Wednesday, February 6, 2019

அர்ஜுனனும் கண்ணனும்

ஜெ வணக்கம்



1. அர்ஜூனன் மீண்டெழுதலும் அபிமன்யும் என்ற பல்லின் வாலும்

கார்கடல் - 31

கர்ணனின் முதல் நாள் போரில் அர்ஜூனன் அம்புபட்டு மருந்துநிலையில் உயிர் ஊசலாடியபடி இருக்கிறான். கிருஷ்ணர் அவனிடமே உயிர் வரத்தை பற்றி கேட்கிறார்

//
ஒரு சொல்லில் வாழ்வையோ இறப்பையோ நீ தெரிவுசெய்ய இயலும், சொல்க!” என்றார். தயக்கமில்லாமல் “மீண்டெழவே விரும்புகிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான்.
//

மானுடராய் பிறத்தல், அந்த வாழ்க்கையில் இருக்கும் சுவைகள், வஞ்சங்கள் ஆகியவற்றை ஒரு மலரோடு ஒப்பிடுகிறார் கிருஷ்ணர். அந்த மலரினுள் உட்புகும் வழி எளிது மீள்வது கடினம். அர்ஜூனன் தான் உட்புகுந்து தான் செய்ய வேண்டியவை மிச்சம் இருப்பதால் அந்த மலரில் உட்புகுந்து மீளவே விழைகிறான்

//
இனிய மலர். தெய்வங்கள் அமர்ந்தருளும் நறுமணப்பீடம் கொண்டது. ஆயிரம் பல்லாயிரம் இதழ்களால் சூழப்பட்டது. உள்ளே செல்லும் வழி விரியத் திறந்திருக்கிறது.
...
உள்ளே நுழைவது எளிது. அங்கு நுழைந்துள்ளது இனிய மது. பார்த்தா, உள்நுழைவோரில் பல்லாயிரத்தில், பல லட்சங்களில், பல கோடிகளில் ஒருவரே வெளியேற இயல்கிறது. மீண்டும் உள்நுழைய விழைகிறாயா?” என்றார் இளைய யாதவர்...

...ஆம், இன்னும் சில அம்புகள் எஞ்சியுள்ளன. யாதவனே, உனது அருளிருந்தால் நான் வெளியேறுவேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “சொல்க! நான் வெளியேறும் வழிஎது?...

....அங்கு உனது ஒரு துளியை நீ எஞ்சவிட்டுச் செல்லவேண்டும். பல்லி தன் வாலை அறுத்து உதிர்த்துவிட்டுத் தப்புவதுபோல. அதுவே ஒரே வழி” என்றார். அர்ஜுனன் “ஆம்” என்றான். “உனது மிகச் சிறந்த பகுதியை. நீ மிக விரும்பும் ஒரு பகுதியை” என்றார் இளைய யாதவர். “அது உனக்கு பிறிதொரு இறப்பென்றே ஆகும். அப்பேரிழப்பால் நீ அதை கடந்து செல்ல இயலும்.”.....
//
அர்ஜுனன் இவ்வாறாக வாழ்க்கை எனும் மலரினுள் மீண்டும் நுழைய அபிமன்யு என்ற பல்லியின் வால் பணயமாகிறான்.

2. மைந்தர்களின் கனவு
கார்கடல் 38

இந்த களத்தில் பெரு வீரர்கள் அனைவருக்கும் தாங்கள் எவ்வாறு களம் படபோகிறோம் என்று கனவு வந்துக் கொண்டே இருக்கிறது.

சுருதகீர்த்தி அபிமன்யுவிடம் அவன் பிறந்த பொழுது நடந்த நிகழ்வை கூறுகிறான்

//
இளமையில் உன்னை ஈன்றபோது துணியால் சற்று அழுத்தமாக சுற்றியிருப்பார்கள். அத்தகையோருக்கு வாழ்நாள் முழுக்க எதிலோ சிக்கிக்கொண்டிருப்பது போன்ற கனவுகள் எழும் என்ற கேட்டிருக்கிறேன்
//

சுருதகீர்த்தி அவன் கனவை பற்றி கூறுகிறான்
//“பற்றிஎரிவதுபோல. நான் எங்கோ படுத்திருக்கிறேன். என்னுடைய வலது காலின் நகக்கணு அனல்துளிபோல் மின்னும். நான் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே என்னுடல் பற்றி எரியத்தொடங்கும். மெழுகுபோல உருகி எரிந்து நாற்புறமும் வடிந்து கொண்டிருப்பேன். நூறுமுறை அந்தக் கனவு எனக்கு வந்துள்ளது
//

3. யுதிஷ்டிரர் - இயலாமையின் எதிர் உந்துதல் விசை

கார்கடல் 38

கர்ணன் அவனது இரண்டாம் நாள் போரில் அர்ஜூனனுக்கு உயிர் பிச்சை அளிக்கிறான்.

