அன்புள்ள ஜெ,
ஒரு மாதமாக அறையை விட்டு வெளியேறாமல், வீட்டில் மிச்சமிருக்கும் பொருட்களைக் கொண்டு மட்டுமே சமைத்து, மிகக் குறைவான நபர்களோடு மிகக்குறைந்த வார்த்தைகளில் இங்கு தான் இருக்கிறேன் என்பதாக மட்டும் பேசி இருந்து வந்தேன். பலநாட்களுக்குப் பின் ஸிரோவுக்கு மேல் போனதால் பனி உருகத் தொடங்கிய இன்று தான் வீட்டிலிருந்து வெளியே வந்து, மனநல மருத்துவரைப் பார்த்து விட்டு, கல்லூரிப் பேருந்தில் ஏறும் போது மணி 12.30. அதே நிமிடம் வலையேற்றப் பட்ட வெண்முரசு அடங்காப் பெருங்கனலென ஆழத்தில் உறையும் தனிமைத் தெய்வத்தை வாழ்த்தித் தொடங்கியது.
பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்கள் என அனைவரிலிருந்தும் விலகி உள்ளொடுங்கிப் போய், திரும்பிப்பார்த்து, வந்த தொலைவை திகைத்து நின்றுகொண்டிருக்கும் நேரத்தில், அதை நீங்கள் எழுத்தில் கொணர்ந்த அந்த இரக்கமற்ற தனிமைத் தெய்வத்தை நினைக்கவே பயமாக இருக்கிறது. அது நீங்கள் எழுதிய தெய்வம், என்னை விழுங்கிய தெய்வமல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.
இதை உங்களுக்கு ஏன் எழுதுகிறேன் என்று தெரியவில்லை. எனக்கும் அஜிதனுக்கும் ஏறக்குறைய ஒரே வயதிருக்கும். ஒரு தந்தையாக இல்லாமல் ஒரு மானசீக தோழனாக எழுதுகிறேன். செயலின்மை, அரதி, சுயகழிவிரக்கம் எல்லாம் சேர்ந்த கற்பனை உலகில் வருடக்கணக்கில் உழன்று மிகவும் உள்ளொடுங்கி நின்றிருக்கிறேன். ஏதோ ஒரு கயிற்றைப் பிடித்து மேலெழுந்து விட வேண்டும் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொள்கிறேன். உங்கள் எழுத்துக்கள் எனக்கு எவ்வளவு புரிந்தது என்று எனக்கு தெரியாது. குன்றாது செயலூக்கத்தின் ஒளியை தோளுக்கு மேலுயர்த்தி ஓடும் ஒரு வீரனாக உங்களை நான் நன்கறிவேன் என்று தான் நினைக்கிறேன். அதே ஒளியை நானும் பற்றி கொள்ள முயல்கிறேன் ஜெ!
பி
அன்புள்ள பி
இந்தமாதிரிச் சூழல்களில் நாம் நம்மிடம் கேட்டுக்கொள்ளவேண்டியது சில உண்டு
அ. நாம் அந்தத் தனிமையை அல்லது செயலின்மையை ரசிக்கிறோமா? அதிலிருந்து வெளியே வர விரும்பாமல் இருக்கிறோமா? அதை நியாயப்படுத்திக்கொள்கிறோமா?
ஆ. அந்த தனிமையை எவ்வகையிலேனும் செயலாக மாற்றிக்கொள்ள முடியுமா?
செயலாக மாற்றிக்கொள்ள முடிந்தால் தனிமை தீங்கானது அல்ல. அது ஒரு முதலீடுதான்
ஜெ