Tuesday, February 19, 2019

பார்பாரிகன்அன்புள்ள ஜெயமோகன் சார்,

பார்பாரிகன் என்றால் " BARBARIC "  தன்மை உள்ளவனா?  அவன் ஆதி மனிதன் . காமம், பசி தான்  உடம்புக்கு முதல் உணர்வுகள் என்றாலும் அதை போக்கிக்கொள்ள கால மாற்றத்திற்கு தக்கபடி வழி இருக்கிறது. இருபது முப்பது வருடத்திற்கு முன் பஞ்சத்தினால் சாப்பாடே கம்மி. இன்று சாப்பிட்டுவிட்டு ஜீரண கோளாறினால் பார்க்கில் சுற்றுகிறோம். பத்து வருடத்திற்கு முன் பெண் உடம்பிற்கு இருந்த மதிப்பு இன்று இல்லை. கொஞ்சம் முயன்றால் சுலபமாக கிடைக்கும்.  ஆனால் மனதின் முதல் உணர்வு அன்பும் வஞ்சமும். மனம் என்ற ஓன்று தோன்றியவுடன் குடியேறிய உணர்வுகளாய் இருக்கும் என்று நினைக்கிறேன். அதை நவீன படுத்தி நவீன படுத்தி இருபத்தோராம் நூற்றாண்டுக்கு வந்திருக்கிறோம். ஆனால் அது மாறவே மாறாதது. ஈசல் போன்ற இந்த வாழ்வில் அல்லது யுக யுகமாய் நீளும் இந்த வாழ்வில் இந்த  இந்த இரு உணர்வுகள் மட்டும்தான் மனதுக்குள் சுற்றி வருகிறது. அதன் பல்வேறு வடிவங்களே வேறு வேறு பெயரில் அழைக்கப்படும் குணங்கள். 

கார்கடலின் 55ம் அத்தியாத்தில் திருஷ்டதுய்மன்- துருபதன் உரையாடலையும் , துருபதன் - துரோணர் போரையும் படித்துக்கொண்டு இருக்கும்போதே மனம் உடைந்து  அழுது  இலகுவாகிகொண்டே வந்தது.  எப்படி துருபதன் துரோணரை சந்திக்க பயத்தால் நடுங்கவில்லையோ அதே போல் படிக்கும்போதும் எதற்கு மனம் நடுங்குகின்றது என்றே தெரியவில்லை. இப்படியெல்லாம் வஞ்சம் கொண்டு வாழ்வதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும். அவனே தான் ஆவது. " இந்தக் களத்திற்குப் பின் எனக்கு வாழ்க்கை இல்லை, ஆனால் இந்தத் தருணம் என்னைவிட மிகப் பெரியது என்று உணர்கிறேன். இதன் முன் நான் சிறுதூசுபோல் அதிர்வுகொள்கிறேன்.” என துருபதன் கூறும்போது  வாழ்வது என்றால் இதே போல் தருணங்களில் வாழவேண்டும் என மனம் விம்மியது. வாழ்வுதான் எத்தனை பொருள் உள்ள பிரமாண்டம். த்ருஷ்டதுய்மன்  கூறுவதை எல்லாம் கூறுவதற்கு எனக்கு உங்களை விட்டால் வேறு ஆள் கிடையாது சார். தமிழ்நாட்டில் இப்போது வேறு யாராவது இருக்கிறார்களா? என்பதும் சந்தேகம்தான். எதிரியளவுக்கே நம்மை பெரிதாக்குகின்றன நாம் வணங்கும் தெய்வங்கள். அறத்தின் தெய்வங்கள், வஞ்சத்தின் தெய்வங்கள், சிறுமையின், கீழ்மையின் தெய்வங்கள்”  என்று திருஷ்டதுய்மன் கூறும்போது " யார் எதிரி? என்று தேட மனம் துடித்தது. ஆனால் நான் வஞ்சம் கொண்டு இவன்தான் எதிரி என நினைத்து மூன்றே நாளில் மறக்கும் ஆள். அவ்வளவுதான் எனது மனதின் சக்தி. த்ரிஷ்டதுய்மன் கூறும் " மானுடனை மேம்படுத்தும் எதுவும் அவன் வாழ்வு நிகழும் களத்திற்கு அப்பால்தான் இருக்க முடியும். தொடர்ந்து தன் எல்லைகளைக் கடந்தே அவன் அங்கே சென்றடையமுடியும். வஞ்சம் கொண்டவர்கள் இறந்தகாலத்தின் பிணையில் இருக்கிறார்கள் " என்ற வரிகளை   இன்று முழுதும் நினைத்து கொண்டிருக்கிறேன். துருபதன்- துரோணர் இருவரின் வாழ்வையும் கேள்விக்குள்ளாக்குவது. உண்மையிலே வாழ்வது என்றால் களத்திற்கு வெளியேதான். ஆனால் அந்த களத்திற்கு முன் தூசு நாம் என்று உணரும் தருணங்களில் எல்லாம் மீண்டும் மனம் சுருண்டு கொள்கிறது.ஆனால் அதற்கும் விடை  துருபதனே கூறுகிறார்" ஆம். ஆனால் நான் மாற்றி எண்ண போவதில்லை" என. கர்ணன் -துரியோதனன் நட்பு செஞ்சோற்று கடன், அர்ஜுனன் - கிருஷ்ணர்  நட்பு ஒரு மாதிரி காதல் என்றால் துருபதன்- துரோணர் நட்பு வஞ்சம். அப்படி மகாபாரத்தின் ஒவ்வொருவருக்கும் ஒரு குண சொல்லை வரையறுத்து விடலாம். அனைவரும் வெண்முரசு சொல்வது போல் " ஆடி பிம்பங்கள்" .  அவர்கள் நிற்கும் களம் ஒவ்வொருவரும் தன்னை தூசு என்று என்ன செய்யும் குருஷேத்ரம். அவரவரின் இயல்புக்குதக்கபடி ஆடிபிம்பங்கள்.  இப்போது இன்னும் துலங்குகிறது கார்கடல் 52ம் அத்தியாத்தில்  சாத்யகி தனது மகன்களிடம் கூறும் “இப்புவியில் பிறப்பவரில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கை முழுக்க தேடுவது ஆற்றுவதற்குரிய பணியை, கொள்ளவேண்டிய படைக்கலத்தை, செல்லவேண்டிய திசையை. அவை முன்னரே வகுக்கப்பட்டு இங்கு வருபவர் நல்லூழ் கொண்டவர் என்று உணர்க என்ற இந்த வரிகளின் பொருள். இதுவும் பார்பாரிகன் மூலம் வெண்முரசு கூறுவது தான். ஊழால் பணியோ, படைக்கலமோ , செல்லவேண்டிய திசையோ இல்லாமல் வருபவர்கள் [ அதற்கு முதலில் தன்னை அறியவேண்டும்]  எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் தவமோ யோகமோ செய்து அதை அறிந்து கொள்கிறார்களோ அதுதான் வாழ்வு. 


