Saturday, February 16, 2019

தனிமை2




அன்புள்ள ஜெ

சிலசமயங்களில் வெண்முரசின் சில பகுதிகள் நாவலை விட்டு எழுந்து யாரோ ஒரு புராதனமான சாமியாடி சன்னதம் எழுந்து சொன்னதைப்போல் ஆகிவிடுகின்றன. சில வரிகளை வாழ்க்கை முழுக்க நாம் கொண்டுசெல்லவேண்டியிருக்கிறது. முன்பு படைப்பாளிகளைப்பற்றி அப்படி ஒரு பத்தி வந்தது. வியாசனைப்பற்றி. அது இன்றைக்கும் என் மனதை கொந்தளிக்கச்செய்கிறது. வெண்முரசு வாசிக்காதவர்கள் கூட அதைப்பற்றி பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட பத்திகளில் ஒன்று இன்றைக்குத் தனிமைபற்றி வருவது. இது அசாதாரணமனிதர்களின் தனிமை. ஆனால் சாமானியர்களுக்கும் அந்த மாதிரி மாபெரும் தனிமை உண்டுதான். அதிலும் சிலவரிகள் டிப்ரஷனில் இருப்பவர்களுக்காகவே எழுதப்பட்டவை போலத் தோன்றின.  

அதனூடாக ஐயத்துடன், தயக்கத்துடன் வெளியே எட்டிப்பார்த்துஇங்குளேன்என்கிறார்கள். ‘அங்கெவர்?’ என வினவுகிறார்கள். ‘வருக!’ என கைகாட்டுகிறார்கள். ‘அருகணைக!’ என்று கூவுகிறார்கள். ‘எவர் அங்கே? எங்கிருக்கிறீர்?’ என்று கதறுகிறார்கள். ‘எவரேனும் இருக்கிறீர்களா?’ என்று உளம் விம்முகிறார்கள்.

எவருமில்லை என அறிந்து அகம் கரைந்து விழிநீர் சிந்துகிறார்கள். எவருமில்லையே என வஞ்சம் கொண்டு பற்களைக் கடித்து மீண்டும் தங்களை இறுக்கிக்கொள்கிறார்கள்என்று நீளும் பத்தி ஒரு மந்திரம்போல நான் இன்றைக்கு இருக்கும் நிலையைச் சொல்லியது.

டி. ராமலிங்கம்