அன்புள்ள ஜெ ,
முதல்விசயம் துச்சளையை கூட்டி வந்ததற்காக நன்றி :) பிந்துமதி ,கரேணுபதி பார்த்து நொந்திருந்தேன் , துச்சளை சிரிக்கும் புதுமலர் போல இருக்கிறாள் .
சிரித்தமுகம் என்பது மலையின் மீது பொன்னொளி விழுவது போல என தோன்றும் , சிரிப்பு அப்படியே ஆளை இன்னொருவராக நெருக்கமானவராக மாற்றிவிடும் , துச்சளை அப்படிதான் , அவளது அதிக எடை கொண்ட உடல் அந்த சிரித்த முகத்தினால் அழகான ஒன்றாக மாறி விடுகிறது , குண்டு குழந்தையை ரசிக்கிறோமே , அது போல . இப்போது யோசிக்கும்போது உணர்கிறேன் , நான் நெருக்கமானவராக நினைக்கும் எல்லோரும் மலர்ந்த முகம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் , பிடிக்காதவர்கள் என யோசிக்கும் போதே அவர்களின் சுழித்த முகம்தான் மனக்கண்ணில் முதலில் வருகிறது :)
துச்சளை உண்மையான பிரபு மனநிலை கொண்டவள் , பிரபு மனநிலை என நான் நினைப்பது "கொடை உள்ளமும் , வறியவர்களை அல்லது தன் கீழுள்ளவர்கள் மீதான அன்பும்" . துச்சளை நூற்றுவர் தலைவனிடம் பேசியதை கண்ட போது இதை உணர்ந்தேன் . ராணி மங்கம்மா ஞாபகத்திற்கு வந்தாள் .
......
பிந்துமதியின் காலில் சிக்கிய நூல்சிக்கலும் , அதை அவள் வெண்புழுவாக உணர்ந்த இடமும் மிக முக்கியமான இடம் , அதை இன்னும் தெளிவாக உணர்ந்த பின் உங்களிடம் அதை பகிர்வேன் .