குருதிச்சாரலில் வரும் துரியனின் சித்திரம் முக்கியமானது. கொந்தளிக்கும் அவையிலும், நிகர் நிலை கொண்டவனாக, தெய்வச்சிலை போன்ற நிலையானவனாக, தெய்வங்களுக்கே உரிய முழுமையுடல் கொண்டவனாக. அவன் சித்திரம் முழுமையாவது துச்சளை வாயிலாக. குருதிச்சாரல் 38 ல் துச்சளை கூறுவது போல அவன் தன்னுள் நிறைந்தவன். தன் நிறைவுக்காக யாரையும் நாடாதாவன். அசைவறு மதியன்.
வெண்முரசில் துரியனின் குணச்சித்திரம் இரு எல்லைகள் கொண்டவையாக வந்து கொண்டிருக்கும். அவன் பீமனைக் காணும் வரை இறுகியவனாக, பாறைகளைக் கையால் அடித்து உடைப்பவனாக இருப்பான். பீமனுடன் பழகும் சில காலங்களில் அவன் நெகிழ்ந்தவனாக, அவன் பெருந்தன்மையை தயங்காமல் வெளிப்படுத்துபவனாக இருப்பான். பின்பு புண்பட்டு பீமனுடனும், யாரென்றறியா ஒன்றோடும் வஞ்சமடைந்து ஸ்தூனகர்ணன் முன் தன் மென்மையைத் துறந்த பிறகு நிகர்நிலை கூடிய முழுமையுடல் கொண்டவனாக, ஆழமானவனாக, தன்னுள் நிறைந்தவனாக, பேரழகுடையவனாக இருப்பான். அப்போதும் துச்சளை தான் அவனது இந்த மாற்றத்தைச் சரியாக உணர்ந்திருப்பாள். வாரணவத நிகழ்வுக்குப் பின் மதுவுக்கு அடிமையாக, தன்னிலை அழிந்து வாழும் அவன் மீண்டும் கர்ணனின் வருகைக்குப் பின்னர் தான் மீள்வான். அப்படி மீளும் ஒருவன் இனியன். நெகிழ்வானவன், பெருந்தன்மையே உருவானவன். இன்று அவனுடன் ஒட்டி நின்றிருக்கும் பூரிசிரவஸ் உட்பட பலர் அவனால் அந்த சமயத்தில் தோள் தழுவப்பட்டவர்களே!!
வெய்யோனில் வரும் துரியன் மற்றும் கர்ணனின் சித்திரம் மிக முக்கியமான ஒன்று. அதில் துரியன் மதுவைத் துய்ப்பவனாக இருப்பான். தன் சொற்கள் மீது கட்டுப்பாடு என்பது இல்லாத ஒருவன். பானுமதிக்கு தன்னை முற்றளித்த ஒருவன். வெய்யோன் முழுவதிலுமே அவனது மதுவருந்திய காட்சிகளும், ஏப்பங்களும் மீள மீள வந்து கொண்டே இருக்கும். மாறாக கர்ணன் அவனை நிரப்புபவனாக, அவனது குறைகளைச் சரி செய்பவனாக, மதுவை மன அழுத்தத்தில் மட்டுமே நாடும் ஒருவனாக, மற்ற சமயங்களில் சமநிலை குன்றாதவனாக இருப்பான். பன்னிரு படைக்களத்திற்குப் பிறகு இரண்டுமே தலைகீழ்.
ராஜசூய யாகத்திற்குப் பிறகு, அந்த மயனீர்மாளிகை நிகழ்வுக்குப் பின் துரியன் மீண்டும் ஸ்தூனகர்ணனின் ஆளுகைக்கு உட்படுகிறான். மீண்டும் நிகர்நிலை கொண்ட முழுமையுடலும், பேரழகும், ஆழமும், கார்வையும் நிறைந்த கூற்றுகளைக் கொண்டவனாக மாறுகிறான். முழுமை என்பது அவனது உடல் மட்டுமல்ல, அவனது உள்ளமும் கூடத் தான். அதன் பிறகே அவன் தன் ஆட்சியில் கவனம் செலுத்தத் துவங்கி இருக்கக் கூடும். தான் ஆற்ற வேண்டியவற்றைப் பற்றிய ஒரு தெளிவு அவனுக்கு வந்திருக்கக் கூடும். ஒரு நல்லாட்சியாளனாக அவன் மாறியிருப்பான். அவ்வாறு தான் அவன் நிகழ்ந்திருக்கிறான் என்பதற்கு பாஞ்சாலியின் பெண்ணிழிவு நிகழ்வை அஸ்தினபுரி எதிர்கொண்ட விதமே சான்று.
