கார்கடல் 56 ல் மிக அழகான, நுட்பமான, புன்னகையை வரவழைக்கும் அபாரமான ஒரு வாழ்வியல் தருணம் வந்து சென்றுள்ளது. அர்ஜுனனும், பூரிசிரவஸும் பொருதுகையில் சாத்யகியும், அஸ்வத்தாமனும் அவர்களுக்கிடையே உள்நுழையும் காட்சி. சட்டென்று பார்த்தால் தனது குருவுக்கு இணையாக ஒருவன் போரிடுவதா என்ற சாத்யகியின் கோபமும் (சாந்தீபனி குருநிலையில் பத்ரர் இளைய யாதவருக்கு எதிராகக் கொண்டிருந்தது போன்றது), அர்ஜுனனுக்கு இணையாக ஒரு எளிய மலைமகன் நிற்பதா (அர்ஜுனன் பூரிசிரவஸுடன் பொருதுவதை உவகையுடன் வேறு கொண்டாடுகிறான், அஸ்வத்தாமனிடம் கூட அவன் இவ்வாறு மகிழ்வுடன் பொருதியதில்லை) என்ற துரோணர் மைந்தனின் அசூயையும் தான் காரணம் எனச் சொல்லி விடலாம். ஆயினும் நாவல் இக்கோணத்தை ஒரு சொற்றொடரில் மறுத்து கடந்து செல்கிறது. இதைக் கண்டு கொண்டிருக்கும் திருஷ்டதுய்மன் சாத்யகி, அஸ்வத்தாமன் இருவரையும் பொங்கச் செய்து குறுக்கிட வைத்த உணர்வு ஒன்றே என்கிறான்.
ஆம், அர்ஜுனனும், பூரிசிரவஸும் நிகழ்த்தியது போர் அல்ல. இரு உயிர்கள் ஒன்றை ஒன்று முற்றறிந்து, நிறைவுற்றுக் கொள்ளும் அலகிலா ஆடல்!!! அங்கே வஞ்சம் இல்லை, வெற்றி தோல்வி இல்லை, ஆடலின் உவகையும், நிறைவுமே உள்ளது, அது எந்த ஒரு வீரனும் தன் முற்றெதிரியுடன் அல்லது தன் உள்ளத்தைத் திறந்து உள்நுழைந்து, அனைத்தையும் கொட்டிக் கவிழ்த்து, தன்னை வெறுமையாக்கி நிறைவடையச் செய்யும் ஆருயிர் தோழனுடன் கொள்ள விழையும் நிலை. அர்ஜுனனுடன் அஸ்வத்தாமனும் (அவன் இளம் பருவத்திலிருந்தே) பூரிசிரவஸுடன் சாத்யகியும் அடைய விழைந்த நிலை. எண்ணியிரா வகையில் அர்ஜுனனும், பூரிசிரவஸும் அதை அடைகின்றனர். அது அஸ்வத்தாமனையும், சாத்யகியையும் எரியச் செய்கிறது. உண்மையில் இது ஒரு வகை உடைமை மீறல் (Possessiveness) சார்ந்த உணர்வு வெளிப்பாடே!!! அது பூரிசிரவஸுக்கும் புரிகிறது. எனவே தான் அவன் சாத்யகி அவனை நோக்கிப் பாய்கையில் தத்தளிக்கிறான்!!! மாறாக சாத்யகி பற்றி எறிகிறான். தான் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டதாக உணர்கிறான். எனவே தான் உச்ச வெறியில் ஊழ்கத்தில் அமர்ந்தவனின் தலையைக் கொய்கிறான். நான்காம் நாள் போரில் இறந்த தன் பிள்ளைகளுக்காக பதினான்காம் நாள் பழி வாங்குவதாகச் சொல்கிறான்!!! மானுட மனம் கொள்ளும் வேடங்களுக்கு கணக்கே இல்லை. கதாபாத்திரங்களுடன் மிக நெருங்கிய உறவு இல்லாத ஒரு ஆசிரியரால் அமைத்திருக்க இயலாத ஒரு காட்சி இது.போர்க்களத்தில் முகிழ்த்த அபாரமான ஒரு காட்சி இது!!
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன், காளிபிரசாத்