ஜெ
அவையில் அமர்ந்திருக்கும்
துர்யோதனின் தோற்றத்திற்கான வர்ணனை திகைப்பை அளித்தது. ஒரு தெய்வச்சிலைக்குரிய வர்ணனை.
தெய்வங்களைப் போலவே அவனைச்சூழ்ந்து ஏராளமான பூதகணங்கள். அவையெல்லாம் அவனே. ஆனால் அவன்
அதன் உச்சம். முழுமை. தெய்வங்களுக்கு உள்ள நிலைபேறுத்தன்மையை அவன் அடைந்துவிட்டான்.
எல்லாரையும் கொஞ்சமாவது பெயர்க்க முடியும். அவனை இனி ஒன்றுமே செய்யமுடியாது. அவன் அனைத்துவகையிலும்
முழுமைகொண்டுவிட்டான். இனி விண்ணுக்குச்செல்வதைவிட ஒன்றுமே செய்யமுடியாது.
நோக்க நோக்க ஒவ்வொருவரும் அவரிடமிருந்து கூரிய வேறுபாடு கொண்டனர். அமர்வின் கோணலால், முகத்தின் பிழையால், விழிகளின் மங்கலால், தோள்களின் வடிவால், நெஞ்சின் விரிவால், விழிதொட்டறிய முடியாத ஏதேதோ கூறுகளால் அவர்கள் அவர் அல்லாதாயினர். அவர்களினூடாகச் சென்று அவர் தன் முழுமையை அடைந்துவிட்டிருக்கிறார் என்ற வர்ணனை மிகவும் அழகானது. அவன் எப்படி தெய்வம்போல ஆனான்
என்பதைக்காட்டுவது. ஆனால் கிருஷ்ணன் அப்படி அல்ல. அவன் தெய்வமாக அல்ல. மனிதனாகவே இருக்கிறான்.
கோணலாக அமர்ந்திருக்கிறான். மனிதர்களுக்குரிய துன்பங்களை அடைந்தபின்னர்தான் அங்கே வந்திருக்கிறான்.
ஆனால் அவன் காலடிகள் மட்டும் தெய்வங்களுக்குரியவையாக உள்ளன. அவை புன்னகை செய்கின்றன
ஜெயராமன்