அன்புள்ள ஜெயமோகன் சார்,
கார்கடல் 59ம் அதிகாரமே ஒரு நகைமுரணில் தொடங்குகிறது. உயிருடன் இருக்கும்போது ரத்தபந்தங்கள் எல்லாம் போர்க்களத்தில் எதிரும் புதிருமாக ஆயுதங்களோடும், வஞ்சங்களோடும், மனதாலும் தூரமாக இருக்கிறார்கள். ஆனால் அனைத்தும் அவிந்து சடலங்களான பின் "தென்சரிவில் இரண்டு தரப்பினரின் இடுகாடுகளும் அருகருகே இருந்தன. அங்கே புழங்குபவர்களின் கண்களுக்கு மட்டுமே அவை வெவ்வேறாக பிரிக்கப்பட்டிருப்பதை காணமுடிந்தது என்று வெண்முரசு கூறுகிறது. எனது ஊரில் இருந்த புராட்டஸ்டன்ட் சர்ச்சின் காம்பவுண்ட் சுவர்தான் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கும் காம்பவுண்ட் சுவர். சர்ச்சின் ஆல்டரின் நேர் பின்பக்கம் காம்பவுண்ட் சுவரில் சுடலை மாடன் உக்கிரமாய் அரிவாளை ஓங்கியபடி பல்லை கடித்துக்கொண்டு பச்சையும் கருப்பும் கலந்த நிறத்தில் வரையபட்டிருப்பார். சிறுவயதில் இரு மதத்திற்குமான வேறுபாடு பிரமாண்டமாய் தெரியும் போது இது ஆச்சரியமாய் இருக்கும். இவர்கள் அங்கு செல்வதில்லை. அவர்கள் இங்கு வருவதில்லை. கல்லறை தோட்டமும் அருகில்தான். அனைவருமே பங்காளிகள். இப்பவும் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுப்பவர்கள்.,ஆனால் பெயர் மாற்றத்திற்கு பின். என்ன கணக்கோ?
ஆயிரக்கணக்கான சடலங்கள் முகத்தில் துணி சுற்றபட்டு அடுக்கி வைக்கபட்டிருப்பதை நினைக்கவே நெஞ்சு கூசுகிறது. குண்டாசியின் இடத்திற்கு சுஜாதன் வருகிறான். சுடலைகள் எல்லாம் மனம் மரத்தவர்களா? இல்லை மனம் துடிப்பவர்களா? . பூரிசிரவசின் உடல் துணி குவியல்போல் இருப்பதும் அதை அவிழ்க்க சுஜாதான் ஆணையிடுவதும் ஹாரர் படத்தை நெஞ்சு அடைக்க பார்த்துகொண்டிருப்பதுபோல் இருந்தது. ஆனால் அவன் உடல் ஊழ்கத்தில் முத்திரை காட்டி இருக்க அவன் தலை அவன் மடியில் நிறைவுடன் இருப்பது எதற்கு ? என்று இன்னும் தேடிகொண்டிருக்கிறேன். யோகி நிலையில் இருக்கும் ஷத்ரியனாகிய பூரிசிரவசின் உடலை எப்படி எரிப்பது என அனைவரும் குழம்பும் இடம் முக்கியமான ஓன்று. இதை நான் சென்னையில் பல தடவை நேரில் பார்த்திருக்கிறேன். அது மறந்துபோன அல்லது பாதி ஞாபகத்தில் இருக்கும் இன,ஆச்சார குழப்பம். ஆனால் இது உண்மையிலே யாருக்கும் புரியாது. என்ன சடங்கு செய்யவேண்டும் என குண்டாசி இருந்திருந்தால் சரக்கை அடித்துவிட்டு சரியாய் கூறியிருப்பான். அவன் கூறுவதை புறக்கணிக்கவும் முடியாது. பூரிசிரவசின் எரியும் உடல் துள்ளும்போது மனமும் துள்ளியது.
துரியோதனன் யுயுதுஸுவிடம் நலம் விசாரிப்பது எல்லாம் உண்மையிலே அவன் யார்? என்ற எண்ணம் வந்தது. தர்மருக்கும் அவருக்கும் மயிரளவில் தான் வித்தியாசம் இருக்கும் போல,இல்லை என்றால் மூவாயிரமாண்டு வரலாற்றில் நிற்க முடியாது அல்லவா?.துரியோதனன் இரவில் பாண்டவர்கள் போர்தொடுக்க எப்படி தர்மர் அனுமதி கொடுத்தார் என கேட்கிறான்? இதுவும் ஒரு நகை முரண்தான்.தான் போர்க்களத்தில் நிற்ப்பதே எதிரில் நிற்பவரின் அறத்தின் மீது நம்பிக்கை கொண்டு என்னும் நிலை. துரியோதனன் “இழப்பா? இனி என்ன இழப்பு? இனி என்ன எஞ்சுகிறது எனக்கு? சொல், இனி நான் வென்றடைய என்ன உள்ளது? நான் இப்போது போரிடுவது தன்மதிப்புக்காக மட்டுமே. அந்த அங்கநாட்டுக் கோழை தன்மதிப்பையும் இழந்து களத்திலிருந்து திரும்பி வந்திருக்கிறான்… அதை அவனிடம் கேட்காமலிருக்க என்னால் இயலாது.”என கூறும்போது எனக்கும் ஆம், அப்படி கேட்க வேண்டும் என்றே தோன்றியது.ஆனால் அதற்கு என்ன பதிலை கர்ணன் கூறிவிட முடியும்? . நட்புகள் சிதைந்து விடுதலை அடைவதை தவிர,ஜெயமோகன் சார் இந்த சுட்டுகாட்டு அத்தியாயம் என் மனதில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகபெரிது.
ஸ்டீபன்ராஜ்