அதன் மொத்த பொறுப்பையும் அது கர்ணன் மீது சுமத்துகிறது. தங்கள் அரசன் மீது அவர்களுக்கு குறை இல்லை. அந்த நிகழ்வுக்காக அவர்கள் வெட்குகிறார்கள், துயரடைகிறார்கள், வருந்துகிறார்கள். ஆனால் தங்கள் அரசனை அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை. ஆம், அவர்களுக்குள்ளும் இந்திரப்பிரஸ்தம் ஒரு அழுக்காறைத் தூவியிருக்கும் அல்லவா!! குந்தி பிரயாகையில் கேட்கும் “கணவன் கொள்ளையடித்துக் கொண்டு வரும் நகையை வேண்டாம் என்று கூறும் எத்தனை மனைவியரைக் கண்டிருக்கிறாய்?” என்ற கூற்று தான் நினைவுக்கு வருகிறது. காலம் காலமாக அரசாங்கங்கள், மன்னர்கள் அப்படித் தான் இருந்திருக்கிறார்கள். அடுத்த அரசைக் கொள்ளையடித்து தன் நாட்டை வளப்படுத்தவே அவர்கள் முயன்றிருக்கிறார்கள். நமக்கெல்லாம் தெரிந்த உதாரணம் கோரியும், தைமூரும். எனவே தான் நிலத்திற்காக என்றால் அதில் தான் எந்த அறப் பிழையையும் காணவில்லை என கிருஷ்ணன் கூறுகிறான். இருந்தாலும் அதில் நிகழ்ந்த பெண்ணிழிவு என்பது ஆன்றோர் அவையில் நிகழ்த்தப்பட்டது என்ற குறைக்கு யாராவது பொறுப்பேற்றாக வேண்டும் அல்லவா. எனவே அது கர்ணன் மீது ஏற்றப்பட்டது. அவன் மதுவில் மூழ்குகிறான்.
மாறாக துரியன் மிகச் சிறந்த ஆட்சியாளனாக மலர்கிறான். சலிப்பூட்டும் அவை நிகழ்வுகளில் கூட (இவை பெருஞ்சலிப்பைத் தருவதாக வெய்யோனில் கூறுபவன் தான் அவன்) மிகந்த பொறுப்புடன் செயல்படுகிறான். தன்னை வெறுக்கும் மக்களைக் கூட மனதின் ஓரத்தால் கூட வெறுப்பதில்லை அவன். ஒரு கண்டிப்பான தந்தை போல, மிக மிகச் சிறந்த ஆட்சியை அவர்களுக்கு வழங்குகிறான். மொத்தத்தில் கர்ணனும், கிருஷ்ணனும் செயலின்மைக்கு ஆட்பட்டிருந்த காலகட்டத்தில் விழைவொழிந்த, தன்முனைப்பு கூடிய, முன்னுதாரணமான ஷத்ரிய நெறிக்குட்பட்ட ஆட்சியாளனாக, செயல் புரிபவனாக இருக்கிறான் துரியன். செயல் வீரனைப் போல, பேரழகுடைய, நிகர் நிலை கொண்ட மன்னன் இயல்பாகவே மக்களை அவனை நோக்கி ஈர்க்கிறான். அவனது ஒவ்வொரு சொல்லும் அவர்களுக்கு வேத வாக்கே. இங்கே துரியன் ஒரு பெருங்காந்தமாக அவனது குடிகளை ஈர்க்கிறான். அது அவனது இயல்பு தான். இளமையில் தம்பியரை, பிறகு இரு மனைவியரை, கர்ணனை, தோழர்களை அவ்வாறு ஈர்த்தவன் தான் அவன். துச்சளை கூறுவது போல பெருஞ்சிலந்தி அவன். வரலாறு தோறும் அத்தகைய ஈர்ப்புடைய ஆளுமைகள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்களை முன்வைத்தே பெரும்கனவுகளும், பேரழிவுகளும் நிகழ்ந்திருக்கின்றன. இன்று பாரத வர்ஷத்தில் அப்படிப்பட்ட இருவராக கிருஷ்ணனும், துரியனும் வந்து நிற்கின்றனர். விசையுறு பந்து போன்ற உடலும், அசைவறு மதியும் அருளப்பட்டவர்கள். உண்மையில் கிருஷ்ணனும், கணிகரும் தான் நாற்களத்தில் எதிர் நிற்கின்றனர். ஆனால், கணிகர் தன் முகமாக முன்னிறுத்துவது துரியனை.
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்