Wednesday, February 6, 2019

கிருஷ்ண பத்மம்:


பாரதம் தெரிந்த அனைவருக்குமே கர்ணனுக்கு அடுத்தது மிகவும் பிடித்தது அபிமன்யுவாகத் தான் இருக்கும், இருவருக்கும் பொதுவான அம்சம் என்பது இருவருமே சூழ்நிலைக் கைதிகள் என்பது தான். இருவருமே தங்களின் முடிவு தெரிந்தே அச்செயல்களில் இறங்குகிறார்கள். இருவரின் இழப்பும் பிறரிடம் ஏற்படுத்தும் குற்ற உணர்வே அவர்களை அத்துணை அணுக்கமாக்குகிறது என எண்ணியிருக்கிறேன். அபிமன்யு இளஞ்சிறுவன் என்பதும், அவன் முறைமீறி அத்தனை அதிரதர்களாலும் வதைக்கப்பட்டான் என்பதும் இன்னும் கூடுதல் காரணங்கள்.
மாறாக வெண்முரசின் அபிமன்யுவின் மீது அத்தகைய ஒரு அணுக்கம் எனக்குத் தோன்றவில்லை. வாழ்வை எப்போதுமே எடுத்து எறியும் விடலைச் சிறுவனாகவே அவன் எனக்குத் தோன்றி இருக்கிறான். அவனுடைய செயல்பாடுகள் அவனையும் ஒரு உபபாண்டவனாக அன்றி வேறு எந்த சிறப்புச் சார்புடனும் காணும் படிக்கு அமையவில்லை.  இருப்பினும் திசைதேர் வெள்ளத்தில் போரில் காயம் பட்டும் மருத்துவநிலையில் மரவுரியில்  முழுமையாகத் தளர்ந்து படிந்திருக்கும் உடலில் ஓர் கட்டைவிரல் மட்டும் திமிறி நிற்கும் காட்சி அவனைப் பற்றிய பார்வையை மாற்றியது. அவனுக்குள் எப்போதுமே இருந்து கொண்டிருக்கும் ஒரு படபடப்பை, வெளியேற இயலாத அறைக்குள் மூச்சுத் திணற தத்தளித்து சுவர்களில் முட்டித் திரியும் ஒரு குழந்தையைக் காட்டியது அக்காட்சி. வெளியேறும் வழி என்பது மட்டுமே அவனது தேடலாக இருந்தது. அத்தேடலே அவனை உருவாக்கியது. அதை மறைக்க அணிந்த முகமூடி தான் அவனது விளையாட்டும், நகையாட்டும், விடலைத் தனங்களும். இளவயது அபிமன்யு அடைவதன் மூலம் வெளியேறி விடலாம் என நினைக்கிறான், வயது ஆக ஆக இழப்பதன் வாயிலாக வெளியேற இயலுமோ என ஒவ்வொன்றையும் எற்றி எறிகிறான். இந்த சுழற்சியில் அவனே எதிர்பாராத ஒன்று உத்தரையுடனான திருமணம். அங்கே ஆண்மகனாக அவனது ஆணவம் அடிபடுகிறது. இருந்த கடைசி வாயிலும் மூடப்பட திறவாத உடலுடன்  உயிரையும் இழக்கச் சித்தமானவனாக அவன் குருஷேத்ரத்தில் நுழைகிறான்.
அவனை இத்தகைய ஓர் வெளியேற இயலா வியூகத்தில் தள்ளி விட்டவர் யார்? இதற்கான பதில் அபிமன்யுவைப் பற்றிய ஒரு முக்கியமான தொன்மத்தை வெண்முரசு ஏற்பாடு மறுஆக்கம் செய்திருக்கிறது என்பதைக் காண்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம். பொதுவான நாமறிந்த கதைப்படி அபிமன்யு கருவிலிருக்கையில் அர்ஜுனன் பத்மவியூகத்திற்குள் நுழைவதை பற்றி சுபத்திரையிடம் சொல்லிக்கொண்டிருக்க வெளியேறும் முறை பற்றி பேசத் துவங்குகையில்  கிருஷ்ணன் வந்து அழைத்துச் சென்று விடுவதால் அபிமன்யுவிற்கு பத்ம வியூகத்திற்குள் நுழைய மட்டுமே தெரிகிறது, வெளியேறத் தெரிவதில்லை. மாறாக வெண்முரசு இக்கதையை எங்குமே நேரடியாகச் சொல்லவில்லை. காண்டீபத்தில் சக்கர சூழ்கையாக அமைந்த துவாரகையில் இருந்து வெளியேற எவராலும் இயலாது என அதன் தோரண வாயிலை ஒரு துவந்த யுத்தத்திற்குப் பிறகு கடந்த சுபத்திரை அர்ஜுனனிடம் கூறுகிறாள். அப்போது வீரர்களால் எங்கும் நுழைய மட்டுமே இயலுமென்றும், யோகியாரால் மட்டுமே வெளியேற இயலுமென்றும் சொல்கிறாள். அவள் விழைந்தது அரிஷ்ட நேமியைப் போல் இளைய யாதவனையும் வென்று கடந்து வெளியேறத் தெரிந்த மகாவீரனை. சுபத்திரையும் சரி, அர்ஜுனனும் சரி கிருஷ்ண பத்மத்திற்குள் சிக்கிய வண்டுகளே. அவர்கள் இருவருமே கடந்து போகவே விழைகிறார்கள். ஆம், வெளியேறும் விழைவு என்பது அபிமன்யுவிற்கு அவன் அன்னையால் அளிக்கப்பட்டது, கருவிலேயே, இத்தனைக்கும் அவர்கள் ஒரு சக்கர வியூகத்தில் இருந்து வெளியேறிய பிறகும் கூட.
அர்ஜுனனிடம் அவன் ஆயிரம் இதழ் தாமரையான சகஸ்ராரத்தில் இருந்தும் வெளியேறி விடுதலை அடைய விழைகிறானா என இதே வினா இளைய யாதவரால் வினவப்படுகிறது. அவனும் வெளியேற வேண்டும் என்றே விடையிறுக்கிறான். அங்கே அவன் விட்டுச் சென்றாக எச்சமெனே அவனின் ஒரு பகுதி வேண்டும் என்கிறார் யாதவர். இவ்வாறு அர்ஜுனன் தன் மைந்தனை பதிலியாக வைப்பது கிராதத்திலும் வருகிறது. எமனுலகு ஏகிய ஜாத தேவனின் மைந்தனை மீட்க அவன் தன மைந்தனை பதிலியாக வைக்கிறான். ஒரு வகையில் அர்ஜுனன் இரு இடங்களில் தன இரு மைந்தர்களையுமே பதிலியாக வைத்து தன் அறிதலை அடைகிறான். பிள்ளைத் துயர் கடக்காமல் ஞானமா என்ன? மூவிழியனும் பிள்ளைக்கறி கேட்டவன் தானே!!
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்