Sunday, February 17, 2019

தந்தையரின் களம்



அன்புநிறை ஜெ,

கடந்து பத்து நாட்களது வெண்முரசை நேற்று வாசித்து முடித்து இன்றைத் தொட்டாயிற்று. ஏற்கனவே விசை கொண்டு நிகழும் போரது உச்சம்  நண்பர்களுக்கென உரக்க வாசிக்கும்போது பேருருவும்  கொண்டு எழுந்து சூழ்கிறது. போர்க்களத்தில் நிற்கிறோம். 

இது தந்தையரின் பெருங்களம். 
வெண்முரசு பல்வேறு கோணங்களில் விரித்துப் பேசியிருக்கும் தந்தை மகனின் ஆடல்கள். இங்கு பிறர் மகனைக் கொன்ற தந்தையர் தங்கள் மகவினை கொன்ற தந்தையரைக் கொல்லத் துடிக்கிறார்கள்.  ஒவ்வொருவரும் இனி இழக்க ஏதுமில்லையெனும் துயரத்தின் கூரை ஆயுதமாய் ஏந்தி தன்னிலும் பலம் வாய்ந்தவர்கள் முன் சில நாழிகைகளேனும் இணை நிற்கிறார்கள். போர் கடும் முனை கொண்டுவிட்ட  தருணங்களில் விதைகளை இழந்து நிற்கும் காடுகள் வெறுமையின் வெப்பம் தாளாது தகிக்கின்றன.

//தந்தையரிடமிருந்து எந்த மைந்தருக்கும் மீட்பில்லை//

மைந்தரின்றி தந்தைக்கும் மீட்பில்லை.  அன்னையர் பெருமூச்சில் சூடேறிய கண்ணீரோடு பழி நிறைவேறக் காத்திருக்கிறார்கள்.  மானுடம் தன் குருதி ஓம்ப பிறர் குருதியுண்ணும் விலங்குமட்டும்தானா?

மிக்க அன்புடன்,
சுபா