Friday, February 1, 2019

அன்பும் வெறுப்பும்



ஜெ

தனியாக எழுதி வைக்கவேண்டிய வரி.

அன்பில் வாழ்வோரைவிட வெறுப்பில் வாழ்பவர்களே மிகுதி. வெறுப்பை பெருவெறுப்பாக்கி அதன் நிழலில் அமர்ந்திருப்பது யார்க்கும் எளிது. அன்பை பேரன்பாக்கி வீடுபேறடைவது அருந்தவம்

இவ்வாறான பலவரிகள் வெண்முரசில் வந்துகொண்டேதான் இருக்கின்றன. இந்த வரி போர்க்களத்தில் சொல்லப்படுகிறது. ஏன் வெறுப்பில் வாழ்வது எளிது என்றால் அதற்கு எதிர்ப்பே இல்லாமல் நம் மனசில் அது பெருகும் என்பதனால்தான்

நான் நம்மைச்சூழ உள்ள வாழ்க்கையிலேயே இதைத்தான் அதிகமும் பார்க்கிறேன். பெரும்பாலானவர்கள் சகமனிதர்கள் மீதான வெறுப்பால்தான் வாழ்கிறார்கள். என் அம்மா ஒருமுறை சொன்னார்கள். அவர்கள் சொந்த நாத்தனாரிடம் 40 ஆண்டுகளாக பேசுவதில்லை, சாகிறவரை பேசமாட்டேன் என்று. அந்த உறுதியை ஒரு பெரிய சாதனையாகச் சொன்னார்கள். நூறுமுறையாவது நத்தனார் பேச வந்திருக்கிறாள் நான் பேசவே இல்லை என்றார்கள். நாத்தனார் வாழ்வது எட்டு கிமீ தூரத்தில் இன்னொரு ஊரில்.

நான் கேட்டேன் இதேபோல நல்ல விஷயம் எதையாவது பிடிவாதமாகக் கடைப்பிடித்திருக்கிறாயா என்று. செத்துப்போன அப்பாவுக்காக மாசம் கடைசி வெள்ளி கோயில் போக ஆரம்பித்து ஒரு ஆண்டுகூட தொடர்ச்சியாகப் போக முடியவில்லை. பாஸிட்டிவான விஷயங்களைச் செய்வது தவம். நெகெட்டிவான விஷயங்களை செய்வது எளிது. பாதிபேர் தாங்கள் பிடிவாதமாக அதைசெய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்


சாந்தா நாராயண்