Sunday, February 17, 2019

கர்ணனின் உலகம்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

கர்ணனின் குண்டலங்களும் கவசமும் என்ன ? என்று யோசிக்கும்போது, கூடவே ஞாபகம் வந்தது உங்களின் சிறுகதை ஒன்றில் ,ஒரு பிராமண தெருவில் வேதம் கற்கும் சிறுவர்களுக்கு "பெரியகாதுகள்" என்ற ஒரு வர்ணனை வரும். அப்போது இது என்ன புதுசா? என எண்ணி ,அனைவரின் காதுகளை கவனிக்க ஆரம்பித்து சில பெரிய காது உள்ளவர்கள் கடுப்பில் பார்ப்பதுவரை சென்று கொண்டிருக்கிறது. காசு இருந்தால் காதுக்கு குண்டலம், கம்மல் எது வேணாலும் மாட்டிக்கொள்ளலாம். ஆனால் பிறக்கும் போதே ஒருவன் குண்டலத்தோடு பிறப்பது என்றால் என்ன? . ஜெயமோகன் சார், முக்கியமாக்  எனக்கு தோன்றிய ஓன்று காதுகொடுத்து கேட்பதுதான் என நினைக்கிறேன். ஏன் என்றால் நாம் யார் என்ன கூறினாலும் அவர்களின் எந்த பிரச்சனையும், சோகமும் எதுவும் நம்மளை ஒன்றுமே செய்வதில்லை காரணம் அவர்கள் கூறுவதை நமது வாழ்க்கையோடு இணைத்து ஓன்று சந்தோஷபட்டுகொள்கிறோம் இல்லை என்றால் ஒதுங்கி போகிறோம். சில சமயங்களில் அவர்கள் கூறுவதை காதிலே போட்டுகொள்வதில்லை. என் என்றால் அவ்ளோ சுயநலம். 

கர்ணனின் முக்கியமான குணங்களில் ஓன்று கர்ணன் எப்போதும் எல்லோருக்கும் காதுகொடுத்து கேட்கிறான். அவர்களின் சொற்கள் அவன் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால் அவன் அவர்களுக்கு தன்னால் முடிந்தவரை நெஞ்சு காண்பிக்க தயாராகிறான்.  பொன் கவசம்.  எழுத்தாளர்களுக்கு தெரியும் போல இந்த உலகில் எவனும் எவன் கூறியதையும் மனத்தால் கேட்க மாட்டார்கள் என்று . ஆதலால் தான் அடுத்தவர்களின்  மன சஞ்சலங்களை, சோகத்தை, அவர்களின் துன்பத்தை கேள் என கூறுகிறார்கள்.  ஆனால் அதை கேட்டால் அடையும் மனசோர்வில் காதே கழண்டு விழுந்துவிடும்போல. இருக்கிறது. ஏன் என்றால் எல்லாரும் சோகத்தைதான் அடுத்தவன் தலையில் கட்ட பார்க்கிறார்கள். சந்தோஷத்தை சரக்கு அடித்து நம் முன் கொண்டாடுகிறார்கள். இப்படி இருந்தால்  ஐந்து ரூபாய் ரப்பர் கம்மல் கூட கிடைக்காதுதான். பிறகு எங்கு பொற்கவசம்? . அடுத்தவர்கள் சொற்களை கேட்பதும், அதற்கு தீர்வு காண தனது உறுதியான நெஞ்சை  காட்டுவதும் தான் பொற்குண்டலங்களும், பொற்கவசங்களும்.  கர்ணன் தனது காதை பொத்திகொண்ட இரு தருணங்கள் வெண்முரசில் முக்கியமானவை. ஓன்று ராதை சூத பெண்ணை கல்யாணம் பண்ணவேண்டும் என் கூறும்போது அவன் மனதில் அவள் உடைக்கிறாள். அவன் அர்பணிப்பு இல்லாமல் அந்த திருமணம் செய்துகொள்கிறான். இரண்டாவது அவனது இன்னொருமனைவி கலிங்க இளவரசி  அவனோடு பேச வரும்போது அவன் காதுகொடுக்கவே இல்லை. 


இப்போது நண்பனுக்காகவும் , அந்த அணியில் உள்ளவர்களுக்காகவும் வரும்போது அவன் உடலே ஒளிர்கிறது. இப்போது குந்தி பாதியும் துரியோதனன் பாதியும் கூறுவதை கேட்டு மங்கி அவமானபடுகிறான். ஆனாலும் அவன் தனது வாழ்வு முழுதுமே அடுத்தவர்களின் குறைகளை கேட்டே நெஞ்சு கொடுத்தவன். அதிலும்  எரிந்து கிழங்கு போல் இருக்கும் நாக குழந்தைக்காய் அழுது வஞ்சினம் உரைத்தவன். அது இருக்கும் வரை ஒளிர்வான்.  

ஸ்டீபன்ராஜ் குலசேகரன்