வண்ணக்கடல் 33ம் அத்தியாயத்தில் கூஷ்மாண்டர் துரோணரிடம் "பிருஷதனின் மைந்தனான யக்ஞசேனன் இளமையிலேயே அகத்திலும் புறத்திலும் ஆற்றலற்றவன் என்று அறியப்பட்டான். ஐந்துகுலத்தவருமே அவனை இழிவாக எண்ணினர்" என கூறுகிறார்.அப்படி இருந்தவர்,துரோணரால் பயிற்றுவிக்கபட்டு ஆற்றல் ஊட்டபட்டு பிறகு  அவற்றினாலேயே அகந்தை அடைந்து துரோணரை அவமதித்து  துரோணரால் தோற்கடிக்கப்பட்டு வஞ்சம் கொண்டு இங்கு வந்து நிற்கிறார்.  ஜெயமோகன் சார் , துரோணரின் முன் துருபதன் அடையும் விஸ்வரூபத்தை பார்க்கும்போது ஏனோ " தர்மரும்- துருபதனும்" பகடை ஆடும் இடம் நினைவுக்கு வந்தது. மீண்டும் கூஷ்மாண்டர் "காம்பில்யத்தில் நடந்த துருபதனின் முடிசூட்டுவிழாவிற்கு அக்னிவேச குருகுலத்தின் தலைவர் இரண்டாம் அக்னிவேசரும் அவரது மாணவர்களும் வந்திருந்தனர். அவர்கள் கங்கையில் படகிறங்கியபோது துருபதனே நேரில் வந்து அக்னிவேசரின் பாதங்களை தன் சென்னியில் சூடினான். அவரை பொன்னாலான ரதத்தில் அமரச்செய்து நகரத்துத் தெருக்கள் வழியாக அணிக்கோலத்தில் அழைத்துச்சென்றான்"  என்று கூறியதை மீண்டும் வாசிக்கும்போது ஒருவன் ஒருவனிடம் வஞ்சம் கொள்ள ஒரு காரணம் மட்டும் போதாதோ? என எண்ணினேன். தன்னிடம் வித்தையை கற்றவன் , "இவன்தான் எனது ஆசிரியன்" என கூறுவதற்கு கூட கூசினால் ஆசிரியனின் மனம் என்ன பாடுபடும்.  இன்னொன்று ஆசிரியன் தனது நிலையை விட்டு இறங்க கூடாதோ என்றும் தோன்றியது.  ஷத்ரிய சோதனை. 


ஸ்டீபன்ராஜ் குலசேகரன்