்புக்கு பின் நம் சிந்தை அழியாமல்    வேறு உடல்கொண்டு மீண்டும் புவியில் வாழும் நிலை இருந்தால்  அவர்கள் ஏன் இறப்புக்கு அஞ்சப்போகிறார்கள்?  அதே நேரத்தில்   ஞானிகள் தம் மனதை அழித்து,  தான் நானென்றறிவது அந்தப் பரப்பிரம்மத்தையே என உணர்கையில் அவர்கள் மனதைத் துறந்துவிடுகிறார்கள். அதன் காரணமாக இறப்பை அஞ்சுவதில்லை. அதை இறவாநிலை என்று நம் தத்துவங்கள் கூறுகின்றன.  'சாகாதெனையே சரணங்களிலே கா கா நமனார் கலகம் செயும் நாள்'  என்று அருணகிரிநாதர் இறைஞ்சுவது  தான் அந்த பிரம்மத்தில் கரைந்துபோவதன் மூலம்   இறப்பை வென்று நிற்கும் நிலையடைதலைக் குறித்தல்லவா?

தண்டபாணி துரைவேல்