அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
அத்தியாயம் 49 ஒரு கால்பந்தாட்டத்தின் கடைசி நிமிடங்களின் ஆக்ரோஷமான உச்சகட்ட உணர்வை அளித்தது. முதலில் வெண்முரசு ஆசிரியரையும் பின் இளையயாதவரையும் வணங்கி ஒரு கோனார் நோட்ஸ் எழுதிக்கொண்டேன். உறக்கத்தில் பாதாளம் கொண்டு செல்லப்பட்டு நாகங்களால் காக்கப்படுவதாக கனவு கண்டுகொண்டு களத்திலே இருக்கிறான் ஜயத்ரதன் . அவன் முன்னமே அஸ்வத்தாமன் உரைத்தபடி இடமாற்றம் செய்யப்பட்டவாறே களத்தில் இருக்கிறான். அர்ஜுனன் கூட அவன் வேறெங்கோ கொண்டு செல்லப்பட்டு விட்டதாக கருத நேர்கிறது. தந்தை பிருஹத்காயர் ரத்தவாஹாவில் நாகவேத மந்திரங்களை உச்சரித்து அமர்ந்திருக்கிறார். இளையயாதவர் ஜயத்ரதனின் கனவில் ஊடுருவி அவன் தந்தை எனத்தோன்றி அவன் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே களத்தில் வெளிப்பட்டு தோன்றும்படி செய்துவிடுகிறார். இன்னும் சிறிது நேரம் இன்னும் சிறிது நேரம் என்று எக்கணமும் முடிந்தது என்று கௌரவ வீரர்கள் எதிர்நோக்கி இருக்க ஜயத்ரதனை வெளியேறச் செய்து அவர்களை ஏமாற்றிவிடுகிறார். கார்முகில்கள் அவர் திட்டத்திற்கு துணை அமைகின்றன அல்லாமல் கார்முகில்களால்-இருளால் மட்டுமே அவர்கள் ஏமாந்துவிடவில்லை. ஏதோ பிழை என்று லேசாக புரிந்துகொள்ளும் அஸ்வத்தாமனின் கூச்சல் பெருமுழக்கில் எடுபடாமல் போகிறது. பூரிசிரவஸும் தோற்கிறான். அர்ஜுனனை நிலைகுலைத்து அவன் அந்தரத்தில் தட்டிச் செல்லும் பந்தை கீழேவிழச் செய்யும் பூரிசிரவஸின் முயற்சி தோற்று பந்து சரியாக கோல் சென்று சேர்ந்துவிடுகிறது. முன்னதாக கழுத்தை அறுத்துக்கொள்ள அம்பெடுகிறான் அர்ஜுனன், தான் தோற்றுவிட்டதாகவே எண்ணுகிறான். இளையயாதவனின் திட்டங்களை அறிந்தவன் இளையயாதவன் மட்டுமே. யாவும் அறிந்தவன் அல்லவா அவன்?
கோனார் நோட்ஸ்க்கு பிறகு ஒரு தமிழ் புலனாய்வு பத்திரிக்கை போல "ஜயத்ரதன் மற்றும் அவன் தந்தையின் சாவில் மர்மம். குருக்ஷேத்ர பின்னணியில் யோகி இளைய யாதவின் சதி திட்டங்கள்."
ஜார்ஜ் குருட்ஷிப் தொலைதூரங்கள் பயணம் செய்வாராம். சாதாரணமாக காணும் சில பறவைகளுக்கு கலர் அடித்து அபூர்வ பறவைகள் என்று ஏமாற்றி விற்றுவிடுவாராம். அந்த பணம் அவர் வழி செலவுக்கு என்று படித்த ஞாபகம். ஏசுவும் அற்புதங்கள் செய்தார். கொஞ்சமேனும் ஏமாற்றாத யோகி என எவர் இருந்துள்ளார் புத்தன் உட்பட. வெறும் லௌகீக மடையர்களை வேறு எவ்வாறுதான் கையாள முடியும்? ஆனால் அர்ஜுனனின் அம்புகள் மெய்மைகள் என்று கூறப்படுகின்றன. அத்தனை மெய்மைகளை தன் சீடனுக்கு வழங்கி இருக்கிறான் இளைய யாதவன். எந்த ஒரு உண்மை யோகியும் போலவே அவனும் மனிதருக்கு உச்சபட்ச நன்மையே செய்கிறான். ஜயத்ரதன் மற்றும் பிருஹத்காயரின் நிறைவுற்ற முகங்கள் அதைத் தெரிவிக்கின்றன.
நீச்சல் தெரியாதவர்கள் தரையில் மட்டுமே இருக்க முடியும். தர்க்கம் என்னும் தரை நீங்கி தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட நீர்நிலைகளில் நீந்துவது யோகியான அவனக்கு இயல்வது. நனவின் மீது மட்டுமே கொஞ்சம் கட்டுப்பாடு தமக்குள்ளது என்று கருதும் சாமானியரிடையே போதை, கனவு, நனவு, சாவுக்குள் என இருப்பின் எல்லா நிலைகளின் மீதும் ஆளுமை செலுத்தக் கூடிய பெருங்கருணை ஆயிற்றே இளைய யாதவன்!
அரவான் சொன்னான், ஏகாக்ஷர் சொன்னார், பார்பாரிகன் சொன்னான் என்ற சொற்களை எடுத்து சில மாற்றங்கள் செய்வீர்கள் என்றால் ஏறத்தாழ ஒரு தனித்த சிறுகதை.
அன்புடன்
விக்ரம்
கோவை