ஒரு விஷயம், அது உறவு, பதவி, புகழ் அல்லது நாம் விரும்பும் ஒரு பொருள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், நம்மைவிட்டு நம் விருப்பத்துக்கு மாறாக முற்றாக நீங்கிப்போவதை இழப்பு என்கிறோம். அவ்விஷயத்தின்மேல் நாம் கொண்டிருந்த பற்றின் அளவுக்கு ஏற்ப நாம் அந்த இழப்பிற்காக துயரடைகிறோம். இழந்ததிற்கான துயரத்தை நீக்கிக்கொள்ள இழந்த ஒன்றை எப்பாடு பட்டாவது திரும்ப அடைய முயற்சிக்கிறோம். அது சில சமயம் முடியாமல் போகலாம். அப்போது நமது மமகாரம் பாதிக்கப் படுகிறது. நாம் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறோம். இழந்த பொருளின் அருமை அது இருந்த காலத்தை விட அதிகமாகத் தெரிகிறது. அந்த விஷயத்தின் இழப்பு நம் மனதில் சுமையாக மாறி கனத்துக்கொண்டிருக்கிறது. காலம் மட்டுமே இச்சுமையை சிறிது சிறிதாக கரைத்து அகற்றுகிறது. வெண்முரசில் துச்சளை இழப்பின் துயரத்தை நீக்க ஒரு வழி சொல்கிறாள். அது இழந்ததை துறந்துவிடல். அப்போது நம் மனதில் அது கொடுத்துக்கொண்டிருந்த பாரம் அகன்று மனம் இலகுவாகிறது.
அவ்விஷயத்திலிருந்து நமக்கு அப்போது விடுதலை கிடைக்கிறது. உண்மையில் ஒரு விஷயம் அதன் இருப்பினால் அளிக்கும் இன்பத்தைவிட அதன் இல்லாமையில் கிடைக்கும் அகவிடுதலை மேன்மையானது, அதிக ஆனந்தம் அளிப்பது. அப்படி ஒரு விஷயத்தை துறத்தல், பற்றுகளை சுமந்துகொண்டு இப்புவியில் அழுத்தப்பட்டிருக்கும் ஒரு மனிதனை லகுவாக்கி விண்ணோக்கி சற்று உயர்த்துகிறது. துச்சலைக்கு கணவனுடன் இருந்த உறவு இல்லாமல் போய்விடும் இழப்பை ஒரு துறவாக எடுத்துக்கொள்கிறாள். அவள் கூறுகிறாள்.
“அப்படி நோக்கி துயர்கொள்ள வேண்டியதில்லை. அது மிகப் பெரிய விடுதலை. என் உள்ளம் அதன்பின்னரே கனியத் தொடங்கியது.
நாமாக ஒன்றை துறத்தலிலும் நாம் நமது என கொண்டிருந்த ஒன்று நம்மைவிட்டு நீங்குகிறது. ஆனால் இது நம் மனம் ஒப்பி செய்வது. இதில் நாம் துயரடைவதில்லை. அதே நேரத்தில் வெளியில் துறந்தது நம் உள்ளத்தில் இருந்துகொண்டு இருக்கிறது. அதாவது நம் மனம் அதை இன்னும் இழக்காமல் இருக்கிறது. முற்றும் துறந்துவிட்டேன் என்று கூறுபவரிடத்திலும், அது ஒரு அணுவளவு இருந்துகொண்டிருந்து எதிர்பாராத நேரத்தில் மனதில் பேருருகொண்டு எழுகிறது. அதை ஒவ்வொருநாளும் அவர்கள் உள்ளதில் முளைத்தெழும்தோறும் கவனத்துடன் அதை கிள்ளி எறிய வேண்டியிருக்கிறது. அதை வேரோடு பிடுங்கி எறிவது மிகவும் இயலாத ஒன்றாக இருக்கிறது. துறந்த ஒன்றை நாம் இனி பெற இயலாவண்னம் முற்றாக இழந்துவிடுவது நம் துறவை உறுதிப்படுத்தும். இழந்ததை துறந்துவிடுதலும், துறந்தை இழந்துவிடுதலும்தான் மனிதனின் கட்டுக்களை அறுத்து விடுதலை அளிக்க வல்லது.
“இழப்பு எப்படி விடுதலை ஆகும்?” என்றாள் தாரை. “மெய்யாகவே நான் உணர்வது இதுதானடி. எதையுமே விட்டுவிட மானுடனால் இயலாது, இழப்பதே விடுதலைக்கான ஒரே வழி.
இழந்தவையை துறக்க காலம் நமக்கு உதவுகிறது. காலம் நம்மை வாழ்வில் பிடரி பிடித்து தள்ளி ஒடவிடுகையில் இழந்தவையின் துயரம் நீர்த்து முடிவில் இல்லாது போய்விடுகிறது. மனம் அப்போது இயல்பாக அதை முற்றிலும் துறந்துவிடுகிறது.
இழந்தவை எத்தனை விரைவாக நம்மைவிட்டு அகல்கின்றன என்பது விந்தையிலும் விந்தை. ஏனென்றால் நம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொன்றும் இங்கு இப்போது மட்டுமே நீ என்று சொல்லிக்கொண்டிருக்கின்றன. எதிர்காலம் நில்லாதே வா என இழுத்துக்கொண்டிருக்கிறது.”
எடுத்துக்காட்டாக காமத்தைத் துறந்துவிட்டேன் என்று கூறுபவர்களின் உள்ளம் அக் காமத்தை முற்றாக இழந்துவிடாமல் இருக்கிறது. ஏனென்றால் காமம் உடலில் உறைவது. அதை உடலிலிருந்தே விலக்காமல் அதை முழுக்க துறந்துவிட்டேன் என எண்ணுவது தவறாகும். அப்படி நினைத்து அதில் வீழ்ந்துபோனவர்கள் புராணங்களிலும் வரலாறுகளிலும், நிகழ்கால செய்திகளிலும் நிறைந்து இருப்பதைப் பார்க்கிறோம். காமத்தை உடல் இழக்காமால் அதை தன்னுள்ளிருந்து முற்றிலும் துறக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஆனாலும் ஒருவர், காமத்தை முற்றிலும் துறக்க துச்சளை சொல்லும் இந்த உபாயத்தை மேற்கொள்வாரா என்பது ஐயமே.
“காமம் துறக்க தவம்செய்வோர் கொள்ளும் அல்லல்களை நூல்களில் படிக்கையில் ஆழ்ந்த இரக்கமே ஏற்படுகிறது. வெட்டி வீசினால் அது மிக எளிது என அறியாதவர்கள்” என்றாள். தாரை கையால் வாய் பொத்தி சிரித்தாள்.
தண்டபாணி துரைவேல்