அர்ஜூனன் மலர் சூழ்கையில் பிடிபட்டு விடுவான் என்று அபிமன்யு கூறுகிறான்.
//
ஆம், அதன் பொருட்டே இப்படை சூழ்கை அமைக்கப்பட்டிருக்கலாம். அவர் உளம் தளர்ந்திருக்கிறார். உளம் தளர்ந்திருப்பவர்கள் தங்களால் இயல்வதற்கு அப்பால் ஒரு பெருஞ்செயலை செய்யும்பொருட்டு துணிந்தெழுவது எங்கும் நிகழ்வதுதான். அச்செயலினூடாக தங்கள் சோர்வை நீக்கி ஆற்றலை திரட்டிக்கொள்ள இயலுமென்று அவர்கள் எண்ணுவார்கள். அரிதாக அது நிகழவும் செய்யும். பெரும்பாலும் அச்செயல் அவர்களை கீழே தள்ளி காலால் மிதித்து கூழாக்கிவிடும்
//

இங்கே அர்ஜூனனுக்காக ஊகிக்க பட்ட சொல் யுதிஷ்டரிடம் செயலாகிறது. கௌரவர் தரப்பில் அரசன் அவர்களின் மாவீரர்களின் ஒருவன். யுதிஷ்ட்ரரோ, தன் தம்பிகள் இல்லாமல் ஒன்றும் செய்ய வல்லவரல்ல. ஏற்கனவே ஒரு முறை துரோணரால் கைது செய்யபட்டு விடுவிக்க பட்டவர். அன்று களத்திலும் போரின் விசையில் துரோணரிடம் கிட்ட தட்ட மாட்டி கொள்கிறார். அபிமன்யுவால் காப்பாற்றபடுகிறார். துரோணரின் படைகளை அபிமன்யு அடித்து நொறுக்க, மலர் சூழ்கையில் நுழைய ஒரு வாய்ப்பு அமைவதாக எண்ணுகிறார். அதனுள் நுழைய தயங்கும் அபிமன்யுவை உட்புக ஆணையிடுகிறார்.

இங்கே தனது வல்லமையின் இயலாமையால் எதிர் திசையில் உந்த படுகிறார். அவர் அறியாத ஒன்றை அவரது ஆளுமைக்கு ஒப்பாத ஒன்றை செய்ய ஆணையிடுகிறார்

கார்கடல் 40

அபிமன்யு களம் பட்டதும் தனது ஆளுமையோடு ஒப்பாத ஒரு செயலை செய்கிறார். காவல் மாடம் மீது ஏறி களத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்கிறார். அவருக்கு உண்மையிலேயே சூழ்கைகளை பற்றி தெரியவில்லை. பாண்டவர்கள் காட்டில் இருக்கும் பொழுது ஹஸ்தினாபுரியில் வாழ்ந்த குழந்தை அபிமன்யு. சூதர்களின் மூலமே அவனை பற்றி அறிந்திருக்கிறார். அவன் மாவீரன். அந்த ஒரு தகுதி போதும் சூழ்கை உடைக்க என்று தனது தகுதிக்கு மீறி ஆணையிட்டு விடுகிறார்.

நமது அலுவலகங்களில் காண கிடைப்பதுதான். தகுதியில்லாதோர் அல்லது ஒரு பதவிக்கு முதிற்சி அடையாதோர் சில கணங்களில் எடுக்கும் முடிவுகளும் / திட்டங்களும் பிரமாண்டமாக இருக்கும், ஆனால் மற்ற அனைவருக்கு தெரிந்திருக்கும் அது ஒரு ப்ராஜக்ட்டை மூழ்க அடிக்க கூடிய பாதை என்று. ஆனால் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அந்த முடிவு அதன் போக்கை சென்ற அடையும்.

யுதிர்ஷடர்க்கு ஏற்பட்டது அப்படி பட்ட ஒரு கணம்.

4. கதை சொல்லி

எனக்கு சரியாக விளக்க தெரியவில்லை, எனது perceptionஐ கூறிவிடுகிறேன்.

பீஷ்மர் இறந்த கணத்தை உரைப்பது author's narration. மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. விவரணைகளும் அழமாக இருந்தன. வீரியமும் செறிந்திருந்தது.

பகதத்தரும், அபிமன்யும் இறக்கும் தருணங்கள் third person narrative ஆக வருகிறது. அரவானும், பார்பரிகனும் இந்த கணங்களில் கதை சொல்லியாக வருகிறார்கள். அந்த கணங்களின் வீரியமும் சுரத்தில்லாமல் இருப்பதாகவே படுகிறது.

ஒரு புனைவின் எழுத்தாளர், சில கடினமான கணங்களை கடக்க இந்த third person narrativeஐ பயன் படுத்திகிறார் என்று போகிற போக்கில் கூறி சென்று விடலாம். அது சரியெனவும் படவில்லை. எனவே எனது ஒரு முடிவு கூடாத வெறும் அவதானிப்பை மட்டும் வைக்கிறேன்.

அன்புடன்

சதீஷ் கணேசன்